அரசாங்க எம்.பி.க்களின் வெளிநாட்டு சுற்றுலாப் பயணத்துக்கு எங்கிருந்து டொலர் கிடைக்கிறது? ராஜித சேனாரத்ன



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
ருந்துப் பொருட்களையோ, அத்தியாவசிய பொருட்களையோ இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லை எனக் கூறும் அரசாங்கம், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 'கழிவு' உரத்துக்காக $6.7 Millionயை ( சுமார் 154 கோடி ரூபா ) செலுத்துவதற்கு ஒப்புக் கொண்டிருக்கின்றது. அதுமாத்திரமன்றி சுமார் 60 பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலாப்பயணம் செல்வதற்குத் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களுக்கு மாத்திரம் டொலர் எங்கிருந்து வருகின்றது என்று களுத்துறை மாவட்ட , ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கேள்வியெழுப்பியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையில்:-

நாடு தற்போது முகங் கொடுத்திருக்கக்கூடிய மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு கொரோனாவே காரணம் என்று ஆளுந்தரப்பினர் கூறுகின்றார்கள். கொரோனா பரவல் ஏற்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி சுமார் 12% வீழ்ச்சியடைந்தது.
எமது நாட்டைப் பொறுத்தவரையில், $7.2 Billion காணப்பட்ட வெளிநாட்டு இருப்பு தற்போது $1 Billionனாக வீழ்ச்சியடைந்திருக்கின்றது. அதனை ஈடுசெய்வதற்காக ஏற்கனவே நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருக்கக்கூடிய அபிவிருத்தி திட்டங்களை இடைநிறுத்துதல், அரச வேலைவாய்ப்புக்கு புதியவர்களை ஆட்சேர்ப்பு செய்வதை நிறுத்துதல் உள்ளடங்கலாக அரசாங்கம் வேறு பல வழிமுறைகளை கையாள்கின்றது. குறிப்பாக ஜனவரி மாதம் 18ம் திகதிக்கு முன்னதாக $500 Million கடன் செலுத்த வேண்டிய நிலையில், அதற்கான நிதியைத் திரட்டிக்கொள்வதற்காக பரஸ்பர பரிமாற்றல் வசதியின்கீழ் இந்தியாவிடமிருந்து நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையும் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான பின்னணியில் தற்போதைய நாட்டின் நெருக்கடியை எதிர் கொள்வதற்காக நாட்டிலுள்ள மிகவும் பெறுமதிமிக்க 50 இடங்களை வெளிநாடுகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்வதற்கு தேவையான தயார்ப்படுத்தல்களை அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது. அதன் ஓரங்கமாக $6 Billionயை பெறும் நோக்கில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றன. இவ்வாறு விற்பனை செய்யப்படவுள்ள இடங்களில் D.R விஜேவர்தன மாவத்தையிலுள்ள விமானப்படைக்குச் சொந்தமான இடம், நாரேஹேன்பிட்டி, ஒருகொடவத்த, தும்முல்ல உள்ளிட்ட சில பகுதிகளிலுள்ள இடங்கள். மக்கள் வங்கிக்குச் சொந்தமான இடம், சதொச களஞ்சியசாலையின் இடம், வெளிவிவகார அமைச்சு கட்டிடம், கிரான்ட் ஓரியெண்டல் ஹோட்டல், கபூர் கட்டிடம், ஹில்டன் ஹோட்டல் ஆகியவையும் உள்ளடங்குகின்றன. அதுமாத்திரமன்றி காலி, மாத்தறை, கண்டி, குருணாகல, யாழ்ப்பாணம் உள்ளடங்கலாக நாட்டின் பல்வேறு மாவட்டத்திலும் உள்ள பெறுமதிமிக்க இடங்களும் சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா, மலேசியா. சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளுக்கும் இலங்கையைச் சேர்ந்த சில நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.

நாட்டில் ஏற்கனவே சுமார் 52 வகையான மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், தற்போது நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. மேற்படி 52 வகையான மருந்துகளில் உயிர்க்காப்பு மருந்து உள்ளிட்ட 32 வகையான அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் உள்ளடங்குகின்றன. நாட்டின் இன்றைய நிலவரம் இவ்வாறிருக்கையில் சுமார் 60 பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள தயாராகி வருவதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களுக்கு மாத்திரம் டொலர் எங்கிருந்து வருகின்றது?

அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு டொலர் வழங்குவதற்கென ஏதேனும் விசேட வங்கிகள் இருக்கின்றனவா? அதேபோன்று மக்களுக்கு அத்தியாவசியமான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு டொலர் இல்லை என்று கூறுகின்ற அரசாங்கம், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, ஆனால் நாம் ஏற்றுக்கொள்ளாத 'கழிவு' உரத்துக்காக $6.7 Million செலுத்துவதற்கு ஒப்புக் கொண்டிருக்கின்றது. உண்மையில் அந்த உரத்துக்கான கொள்வனவுக் கோரிக்கையை முன்வைத்த அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சஷிந்திர ராஜபக்ச ஆகியோரிடமிருந்து தான் அதற்கான நிதியை அறவிடப்பட வேண்டும் என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :