சமஷ்டி
————
முன்னைய வரைபிலும் புதிய வரைபிலும் சமஷ்டி இருக்கிறது.
சமஷ்டி என்றால் என்ன?
———————————-
இது மிகவும் ஆழமான விடயம். மிகச் சுருக்கமாக கூறுவதாயின்,
வழங்கப்பட்ட அதிகார எல்லைக்குள் மத்தியும் மாகாணமும் கிட்டத்தட்ட தனிநாடு மாதிரி. மத்திய அரசின் அதிகாரத்தில் மாகாண அரசு தலையிட முடியாது. மாகாண அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது.
எங்களது பிரச்சினை
——————————-
இன்று இருப்பது ஒற்றையாட்சி. மத்திய அரசில் ஒவ்வொரு தேர்தலிலும் நமக்கு சுமார் 20 பா உ க்கள் கிடைக்கிறார்கள். அதேபோன்று நான்கைந்து கபினட் அமைச்சர்கள் கிடைக்கிறார்கள். ( இம்முறை மட்டும் சற்று வித்தியாசம்). அதாவது மத்தியில் நமக்கு ஓரளவு பலம் இருக்கிறது. அப்படி இருந்தும் நமக்கு எத்தனையோ பிரச்சினை. இனவாத செயற்பாடுகள். அவற்றைத் தீர்த்துக்கொள்ளமுடியாமல் தவிக்கின்றோம். சோரம்போய்க்கூட எதையும் சாதிக்கமுடியவில்லை.
இந்நிலையில், இந்நாட்டில் எட்டு மாகாணங்களில் நாம் மிகவும் சிறுபான்மை. கிழக்கிலும் நாம் பெரும்பான்மையல்ல. ஆனாலும் சிறுபான்மையுமல்ல. கிழக்கை தற்காலிகமாக ஒரு புறம் வைத்துவிட்டு, ஏனைய எட்டு மாகாணங்களையும் எடுத்துக்கொண்டால், சில மாகாணங்களில் ஒரு மாகாணசபை உறுப்பினரைக்கூட பெற முடியாது. உ+ம், தெற்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்கள்.
இந்நிலையில் மத்திய அரசும் தலையிடமுடியாத, கிட்டத்தட்ட தனிநாடுபோன்று செயற்படக்கூடிய சமஷ்டி முறையின்கீழ் பொலீஸ், காணி அதிகாரம் உட்பட முக்கிய அதிகாரங்களையும் மாகாணங்களுக்கு வழங்கினால் அம்முஸ்லிம்களின் நிலையென்ன? தமக்கு வாக்களிக்கின்ற கண்டி மாவட்ட சிறுபான்மை முஸ்லிம்களின் நிலை என்ன? என்றுகூட சித்திக்கமுடியாத தலைமைத்துவங்களாக இவர்கள் இருந்தால் என்ன செய்வது?
தமிழர்கள் தனிநாட்டுக் கோரிகையை கைவிட்டு, அதற்குப்பதிலாக எதற்காக சமஷ்டி கேட்கிறார்கள். ஏனென்றால் சமஷ்டி என்பது, வெளிநாடுகளுடன் ஒரு தனிநாடுபோன்று செயற்பட முடியாதபோதும் உள்நாட்டைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட தனிநாடுதான். மத்திய அரசின் தலையீடு இருக்கக்கூடாது; என்பதற்காகத்தான் சமஷ்டி கேட்கிறார்கள்.
சமஷ்டி என்பது எவ்வளவு பலமானது; என்பது அவர்கள் அதனை அழுத்திக் கேட்பதிலேயே புரியவில்லையா?
ஒரு மத்திய அரசாங்கத்தின்கீழேய நாங்கள் படிப்படியாக உரிமைகளை இழந்து வருகின்றோம். பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். சமஷ்டியை வழங்கிவிட்டு மேலும் எட்டு அரசாங்கங்களினால் பிரச்சினைகளைச் சந்திக்கப்போகிறோமா? இந்த சமஷ்டியைத் தாருங்கள்; என்று நாமும் கையொப்பம் வைக்கப்போகின்றோமா?
கிழக்கை எடுத்துக்கொண்டால் முஸ்லிம்கள் தனித்து ஆட்சியைக்கமுடியுமா? ஒன்றில் தமிழர்களும் முஸ்லிம்களும், அல்லது முஸ்லிம்களும் சிங்களவர்களும் அல்லது தமிழர்களும் சிங்களவர்களும்.
