நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு எப்போது?-வேலு குமார்



" நுவரெலியா மாவட்ட பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட்டது, பிரதேச செயலகங்களின் அதிகரிப்பிற்கான அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கடந்தும் பிரதேச செயலக அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படாது உள்ளது ஏன்?"
என பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கேள்வி எழுப்பினார்.

மலையக மக்களின் அரசியல், சமூக உரிமைகள் தொடர்பாக தூர பார்வையுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி செயற்பட்டது. கடந்த நாட்பது ஆண்டுகளுக்கு மேல் அடையப்படாது இருந்த, அரசியல் - அதிகார பகிர்வு, மற்றும் அரச நிர்வாக அதிகார பகிர்வு என்பவற்றை வெற்றிகரமாக அடைந்துகொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. நுவரெலியா மாவட்டத்தில் இருந்த, நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகள் விரிவாக்கப்பட்டது. 2011/2012 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட புள்ளி விபரத்திற்கமைய நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகள் ஒவ்வன்றும் இரண்டு லட்சத்திற்க்கு அதிகமான சனத்தொகையை கொண்டதாக இருந்தது. இலங்கையிலே இருந்த மிக அதிக சனத்தொகையை கொண்ட பிரதேச சபைகளாக இவை காணப்பட்டது. நுவரெலியா பிரதேச சபையை, நுவரெலியா, அக்கரப்பத்தனை மற்றும் கொட்டகளை என மூன்று பிரதேச சபைகளாக மாற்றி அமைத்தோம். அம்பகமுவ பிரதேச சபையை, அம்பகமுவ, மஸ்கெலியா மற்றும் நோவுட் என மூன்று பிரதேச சபைகளாக மாற்றி அமைத்தோம். அதன் மூலம் மலையக மக்களின் நீண்ட கால அபிலாசையான அரசியல் - அதிகார பகிர்வை வெற்றிகரமாக மேற்கொண்டோம்.

நுவரெலியா மாவட்டத்தின் அரச நிர்வாக அதிகார பகிர்வை அதனை தொடர்ந்து முன்னெடுத்தோம். அதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் இருந்த ஐந்து (5) பிரதேச செயலக பிரிவுகளை பத்து (10) பிரதேச செயலக பிரிவுகளாக உயர்த்துவதற்கான அரச வர்த்தமானி 2019 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அம்பகமுவ பிரதேச செயலகத்தை அம்பகமுவ, நோவுட் எனவும், நுவரெலியா பிரதேச செயலகத்தை, நுவரெலியா, தலவாக்கலை எனவும், கொத்மலை பிரதேச செயலகத்தை, கொத்மலை ஈஸ்ட், கொத்மலை வெஸ்ட் எனவும், வலப்பனை பிரதேச செயலகத்தை, நில்தான்டாயேன, வலப்பனை எனவும், அங்குராங்கெத்தை பிரதேச செயலகத்தை, அங்குராங்கெத்தை, மதுரட்ட எனவும் அதிகரிப்பதற்கு முன்மொழிவு செய்யப்பட்டது.

தற்போது, இவ்வரச வர்த்தமானி வெளியிட்டு இரண்டு ஆண்டுகள் கடந்திருக்கின்றது. ஆனால் பிரதேச செயலங்களின் அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்று அரசாங்கத்தில் உள்ள மலையக பிரதிநிதிகளுக்கு இதில் அக்கறை கிடையாது. அரசியல் உரிமை பற்றியும், சமூக உரிமை பற்றியும் அவர்களுக்கு எவ்வித நோக்கமும் கிடையாது. சலுகையை பெறுவதிலேயே முண்டி அடித்துக்கொண்டு செயற்படுகின்றனர். உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு வர்த்தமானியின் படி, பிரதேச செயலகங்கள் அதிகரிப்புக்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மேலும், உள்நாட்டு அலுவல்கள் இரு மொழி பிரதேச செயலங்களின் செயற்பாட்டை மேன்படுத்த வேண்டும். கண்டி மாவட்டத்தில் உள்ள பன்விலை, அக்குறணை, உடபலாத்த, தெல்தோட்டை, பாத்தஹேவாஹெட்ட, தொழுவ மற்றும் பஸ்பாகேகோரல போன்ற பிரதேச செயலகங்களில் இருமொழி செயற்பாடு உள்ளது. ஆனால் அப்பிரதேச செயலக பிரிவில் உள்ள ஏனைய அரச தாபனங்களில் அவ்வசதி இல்லை. குறிப்பாக போலீஸ் நிலையங்களில் தமிழ் மொழி மூலம் முறைப்பாடு செய்யும் வசதி கிடையாது. வைத்தியசாலை மற்றும் ஏனைய அரச சேவை நிலையங்களும் அவ்வாறே. இந்நிலைமைகளை மாற்றி அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். என குறிப்பிட்டார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :