இரவோடிரவாக சங்குமண்கண்டியில் முளைத்த புத்தர்சிலையால் பதட்டம்!



பிக்குமார் அட்டகாசம்:பொலிசார் குவிப்பு: பொதுமக்கள் சத்தியாக்கிரகம்!
100வீத தமிழர்கள் வாழும் இடத்தில் புத்தர்சிலை எதற்காக? மக்கள் ஆவேசம்.
வி.ரி.சகாதேவராஜா-

ம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்திலுள்ள சங்குமண்கண்டி தனித்தமிழ் கிராமத்தில், நேற்றுமுன்தினமிரவு நள்ளிரவில் திடிரென வைக்கப்பட்ட புத்தர் சிலையால் அப்பிரதேசத்தில் பதற்றம் நிலவியது.
பொதுமக்கள் அவ்விடத்திலேயமர்ந்து அதிகாலை 5 முதல் அன்னம் தண்ணியன்றி சத்தியாக்கிரகத்திலீடுபட்டனர்.

பொத்துவில் பிரதேச சங்கமன்கண்டி தாண்டியடி பிரதேசத்தில் பிரதான வீதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் திடிரென வைக்கப்பட்ட புத்தர் சிலையால் நேற்றுக்காலைமுதல் இப்பிரதேசத்தில் முறுகல் நிலைமை ஏற்பட்டதுடன், இச்செயற்பாட்டைக்கண்டித்து இப்பிரதேச மக்கள் எதிர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெருமளவு பொலிசாரும் குவிக்கப்பட்டனர். திருக்கோவில், பொத்துவில் பிரதேச பொலிஸ் அதிகாரிகள் உதவிபொலிஸ் அத்தியட்சகர் ,பொலிஸ்அத்தியட்சகர் என பொலிஸ் உயரதிகாரிகளும் அங்கு நின்றிருந்தனர்.

இதனையறிந்த இப்பிரதேச பொதுமக்கள் உட்பட மக்கள் பிரதிநிதிகள் அதிகாலை 5 மணி முதல் இங்கு ஒன்று கூடி நில ஆக்கிரமிப்பாளர்களின் இச்செயற்பாட்டைக்கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொத்துவில் - கல்முனை பிரதான வீதியில் தாண்டியடிக்கும் சங்கமங்கண்டிக்கும் இடையிலான பிரதேசத்திலுள்ள காட்டுப்பிரதேசத்திலேயே இவ்வாறு புத்தர் சிலை திடீரென வைக்கப்பட்டுள்ளதுடன் பொத்துவில் பிரதேசத்திலுள்ள பிக்குகள் சிலரும் இங்கு காணப்பட்டனர்.

பிரதான வீதியினருகே 5 அடி உயரஇரும்புத் தாங்கியில் 3அடி உயர வெண்ணிற புத்தர்சிலை வைக்கப்பட்டிருந்தது. முன்னால் கம்பங்களில் பௌத்தகொடிகள் கட்டப்படடிருந்தன.
பொத்துவில் முஹூதுமஹாவிகாரை விகாராதிபதி வண.உடதம்பல ரத்னபிரிய தலைமையிலான 08 பிக்குமார் அங்கு சிலைக்கருகாமையிலுள்ள காடுமண்டியபற்றைக்குள் நின்றிருந்தனர்.

பொதுமக்களின் வேண்டுகோளுக்கமைவாக காலை 9 மணியளவில் அங்குவந்த காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் பொலிசாருடன் பேசியபின்னர் பொத்துவில் முஹூதுமஹாவிகாரை விகாராதிபதி வண.உடதம்பல ரத்னபிரியவுடன் பேசினார்.

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்கூறுகையில்:

'இது 100வீதம் வாழ்கின்ற தனித்தமிழ்ப்பிரதேசம். இங்கு புத்தர்சிலை வைப்பதன்நோக்கம் என்ன? இரவோடிரவாக சிலை வைக்கப்பட்டதனால் இங்கு பதட்டம்நிலவுகிறது. நாம் புத்தரை மதிக்கிறோம்.அவர் பிறப்பால் ஒரு இந்து.அவரது போதனைகள் மக்களை நல்வழிப்படுத்தவந்தவையே. அவரைவைத்து இந்த நாடகம் ஆடுவது முறையல்ல.மதவெறி இந்தநாட்டை அழித்துவிடும்.

ஜனாதிபதி பிரதமருக்கும் இதனை தெரியப்படுத்துகிறோம். நாங்கள் இந்நாட்டுப்பிரஜை. நாம் சுதந்நதிரமாக வாழமுடியாதா? பௌத்ததுறவிகள் நிதானமாக அமைதியாகபேசவேண்டும். இவ்வாறு உறுக்கி சண்டித்தனம் காட்டமுற்படக்கூடாது. எமக்கு இரத்தம் கொதிக்கிறது. எனினும் தெய்வம் மதகுரு என்பதனால் பொறுமையை கடைப்பிடிக்கிறோம். எமது இந்துமதகுருவொருவர் தனிச்சிங்கள் பகுதியில் பிள்ளையார்சிலையொன்றைக் கொண்டுவைத்தால் சும்மா விடுவார்களா? பாதுகாப்புபடையினர் பொலிசார் அனைத்துமக்களுக்கும் பாதுகாப்புவழங்கவேண்டும். சட்டத்தை நீதியை சரியாக கடைப்பிடிக்கவேண்டும்.

சட்டரீதியற்றமுறையில் வைக்கப்பட்ட இச்சிலையை அவர்களே அகற்றியருக்கலாம்.இனமுறுகலுக்கும் இது வழிவகுக்கும். எனவே எவ்வித அனுமதியுமில்லாமல் இரவோடிரவாக கள்ளக்களவாக வைத்த சிலையை அகற்றுமாறு வேண்டுகிறோம் 'என்று தவிசாளர் ஜெயசிறில் கூறினார்.

பதிலுக்கு வண.உடதம்பல ரத்னபிரிய ஆக்ரோசமாகக்கூறுகையில்:

இது பௌத்தநாடு. நாம் எங்கும் சிலை வைப்போம். இந்த இடத்தில் 2500ஆண்டுகளுக்கு முன்னும் சிங்களபௌத்தர்கள் இருந்துள்ளனர்.அருகில் தொல்பொருள் இடமுள்ளது. பௌத்தர்கள்தான் இவ்விடத்தின் பூர்வீகமக்கள். சிலையை அகற்றமுடியாது. என்றார்.

தவிசாளர் ஜெயசிறில் தேரருடன் நடாத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தததையடுத்து சிலைக்கு முன்பாக கொழுத்தும் வெயிலில் தரையில் அவரே முதலில் அமர்ந்தார்.

அவருடன் ஜெயசிறில் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் ஏ.றஹீம் உபதவிசாளர் பி.பார்த்தீபன் உறுப்பினர் த.சுபோதரன் ஆகியோரும் அமர்ந்தனர். ஊடகங்களுக்கும் கருத்துத்தெரிவித்தனர்.

திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன் கூறுகையில்: 100வீத தமிழ்மக்கள் வாழுகின்ற இடம். மக்களின் விருப்பமின்றி சட்டத்திற்கு முரணாக மதவழிபாட்டுதலங்களை இவ்வாறு நிறுவமுடியாது. இலங்கைசட்டம் பொதுவானது.சாதிக்கொரு நீதியல்ல. சட்டமுறையற்ற நடவடிக்கையை எதிர்க்கிறோம். எனவே இது விடயத்தில் நீதியை தருமாறு சகல அதிகாரிகளையும வேண்டுகிறேன்.என்றார்.

பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் ஏ.றஹீம் கூறுகையில்:
 
