" பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு, எரியூட்டி படுகொலை செய்யப்பட்ட காட்டு மிராண்டித்தனமான சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்." - என்று என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அட்டனில் இன்று (04.12.2022) இடம்பெற்ற நிகழ்வின் பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" பாகிஸ்தானில் நேற்று துன்பகரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையர் ஒருவர் அடித்து - துன்புறுத்தப்பட்டு - எரித்து கொல்லப்பட்டுள்ளார். இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இது விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இதற்காக இலங்கை அரசும் முழுமையாக போராட வேண்டும்.
இச்சம்பவம் தொடர்பில் நூறுபேர்வரை கைது செய்யப்பட்டுள்ளனர், நீதி நிலைநாட்டப்படும் என பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது. அதேபோல இனியும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேவேளை, இந்திய பிரதமரை சந்திப்பதற்கான கோரிக்கையை நாம் இன்னும் விடுக்கவில்லை. அவ்வாறு விடுத்தால் நிச்சயம் சந்திப்புக்கான வாய்ப்பு கிடைக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியா செல்லவுள்ளது. அவர்கள் முதலில் சென்று வரட்டும்." - என்றார்.
0 comments :
Post a Comment