மூன்றாவது நிகழ்ந்தால் நிலைமை என்ன? தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து ஓர் முஸ்லிம் முதலமைச்சரை நியமித்தும் ஒரு வீதிக்கு ( கடற்கரைப்பள்ளி வீதி) பெயர் மாற்றம் செய்யமுடியாமல் போனவர்கள்தானே நாம். காரணம் தமிழ்த்தரப்பு விரும்பவில்லை. சரி அதுவெல்லாம் போகட்டும்.
உடன்பாடு ஏற்பட்டிருக்கிறதா?
———————————————
தமிழ்த்தரப்பு இணைந்த வட கிழக்கைக் கோருகிறது. முஸ்லிம்கள் அதற்கு உடன்பாடில்லை. தமிழ், முஸ்லிம் கட்சிகள் இதுவரை கூடிப்பேசி, வட கிழக்குப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களின் பங்கு தொடர்பாக ஓர் உடன்பாட்டிற்கு வரமுடிந்ததா?
கடந்த 35 வருடங்களாக ( முஸ்லிம் கட்சி தோற்றம் பெற்று சுமார் 35 வருடம்) மறைந்த தலைவராலோ, இன்றிருக்கின்ற தலைவர்களாலோ, தமிழ்த்தலைவர்களுடன் ஒரு உடன்பாட்டிற்கு வரமுடியவில்லை. இன்னும் முரண்பாட்டு நிலையே இருக்கிறது. இந்நிலையில் எந்தவகையில் இணைந்து அதிகாரப்பகிர்வுக்காக கோரிக்கை விடுக்கிறீர்கள்.
புதிய வரைபில் தமிழ்பேசும் தேசியங்கள் 1948ம் ஆண்டிலிருந்து அதிகாரப்பகிர்வைக் கேட்கிறார்கள்; என்று இருக்கின்றது. அவ்வாறாயின் T B Jaya, A M A Azeez. Dr Bathiudeen Mahmood, DR M C M Kaleel போன்றவர்களெல்லாம் அதிகாரப்பகிர்வு கேட்டார்களா? இலங்கை- இந்திய ஒப்பந்தத்திலேயே முஸ்லிம்கள் கண்டுகொள்ளப்படாத தமிழர் போராட்டத்தை, எவ்வாறு தமிழ்-முஸ்லிம் போராட்டமாக சித்தரிக்கப் பார்க்கிறார்கள்.
தென்கிழக்கில் கரையோர மாவட்டம்பெற தமிழ்த்தரப்பு எதிர்ப்பு.
அம்பாறையில் ஓர் முஸ்லிம் அரசாங்க அதிபரை நியமிக்க தமிழ்த்தரப்பு எதிர்ப்பு.
கிழக்கு மாகாணசபைக்கு ஒரு முஸ்லிம் ஆளுனரை நியமிக்க தமிழ்த்தரப்பு எதிர்ப்பு.
தமிழருக்கு யாழ்ப்பாணம்போல் இலங்கை முஸ்லிம்களின் மானசீகத் தலைநகராகப்போற்றும் கல்முனையை கல்முனையாக விட்டுவைக்க தமிழ்த்தரப்பு எதிர்ப்பு. அதனைத் துண்டாடவேண்டும்.
கடற்கரைப்பள்ளி வீதியை பதிவுசெய்ய தமிழ்த்தரப்பு எதிர்ப்பு.
கோரளைப்பற்று மத்தி கிராம சேவகர் பிரிவுகள் சில எங்கேயோ இருக்கின்ற வாகரையுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. அந்த அநியாயத்திற்கு தீர்வுகாண தமிழ்த்தரப்பு எதிர்ப்பு.
இவ்வாறு எழுதிக்கொண்டே போகலாம்.
இதில் எந்தவொரு பிரச்சினையைக்கூட தமிழ்த்தரப்புடன் பேசித்தீர்க்கமுடியாத முஸ்லிம் தலைமைத்தும்
அதிகாரப்பகிர்வில் முஸ்லிம்களின் பங்கு தொடர்பாக தமிழ்த்தரப்பு எந்தவொரு உடன்பாட்டிற்கும் வராத நிலையிலும் தமிழ்த்ரப்பின் அதிகாரப்பகிர்வு அபிலாசையை, தமிழ்முஸ்லிம்களின் அபிலாசையாக காட்டி கையொப்பம் வைக்க முயல்வதேன்? பின்னணி என்ன? என்ற கேள்வியில் என்ன தவறு இருக்கிறது?
முஸ்லிம்கள் ஒருபோதும் அதிகாரப்பகிர்வு கேட்கமுடியாது.
——————————————————————
முஸ்லிம் தலைமைகளும் மக்களும் புரிந்துகொள்ளவேண்டிய விடயம் என்னவென்றால் முஸ்லிம்கள் ஒருபோதும் அதிகாரப்பகிர்வு கேட்கமுடியாது. முஸ்லிம்களுக்கு நிறையப் பிரச்சினைகள் இருக்கின்றன. அதற்கு அரசியலமைப்பினூடாக வேறுதீர்வுகளைத்தான் தேடவேண்டும்.
ஏன் அதிகாரப்பகிர்வு கேட்கமுடியாது?
——————————————————-
அதிகாரப்பகிர்வு கோருவதென்றால் அந்த அதிகாரத்தை செயற்படுத்த நிலப்பிராந்தியம் வேண்டும். சிங்களவர்களுக்கு ஏழு நிலப்பிராந்தியங்கள் ( மாகாணங்கள்) இருக்கின்றன. தமிழருக்கு ஒரு நிலப்பிராந்தியம் இருக்கிறது( வடக்கு). ஏன் தமிழர்கள் வடக்கு கிழக்கு இணைப்பைக் கோருகிறார்கள். ஏனெனில் கிழக்கைத் தமிழர்களாலும் தனித்து ஆழமுடியாது.
வட கிழக்கை இணைத்தால் அவர்களால் கிழக்கையும் ஆழமுடியும்.
தமிழ்- முஸ்லிம் ஒற்றுமைபற்றிப் பேசுகின்றோமே, கிழக்கைத் தனியாக விட்டுவிடுவோம். தமிழரும் முஸ்லிம்களும் இணைந்து ஆளட்டும்; என்றாவது நினைக்கிறார்களா? கிழக்கையும் வடக்குடன் இணைத்து முஸ்லிம்களை சிறுபான்மையாக்கி முஸ்லிம்களையும் சேர்த்தல்லவா ஆள நினைக்கிறார்கள். இல்லையெனில் வட கிழக்கில் அதிகாரப்பகிர்வு தொடர்பாக இதுவரை ஒரு உடன்பாட்டிற்கு வந்திருப்பார்கள் அல்லவா? முஸ்லிம்களையும் சேர்த்துத்தானே 13 இன் கீழ் ஆரம்பத்தில் சில காலம் ஆட்சி செய்தார்கள்.
சுருங்கக்கூறின் தமிழர்கள் அதிகாரம் கேட்பது தம்மை அடுத்தவர் ஆளக்கூடாது. தம்மைத்தாமே ஆழவேண்டும்; என்பதற்காக.அதனால்தான் கல்முனையைக்கூட பிரித்துக் கேட்கிறார்கள். காரைதீவைப் பிரித்தார்கள். நாவிதன்வெளியைப் பிரித்தார்கள். ஆலையடிவேம்பைப் பிரித்தார்கள்.
முஸ்லிம்களின் பெரும்பான்மையின்கீழ் இருக்கின்ற ஒரு பிரதேச செயலகத்தின்கீழ்கூட தாம் இருப்பதற்கு அவர்கள் தயாரில்லை. நாங்கள் எந்தப்பிராந்தியத்தில் நம்மை நாம் ஆள அதிகாரம் கேட்கின்றோம்?
நாம் வெளிப்படையில் தமிழ்மொழி என்றும் எமக்குத் தேவைப்படும்போது தமிழ்பேசும் சமூகங்கள் என்றும் பேசிக்கொண்டாலும் சிங்கள நிர்வாகத்தின்கீழ் இருந்தாலும் இருப்போம்; ஆனால் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட ஒரு கிராமசேவகர்பிரிவில்கூட ஒரு முஸ்லிம் கிராமசேவகரின் நிர்வாகத்தின்கீழ் இருக்கமாட்டோம்; என்ற நிலைப்பாட்டில் தமிழ்தரப்பினர் இருக்கின்றனர். அதனால்தான் கல்முனையில் முஸ்லிம்களுக்கும் 29 கிராம சேவகர் பிரிவுகள், 1/3 பங்கு வாழும் தமிழருக்கும் 29 கிராம சேவகர் பிரிவுகள்.
நமக்கு பிராந்தியமும் இல்லை. அதிகாரம் கேட்கவுமுடியாது. நிலப்பிராந்தியம் இல்லாத நாம் எங்கு நம்மை நாம்ஆள்வதற்கு அதிகாரம் கேட்கின்றோம்?
எலி எண்ணைக்கு காய்கிறது. இன்னுமொன்று எதற்காக காய்கிறது? எனக்கேட்பார்கள். அதுபோல், நிலப்பிராந்தியம் உள்ள தமிழர்கள் தம்மைத் தாமே ஆள அதிகாரம் கேட்கிறார்கள். நிலப்பிராந்தியம் இல்லாத நாம் எதற்காக அதிகாரம் கேட்கிறோம்? நாம் மற்றவர்களால் ஆளப்படுவதற்காகவா அதிகாரம் கேட்கிறோம்? ஏன் இந்த தலைமைகளுக்கு இது புரியாமல் இருக்கிறது.
மறைந்த தலைவர் அதிகாரப்பகிர்வு கேட்டாரா?
———————————————————————
மறைந்த தலைவர் ஒருபோதும் அதிகாரப்பகிர்வு கேட்கவுமில்லை. தனி அலகு கேட்கவுமில்லை. ஆனால் அதிகாரப் பகிர்வும் கேட்டார்; தனி அலகும் கேட்டார். இங்குதான் சூட்சுமம் இருக்கிறது. இதனைப் புரிந்துகொண்டால் அதிகாரப்பகிர்வில் முஸ்லிம்களின் நிலைப்பாடு தொடர்பாக குழப்பம் வராது.
தலைவராக ஒருபோதும் அதிகாரப்பகிர்வு கேட்கவில்லை. அதிகாரப்பகிர்வு இடம்பெறத்தான்போகிறது; வட கிழக்கை இணைத்து அதிகாரப்பகிர்வு இடம்பெற்றுவிட்டது; என்ற சூழ்நிலைகளில்தான் தனித்துவக்கட்சியை உருவாக்கி அதிகாரப்பகிர்வும் தனி அலகும் கேட்டார்.
நன்றாக சிந்தித்துப் பாருங்கள். வட கிழக்கு ஒருபோதும் பிரியாது; என்ற தோற்றப்பாடு இருந்த காலமது. வட கிழக்கைப் பிரிக்க சர்வஜன வாக்கெடுப்பிற்கு உடன்பட்டு முஸ்லிம்களை புலிகளிடம் கொத்துக் கொத்தாக பலிகொடுக்க முடியாது; என்ற சூழ்நிலை இருந்த காலமது.
எனவே, தலைவர் சொன்னார்: வட கிழக்கை இணைத்த நீங்களே பிரியுங்கள். வட கிழக்கு இணைந்திருக்க வேண்டுமாயின் தனி அலகு தாருங்கள்; என்றார்.
ஆரம்பத்தில், வட கிழக்கிலுள்ள முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசங்களைத் தென்கிழக்குடன் இணைத்துக் கேட்டார். அது சாத்தியமில்லையெனத்தெரிந்தபோது,
கிழக்கிலுள்ள பிரதேசங்களை இணைத்துக் கேட்டார்.
அதுவும் சாத்தியமில்லை; என்றபோது தென்கிழக்கைக் கேட்டார்.
அதுமட்டுமல்லாமல், தொண்டா-அஷ்ரப் ஒப்பந்தத்தினூடாக வட கிழக்கில் ஓர் உப அலகைக் கேட்டார்.
இதெல்லாம் ஏன்? இப்பொழுது யாராவது, தலைவர் தொண்டா- அஷ்ரப் ஒப்பந்தத்தில் உப அலகுதான் கேட்டார். எனவே, நாமும் உப அலகு கேட்போம்; எனக்கூறமுடியுமா?
அன்று, முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு, வட கிழக்கு இணைக்கப்பட்டு, அதிகாரப்பகிர்வு அமுலுக்கு வந்த நிலையில் something is better than nothing என்ற கோரிக்கைகள் அவை.
அதாவது, ‘வெந்த சூட்டில் பிடுங்கியது லாபம்’ என்பார்கள். அதற்காக, யாரும் வீட்டிற்கு தீ வைத்துவிட்டு அதன்பின் வீட்டிற்குள் இருப்பவற்றை முடிந்த அளவு காப்பாற்றுவோம்; என முனைவதில்லை.
மறைந்த தலைவர், நமது சக்திகளுக்கு அப்பால் வீடு தீப்பற்றி எரிந்தபோது அந்த வீட்டிற்குள் இருந்து எதையாவது காப்பாற்றிவிட முனைந்தார். அதுதான் அவர் கேட்ட அதிகாரப்பகிர்வும் வெவ்வேறு விதமான தனி அலகுகளும்.
இன்றைய தலைமைகள் முதலில் வீட்டிற்கு தீவைத்துவிடுவோம். பிறகு, வீட்டிற்குள் இருக்கும் எதையாவது காப்பாற்ற முடியுமா? என யோசிப்போம்; என்பதுபோல் செயற்படுகிறார்கள்.
