தற்போது நாட்டில் $1.5 Billion மாத்திரமே கையிருப்பில் உள்ளது இதில் மருந்து மற்றும் எரிபொருள் இறக்குமதிக்கு நிதியை ஒதுக்கினால் இம்மாத இறுதியில் $1.1 Billion மாத்திரமே எஞ்சும் அடுத்த வருட இறக்குமதித் தேவையுடன் ஒப்பிடும்போது. அடுத்த வருட முதல் இரு வாரங்களுக்குக் கூட இந்தத் தொகை போதுமானதாக இருக்காது என UNPயின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.
சுபிட்சத்தை இலக்காகக் கொண்டு தற்போதைய அரசாங்கத்திற்கு அதிகாரத்தை வழங்கிய மக்கள் நாளைய தினம் குறித்து நிச்சயமற்ற நிலையில் இன்று உள்ளனர். எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் $5 Billion கிடைக்கப் பெறாவிட்டால் நாட்டை கொண்டு செல்வது மிகக்கடினமாகும் என்றும் ருவன் விஜேவர்த்தன கட்டிக்காட்டினார்.
UNPயின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை UNPயின் செயற்பாட்டாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்:-
சுபீட்சத்தை இலக்காகக்கொண்டு தற்போதைய அரசாங்கத்திற்கு அதிகாரத்தை வழங்கிய மக்கள் தற்போது நாளைய தினம் குறித்து நிச்சயமற்ற நிலையில் உள்ளனர் எப்படி வாழ்வது என்ற எண்ணம் மக்களுக்கு தோன்றியுள்ளது. அரசாங்கத்தை நியமித்த 69 லட்சம் மக்கள் மாத்திரமின்றி, வாக்களிக்காத மக்களும் இந்தப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் திட்டமிடலற்ற வேலைத் திட்டத்தினாலேயே மக்கள் இன்று நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளனர். அரசாங்கத்திடம் பொருளாதார முகாமைத்துவம் குறித்த எவ்வித அறிவும் இல்லை. சகல விடயத்துக்கும் கொரோனாவைக் கூறி அதன் காரணமாகவே பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததாகவும் கூறுகின்றனர். எவ்வாறாயினும் இலங்கையை விட கொரோனாவால் பாரியளவில் பாதிக்கப்பட்ட நாடுகள் கூட பொருளாதாரத்தை சீராக முகாமைத்துவம் செய்துள்ளனர்.
இன்றைய அனைத்து பிரச்சினைக்கும் காரணம் டொலர் இன்மையே ஆகும். தற்போது நாட்டில் $1.5 Billion கையிருப்பில் உள்ளது. இதில் மருந்து மற்றும் எரிபொருள் இறக்குமதிக்காக நிதியை ஒதுக்கினால் இம்மாத இறுதியில் $1.1 Billion மாத்திரமே எஞ்சும். அடுத்த வருட இறக்குமதித் தேவையுடன் ஒப்பிடும்போது, புது வருடத்தின் இரண்டு வாரங்களுக்கு கூட இந்த தொகை போதுமானதாக இருக்காது.
இலங்கையின் வரலாற்றிலே அந்நிய செலாவணி இருப்பு இவ்வாறு வீழ்ச்சியடைந்தமை இதுவே முதல்முறையாகும். எதிர்வரும் 2 மாதங்களுக்குள் $5 Billion கிடைக்கப் பெறாவிட்டால் நாட்டை கொண்டு செல்வது மிகக்கடினமாகும். இது நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் நேரடியாகப் பாதிக்கும். இதன் பிரதி பலன் இன்று மீண்டும் வெளிப்பட ஆரம்பித்துள்ளது. தற்போது மீண்டும் பால்மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ரசாயன உரத்திற்கு தடை விதித்த அரசாங்கம் தற்போது அந்த தடையை நீக்கியுள்ளது. எனினும் இறக்குமதி நிறுவனங்கள் உரத்தை இறக்குமதி செய்யவில்லை. அதற்கான காரணம் டொலர் தட்டுப்பாடு மற்றும் உலகச் சந்தையில் ரசாயன உரத்தின் விலை உயர்வடைந்துள்ளமையாகும். இயற்கை உரம் என்ற கருத்தாக்கத்தால், பயிர்களின் விளைச்சல் பாரியளவில் குறைந்துள்ளது. அதனால் மரக்கறிகளின் விலைகளும் உயர்வடைந்துள்ளன.
