உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சமல் ராஜபக்ச அவர்கள் வாழைச்சேனை பிரதேச செயலக விவகாரமான ஆவணங்கள் கோப்புகள் அமைச்சில் காணவில்லை. தேடியும் கிடைக்கவில்லை என்று பாராளுமன்றத்தில் கூறியதன் மூலம் பிரபல்யமான நகைச்சுவை காட்சியான வைகைப்புயல் வடிவேலுவின் கிணற்றை கானவில்லை என்று தேடுவது போன்ற நகைச்சுவை தான் நினைவுக்கு வருகிறது. இதன் மூலம் வாழைச்சேனை முஸ்லிம் மக்களின் தலையெழுத்து மாறியுள்ளது உண்மையென சமாதான மற்றும் கல்விக்கான அமைப்பின் தலைவரும், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான ஆசிரியர் முஹம்மட் தாயிப் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், மறைந்த முன்னாள் அமைச்சர் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் முயற்சியினால் பன்னம்பல ஆணைக்குழு நிறுவப்பட்டு அந்த ஆணைக்குழுவின் சிபாரிசுப்படி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலத்திற்கு 11 கிராம சேவகர் பிரிவுகள் உள்வாங்கப்பட்டு ஏறத்தாழ 185 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை கொண்டதாக 2002 இல் ஸ்தாபிக்கப்பட்டு வாழைச்சேனை பிரதேச செயலகம் (கோறளைப்பற்று மத்தி) நான்கு ஆண்டுகள் எதிர்கால சந்ததிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. இந்த நிம்மதியை கெடுத்து மட்டக்களப்பு மாவட்ட சில எம்.பிக்களும், கச்சேரி அதிகாரிகளும் இணைந்து பட்டப்பகலில் முஸ்லிங்களின் காணிகளை கொள்ளையடித்து சென்றனர். அப்போது எமது மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர்களும் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இதனை வரலாற்றில் யாராலும் மன்னிக்கவோ அல்லது மறக்கவோ முடியாது.
இப்படியாக வஞ்சிக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட காணிகள் தொடர்பில் பல அரசியல் தலைவர்களிடம் மக்கள் எடுத்துக் கூறியும் இதுவரை தீர்வுகாணமுடியாத விடயமாகவே இருந்துவந்தது. இருந்தும் தொலைந்து போன அத்திப்பட்டி கிராமத்தை தமிழ் திரைப்படமொன்றில் அஜித் தேடியது போன்று 20 வருடங்களின் பின்னர் புதைந்து கிடந்த பல ரகசியங்களையும், உண்மைகளையும் வெளிக்கொண்டுவர எமது நாட்டின் உயரிய சபையான பாராளுமன்றத்தில் வாழைச்சேனை முஸ்லிம் மக்களுக்காக சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாபிழ் இஸட்.ஏ. நஸீர் அஹமட் அவர்களுக்கும், அந்த பிரேரணையை ஆமோதித்து உரையாற்றிய திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை மட்டக்களப்பு முஸ்லிம் மக்கள் சார்பில் தெரிவித்து கொள்கிறேன்.
இந்த பிரேரணையை சபை விவாதத்தில் இணைத்துக்கொள்ளவும், அதற்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ளவும் எமது பாராளுமன்ற உறுப்பினர்களான அல்ஹாபிழ் இஸட்.ஏ. நஸீர் அஹமட் அவர்களும், சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களும் பல கஷ்டங்களை சந்தித்தார்கள் என்பதை நான் அறிவேன். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாபிழ் இஸட்.ஏ. நஸீர் அஹமட் அவர்கள் ஏனையோர்களை போன்று வாக்கு அரசியலை முன்னிறுத்தாது மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிங்களின் பிரச்சினைகளை ஆக்கிரோஷமான முறையில் புள்ளிவிபரங்களுடன் விளக்கி பொதுமக்களின் குரலாக பாராளுமன்றத்தில் ஒலித்ததன் மூலம் எங்களுக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.
பல தசாப்தங்களாக ஆயுத பயங்கரவாதத்தினாலும், நிர்வாக பயங்கரவாதத்தினாலும் கொள்ளையடிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிங்களின் காணிகள் தொடர்பில் புள்ளிவிபரங்களையும், சரியான தரவுகளையும் கொண்டு தனது வாதத்தை முன்வைத்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பொறியியலாளர் அல்ஹாபிழ் இஸட்.ஏ. நஸீர் அஹமட் முஸ்லிங்களுக்கு மட்டக்களப்பில் ஆண்டாண்டு காலமாக நடைபெற்றுவரும் அநீதிகளை நாட்டின் உயர்ந்த சபையில் வெளிச்சம் போட்டுக்காட்டி பல அரசியல் அஜந்தாக்களுக்கும் முற்றுப்புள்ளியை வைத்துள்ளார். கடந்த காலங்களில் சோம்பேறித்தனமாக இருந்த முஸ்லிம் அரசியல்வாதிகளினால் சமூகம் படும் இன்னல்களை வெளிக் கொண்டுவந்த அல்ஹாபிழ் இஸட்.ஏ. நஸீர் அஹமட் அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், சக முஸ்லிம் சகோதரர்கள் படும் கஷ்டங்களை அறிந்து மட்டக்களப்பு மாவட்ட சந்ததி எதிர்வரும் 10 ஆண்டுகளின் பின்னர் வாழ இடமில்லை எனும் உண்மையை உணர்ந்து வாழைச்சேனை மகன் போன்று உயிரோட்டமாக மக்களின் பிரச்சினைகளை எதார்த்த பூர்வமாக பேசியதை இங்கு யாரும் மறுக்க முடியாது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அவர்கள் மட்டக்களப்பு மக்களின் பிரச்சினைகளை விளங்கி உரையாற்றியமையையும் இங்கு நன்றியுடன் நினைவு கூறுவதுடன் வாழைச்சேனை பிரச்சினைகளை பேசியது போன்று கிழக்கில் உள்ள ஏனைய பிரதேசங்களின் பிரச்சினைகளையும் சாணக்கியமாக அணுகி தமிழ் பேரினவாத அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment