கிழக்கு மாகாணம் - 2021.12.25/26
மினுவாங்கொடை நிருபர்-
வட மாகாண உள்ளூராட்சி மன்றத் தலைவர்களுக்கான இரு நாள் வதிவிட பயிற்சிச் செயலமர்வின் முதல் நாள் நிகழ்வு, குக்குலே கங்கை "லயா லெஷர்" கேட்போர் கூட மண்டபத்தில் (18) ஆரம்பமானது.
இலங்கை ஆளுகை நிறுவகம் ஏற்பாட்டில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சின் செயலாளர் டப்ளியூ.எம்.எம்.பி. வீரசேகரவின் தலைமையில், உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலான இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகத்தின் பணிப்பாளர் (பி.நி.அ.) கலாநிதி சுரதிஸ்ஸ திசாநாயக்க வழிகாட்டலில், இந்த இருநாள் வதிவிட செயலமர்வு இடம்பெறுகிறது.
இந்த செயலமர்வில், வட மாகாணத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில், யாழ்ப்பாண நகர பிதா உள்ளிட்ட வட மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் 50 மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
ஐ.நா. அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றிய நிதி உதவித் திட்டத்தின் கீழ், இந்த இருநாள் வதிவிட செயலமர்வு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செயலமர்வின் ஆரம்ப நாள் வரவேற்புரையை, இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவக பணிப்பாளர் கலாநிதி சுரதிஸ்ஸ திசாநாயக்க நிகழ்த்தினார். அமைச்சின் செயலாளர் வீரசேகர, பிரதிநிதி ஆர். பெரேரா ஆகியோர் இங்கு உரையாற்றினர். உள்ளூராட்சி மன்றங்களின் சட்டச் சிக்கல்கள் பற்றிய கலந்துரையாடலை, நிறுவகத்தின் சிரேஷ்ட வளவாளர் காமினி குணசேகர நடத்தினார்.
கொவிட் - 19 தொற்றுப் பரவலுக்குப் பின்னர், உள்ளூராட்சி மன்றங்களின் சவால்களை மேற்கொள்ளல், புதிய வருமான வழி முறைகளை இனங்காணல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகம் (UNDP/CDLG) கருத்திட்டத்தில் அமுல்படுத்திய நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு குறித்தும் இங்கு ஆராயப்பட்டன.
செயலமர்வின் இரண்டாம் நாள் (19), வியாபாரத் திட்டங்களைத் தயார் செய்யும் செயன்முறை நடவடிக்கைகள், வரைவு செய்யப்பட்ட வியாபாரத் திட்டங்களை அந்தந்தக் குழுக்கள் சமர்ப்பித்தல் மற்றும் அவை பற்றி மீளாய்வு செய்தல் உள்ளிட்ட விடயதானங்கள் இடம்பெறவுள்ளன.
இந்த வதிவிட பயிற்சிச் செயலமர்வின் நான்காம் கட்ட அடுத்த செயலமர்வு, எதிர்வரும் 25 ஆம், 26 ஆம் திகதிகளில் கிழக்கு மாகாணத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் இடம்பெறும் என்பதோடு, இதன் முதலாம் செயலமர்வு வடமேல் மாகாணத்திலும், இரண்டாம் செயலமர்வு ஊவா மாகாணத்திலும் சிறப்பாக இடம்பெற்றதாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment