இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பெண் சுய தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டுவதன் மூலம் பொருளாதார ரீதியாக அவர்களின் சுயதொழில் முயற்சிகளை ஊக்கிவித்து மேலும் வலுவூட்டி நிலைபேறான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அமைப்பின் பிரதேச அமைப்பாளர் எஸ்.டி. நஜீமியாவின் ஏற்பாட்டில் பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் எஸ்.றிம்ஸியா ஜஹானின் தலைமையில் இறக்காமம் பிரதேச சபை பிரதான மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
கிராம மட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அமைப்பினால் "விருப்பமுள்ள கழகம்" களை அமைத்து சுயதொழிலில் ஈடுபடும் பெண் முயற்சியாளர்களுக்குத் தேவையான இயலுமை விருத்தி பயிற்சிகள் இவ்வேலைத்திட்டத்தினூடாக வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்விற்கு பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளரும், பொருளாதார அபிவிருத்தி ஆலோசகருமான சுபாஜினி, நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் எஸ்.கமலவாணி ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான தெளிவூட்டல்களை வழங்கிவைத்தனர். அத்துடன் சிறுகைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.எச். ஹஸ்பி, ஏ.எல்.எம்.இஸ்ரத் அலி,முயற்சியாண்மை பயிற்சி உத்தியோகத்தர் திருமதி ஏ.எல். ஹபீபா ஆகியோர் கலந்துகொண்டு தொழில்முனைவோருக்கு தேவையான ஆலோசனைகள், வழிகாட்டல்களையும் வழங்கிவைத்தனர்.
பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவு உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப் சுயதொழில் விருத்தியில் சுய உளப்பாங்கு மாற்றத்தின் அவசியம் பற்றி கருத்துரைத்தார். நிகழ்வின் முடிவில் உளவளத் துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீபின் ஏற்பாட்டில் இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.ஜமீல் காரியப்பர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அமைப்பின் பிரதிநிகளுக்கும் இடையில் இவ் வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு உள்ளூர் மட்ட தலைவர்களின் வகிபாகம் பற்றிய கலந்துரையாலும் இடம்பெற்றது.
0 comments :
Post a Comment