இலங்கை வந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், முன்னாள் இந்திய லோக் சபா(பாராளுமன்ற) உறுப்பினருமான கே.எம்.காதர் மொகிதீன் இவ்வாறு கூறினார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் ஏற்பாட்டில்,பத்தரமுல்லை "மோட்டர்ஸ் எட்ஜ்" ஹோட்டலில், செவ்வாய் கிழமை (7)இடம்பெற்ற சிறுபான்மைச் சமூகங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான இராப்போசன விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போது, மூத்த இந்திய அரசியல்வாதிகளில் ஒருவரான பேராசிரியர் காதர் மொகிதீன் மேலும் தெரிவித்தாவது,
இலங்கை தீவின் முக்கியமான அரசியல் பிரமுகர்கள் இங்கு வருகை தந்திருக்கின்றனர். இதனை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. கற்பனைக்கு அப்பாற்பட்ட விடயமாக உள்ளது. அமெரிக்க பல்கலைக்கழகமொன்றின் சார்பில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காகவே இங்கு வந்தோம். வந்த இடத்தில் முக்கிய தலைவர்கள் பலரைச் சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஏற்பாடு செய்த இந்தச் சந்திப்பிலும் விருந்துப்பசாரத்திலும் கலந்து கொள்வதிலும் மகிழ்ச்சியடைகின்றேன்.
தமிழகத்தைப் பொறுத்தவரை இலங்கை அழகான தீவு. எல்லா வகையிலும் முன்மாதிரியாக திகழக் கூடிய ஒரு நாடு. ஒரு சிறிய நாடாக இருந்தபோதிலும், இங்கு வாழக்கூடிய எல்லா மக்களும் அண்ணன் தம்பிகளாக இருக்க வேண்டும். அந்த உணர்வை அதிகமாக மக்களுக்கு பரப்ப வேண்டும். அதில் எங்களுக்கு நிறைய நம்பிக்கையுள்ளது. இஸ்லாமிய மார்க்கத்தை சேர்ந்த எங்களாலும் , ஏனைய மதங்களை சேர்ந்தவர்களாலும் இந்த இலங்கைப் பூமிக்கு தனி அந்தஸ்து கொடுக்கப்படுகின்றது. இந்த பூமியில் இருந்து தான் முதல் மனிதன் தோன்றினான் எனவும் கூறப் படுகின்றது. அது எல்லா மதங்களிலும் சொல்லப்பட்ட அடிப்படையான கருத்துமாகும். இத்தகைய சிறப்பு மிக்க இந்த பூமியில் இருந்து வரக்கூடிய ஒவ்வொரு விடயமும் மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் இப்பொழுது சாதி, மதம் மற்றும் ஏழை, பணக்காரன் பேதமின்றி, முதல்வர் மு. க. ஸ்டாலினின் நல்லாட்சியில் வாழ்கின்றோம். எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் சகல விதமான நன்மைகளையும் தேவைகளையும் செய்வதற்கு உறுதி பூண்டிருக்கின்ற ஒரு முதலமைச்சரை நாங்கள் பெற்றிருக்கின்றோம். அது நாங்கள் பெற்ற பாக்கியமாகும்.
இந்தியாவுடைய சக்தியை மேம்படுத்துவதிலும், வளர்ப்பதிலும், அபிவிருத்தியிலும் அதனுடைய ஆற்றலை உலகத்திற்கு தெரிவிப்பதிலும் எங்கள் நாட்டின் நிர்வாகிகள் மிகவும் சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எங்களது மத்திய அரசு செய்யக்கூடிய பல்வேறு திட்டங்கள் வரவேற்கத்தக்கவை
குறிப்பாக, இப்போதுள்ள கொவிட்- 19 சூழலில் 132 கோடி மக்கள் வாழ்கின்ற இந்தியாவில் 120கோடி மக்களுக்கு மேல் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று கொரோனாவை எதிர் கொண்டு வருகின்றார்கள். நான்கு மாதங்களுக்கு முன்னாள் இருந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை இப்போது வெகுவாக குறைந்துள்ளது. இது மிகவும் பாராட்டத்தக்கது.
இந்த நாட்டில் முழுமையாக தடுப்பூசி வழங்கப்படவில்லை என்ற குறைபாட்டிற்கு ,இதர நாடுகளும் முன் வந்து உதவி செய்ய வேண்டும். இது இந்தியாவுடைய சகோதர நாடாகும். இந்த நாடு நன்கு அபிவிருத்தியடைத்து மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று கருத வேண்டியது நம் நாட்டின் கடமையாகும்.
எமது முன்னாள் பிரதமர் வாஜ் பாய் "அடிக்கடி உலகத்தில் நண்பர்களும் எதிரிகளும் வந்து போவார்கள் ஆனால் அண்டை நாடு என்பது மாறவேமாட்டது" என்றார். அண்டை நாடுகளில் உள்ளவர்களுக்கு இந்தியா எப்பொழுதும் அனுசரணையாக இருந்து உதவிக்கரம் நீட்டி வருகிறது. அந்த அடிப்படையில் இந்த நாட்டில் பல்வேறு திட்டங்களை இந்திய அரசு மிக சிறப்பாகச் செய்துள்ளது.
மத்திய அரசாங்கத்தோடு எங்களுக்கு கொள்கையில் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன.அது வேறு.
தொற்று நோய் பரவிவரும் இந்த நேரத்தில் எல்லா விதமான உதவிகளையும் செய்வதற்கு உரிய முறையில் எமது பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பணிவாக வேண்டிக்கொள்கின்றேன். இங்கு வாழ்கின்ற மக்கள் நன்றாகவும் சுமூகமாகவும் முன்னேற்றமாகவும் இருக்கிறார்கள் என்றால், அது தமிழ் நாட்டிலுள்ள எங்களுக்கு பெருமையாகும். இங்கு வாழக்கூடிய அனைவரும் ஒற்றுமையாக சகோதரர்களாக வாழ வேண்டும். நாம் எல்லாம் ஒரு இன மக்கள் அதாவது மனித இனத்தை சேர்த்தவர்கள் என்ற உணர்வில் எங்களை போன்றவர்கள் தொடர்ந்தும் செயற்பட்டுகொண்டிருக்கிறோம்.
எந்தவொரு விடயத்தையும் மனிதாபிமானதோடு நோக்க வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம். மனிதர்களிடயே சர்ச்சைகளை ஏற்படுத்தாது மனிதாபிமானதோடு இந்தியா முழுவதிலும் செய்து கொண்டிருக்கிறோம். எமது கட்சி சற்று பலமான கட்சியாகும். அனைத்து மக்களும் அன்னியோன்யமாக விட்டுக்கொடுப்புடன் நடந்துகொள்ள வேண்டுமே தவிர, மதத்தையோ மொழியையோ வைத்து மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தக்கூடாது என்றார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே.ஜேகப்பும் இதில் கலந்து கொண்டார்.
0 comments :
Post a Comment