உலக சந்தையில் யூரியாவின் விலை உயர்வடைந்துள்ளமையால் அதனை உபயோகித்து நெல் பயிரிடப்பட்டால் அரிசியின் விலை 500 ரூபா வரை அதிகரிக்கும் என்று கடந்த வாரம் விவசாயத் துறை ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும் தற்போது நாட்டில் 25 கிலோ யூரியா 9000 -12,000 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த பெரும்போகத்தின் பின்னர் அரிசியின் விலை பாரியளவில் அதிகரிக்க கூடிய அபாயமுள்ளது. அனைத்து மரக்கறிகளினதும் கிலோ விலை 600 ரூபா வரை உயர்வடைந்துள்ளது. இதேபோன்று கருவாடு உள்ளிட் மீன் உணவு பொருட்களின் விலைகளும் உயர்வடைந்துள்ளன. மக்களால் எவ்வாறு வாழ முடியும்? அமைச்சர்கள் இவற்றை கவனத்தில் கொள்வதில்லை. காரணம் அவர்களுக்கு தேவையான உணவு, நீர் என்பன தங்கு தடையின்றி கிடைக்கின்றன.
UNPயின் ஆட்சியில் மக்கள் மூன்று வேளையும் உணவு உண்ணக் கூடிய சூழல் காணப்பட்டது. பணம் காணப்பட்டது. எமது ஆட்சியில் மூன்று வேளையும் உண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்த மக்கள் அந்த வாழ்க்கையை விடவும் சுபிட்சமான வாழ்க்கையை எதிர்பார்த்து இன்று நெருக்கடியை எதிர் கொண்டுள்ளனர். நாம் ராஜபக்சக்களின் கடனை செலுத்தி, மக்களுக்கு வருமானம் வரக்கூடிய சூழலை ஏற்படுத்தினோம்.
எனவே தற்போதைய அரசாங்கம் செலுத்திக் கொண்டிருப்பது நாம் பெற்ற கடனை அல்ல. ராஜபக்ச அரசாங்கம் பெற்ற கடனே ஆகும். டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு UNPயின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்திய போதிலும், அரசாங்கம் அதனை கவனத்தில் கொள்ளாமைக்கான காரணம் என்ன? சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெறும் கடனில் மோசடி செய்ய முடியாது.
மக்கள் இன்று நாட்டை கைவிட்டுச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாட்டை விட்டு செல்ல முடியாதவர்கள் உண்ண உணவின்றி வாழ்கின்றனர். UNPயால் மாத்திரமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்பது வரலாற்று செயற்பாடுகள் ஊடாக தெளிவாகிறது. ரணில் விக்கிரமசிங்க நாட்டை பொறுப்பேற்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொருளாதாரம் மேம்பட்டது. எனினும் ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியே அடைந்துள்ளது.
சர்வதேச தொடர்புகள் கொண்ட ஒருவரிடம் ஆட்சியை ஒப்படைத்தால் மாத்திரமே நாட்டில் தற்போதுள்ள டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண முடியும். அந்த இயலுமை உள்ள ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே வேறு எவருக்கும் அந்த வாய்ப்பு இல்லை. ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆட்சியை கையளித்தால் நாடு அபிவிருத்தியடையும். இந்த நிலைப்பாட்டை கிராம மட்டத்திலுள்ள மக்கள் மத்தியில் நாம் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
0 comments :
Post a Comment