இறுதியாக,
உண்மையில் தமிழ்த்தலைமைகள் 35 வருடங்களாக அவர்களால் முடியாமல் போனதை இன்றைய இனவாத அரசியல் சூழலைப் பயன்படுத்தி தமிழ் முஸ்லிம் ஒற்றுமை என்ற பெயரில் சாதிக்க முனைந்து வெற்றியின் விளிம்பிற்கு வந்துவிட்டார்கள்.
அதுதான், வட கிழக்கு இணைப்பு, சமஷ்டி ஆட்சி என்பவற்றில் முஸ்லிம் தரப்புடன் ஒரு உடன்பாட்டிற்கு வரமுடியாமல், இன்னும் தெளிவாகச் சொன்னால் வரவிருப்பமில்லாமல் இருந்தவர்கள்,
இன்று எந்த உடன்பாடும் இல்லாமல், அதிகாரப்பகிர்வில் முஸ்லிம்களின் பங்கு எதுவென்றே கூறாமல் முஸ்லிம் தலைமைகளின் சம்மதத்தை எழுத்துமூலமாகப்பெற்று அதனை இந்தியப் பிரதமருக்கே அனுப்பி அதனை ஒரு வலராற்று ஆவணமாக மாற்றும் நிலைக்கே வந்துவிட்டார்களே! இது தமிழ்த் தலைவர்களின் சாதனை இல்லையா?
இதற்கு துணைபோகத்துடிக்கும் நம் தலைமைத்துவத்திற்கு நோபல் பரிசே வழங்கலாம்.
முஸ்லிம் தலைமைகளே! புரிந்துகொள்ளுங்கள்.
இதுவரை சமுதாயத்திற்காக நீங்கள் எதுவும்சாதித்ததில்லை. சமுதாயத்திற்கு அநியாயமாவது செய்யாமல் இருங்கள். நாளை நீங்கள் மரணித்தன்பின் இன்று சஹ்ரானை சமூகம் திட்டுவதுபோல் எதிர்கால சந்ததி உங்களைத் திட்டும் நிலையை ஏற்படுத்திவிடாதீர்கள்.
முடிந்தால் தமிழ்தலைமைகளுடன் பேசி வட கிழக்கு இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களின் பங்கு தொடர்பாக ஓர் திருப்திகரமான உடன்பாட்டுக்கு வரமுடியுமா? எனப்பாருங்கள்.
அதிகாரப்பகிர்வு என்பது அடிப்படையிலேயே, நம்மை நாம் ஆள்வதற்கு நிலப்பிராந்தியம் இல்லாத நமக்கு பாதிப்பானது. அதேநேரம், தமிழ்மக்களின் நீண்டகால அபிலாசைகளுக்கு நாம் குறுக்கே நிற்கவும் விரும்பவில்லை. அதற்காக எங்களை நாங்களே கடலுக்குள் தள்ளிவிடவும் விரும்பவில்லை. இந்நிலையில் முடிந்தளவு இரு தரப்பிற்கும் பாதிப்பில்லாத வகையில் ஒரு உடன்பாட்டைக் காணமுயலுங்கள். அதனைப் பகிரங்கப்படுத்தி சமூகத்தின் சம்மதத்தைப் பெறுங்கள்.
அதன்பின் அதிகாரப்பகிர்வு தொடர்பாக கூட்டாக கோரிக்கை விடுப்பதைப்பற்றி யோசிக்கலாம். அதற்குமுன், கல்முனை விவகாரம், கோரளைப்பற்று மத்தி- வாகரை விவகாரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகளின் காலத்தில் கையகப்படுத்தப்பட்டு, இன்னும் தமிழர்கள் விவசாயம் செய்து அனுபவிக்கும் சுமார் பத்துக்கும் பதினைந்து ஆயிரம் ஏக்கரிற்கும் இடைப்பட்ட மட்டு முஸ்லிம்களின் காணிகள் விடுவிப்பு போன்ற தமிழர்களுடன் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாக பேசி ஒரு நல்ல நிலைப்பாட்டிற்கு வாருங்கள்.
தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை அவசியம். அதற்காக, நீயும் நானும் ஒற்றுமையாக இருப்போம்; உன் கண்ணைத் தா! எனக்கேட்டால் யாராவது கொடுப்பார்களா? ஆனால் நீங்கள் சமூகத்தின் கண்ணையே தர கையெழுத்திடுகிறேன். கையெழுத்திடவேண்டிய இடத்தைக் காட்டுங்கள்; என்கிறீர்களே! அதுதான் கவலை.
போதும் என நினைக்கிறேன், நீங்கள் புரிந்துகொள்வதற்கு.
நன்றி
0 comments :
Post a Comment