எமது பிரதேசத்தில் இவ்வாறான முரண்பாட்டுக்குரிய செயல் இடம்பெறுவது நல்லதல்ல. எமது சபையால் எந்த அனுமதியும் வழங்கவில்லை. அவர்களிடம் இந்த சிலையை வைக்க எந்த ஆவணமும் இல்லை. பொலிசாரிடமும் கூறியுள்ளோன். கடந்தவாரம் எமது பொத்துவிலுக்கு வந்த ஒரேநாடுஒரேசட்ட தலைவர் ஞானசாரதேரர் வந்து செங்காம தமிழ்மக்களுக்கு தண்ணியில்லை அது இல்லை இதுஇல்லை அதை வழங்கவேண்டும் என்றபோர்வையில் உரக்ககுரல்கொடுத்தார். அன்று அப்படி சிறுபான்மைக்கு குரல்கொடுப்பதுபோல கொடுத்துவிட்டு இன்று அதே அணியிளர் அந்த மக்களின் காணியில் இடத்தில் அடாத்தாக சிலைவைத்து குழப்பத்தை ஏற்படுத்தமுயல்வதை பார்க்கிறோம். சிறுபான்மைமக்களுக்கு இதுவொருபாடம். அவர்கள் நேரத்துக்குதகுந்தால்போல் சிறுபான்மையை பயன்படுத்துகிறர்கள். இனியாவது எமது மக்கள் இவ்வாறானவர்களுக்கு பின்னால் செல்லக்கூடாது என்பதே இன்றைய செய்தியாம்.

பிரதேசசெயலரிடமும் பேசியுள்ளேன். அவருக்கு இந்த இரண்டரை ஏக்கர் காணியைகேட்டு அனுமதிகேட்டு பிக்குமார் எழுதியுள்ளனர். ஆனால் அவர் அனுமதிவழங்கவில்லை. எனவே 100 வீதம் தமிழ்மக்கள் வாழும் இப்பகுதியில் அரசகாணியாகவிருந்தாலும் சட்டப்படி ஆவணங்களுடன் செயற்படவேண்டும். இங்கு எந்த ஆவணமும் இல்லை. எனவே உரியஅதிகாரிகள் நீதியைபெற்றுத்தருவார்களென நம்புகிறேன் என்றார்.

பொத்துவில் உபதவிசாளரும் தொழிலதிபருமான பெருமாள் பார்த்தீபன் கூறுகையில்: 
இதுவரை மயானப்பகுதியில் 2 தடவைகள் சிலைவைக்க இதே பிக்குமார் முயற்சிசெய்தனர். மக்களாகசேர்ந்து விரட்டினோம். அது பகலில் நடந்தவை. ஆனால் இது இரவோடிரவாக வைக்கப்பட்ட சிலை.ஒரு பௌத்தர்கூட இங்கு வாழவில்லை. விறகுவெட்டி வாழும் எமது ஏழைத்தமிழ் மக்கள் இங்குள்ளனர். எனினும் இச்சிலை வைப்பை நாம் அனுமதிக்கப்போதில்லை. சிலை அகற்றியபின்னரே நாம் வெளியேறுவோம்.என்றார்.

சிலை அகற்றப்படும் வரை இங்கிருந்து நகரப்போவதில்லையென போராட்டத்தில் ஈடுபட்டோர் சூளுரைத்துள்ளனர். 12 மணிக்குப்பின்னர் வீதியை மறித்து பேராட்ட நிலை மறுவடிவம் எடுக்கும் என சத்தியாக்கிரகத்திலீடுபட்டோர் தெரிவித்தனர்.

பகல் 11.30மணியளவில் பொத்துவில் பிரதேசசெயலாளர் சந்துருவன் அங்குவந்து பௌத்த பிக்குமாருடன் கலந்துரையாடி மேலிடத்திற்கும் அறிவித்து கலந்துரையாடினார். அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் உடன்தொடர்புகொண்டு இனமுறுகலை குழப்பத்தை தவிர்க்குமாறும் சிலையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பிரதேச செயலாளர் மற்றும் பொலிசாரை அறிவுறுத்தினார்.

பகல் 12.15மணியளவில் பொலிஸ் உயரதிகாரி பிரதேசசெயலாளர் சந்தருவன் அகியோர் பொதுமக்களிடம் சிலை மேலிடத்து உத்தரவிற்கமைவாக அகற்றப்படும் எனவே குழப்பமின்றி கலைந்துசெல்லுங்கள். என்றனர். சிலை அகற்றப்படும்வரை நாம் இங்கிருந்து செல்லமாட்டோம்.சுட்டால் சுடுங்கள் என்று மக்கள் அடம்பிடித்தனர்.
அச்சமயம் பிக்குமாரை அங்கிருந்து அகலுமாறு பொலிசார் கேட்க அவர்கள் அங்கிருந்து சிலையை பௌத்தகொடிகளை அகற்றாமலே பகல் 1 மணியவில் வெளியேறினர்.அதனையடுத்து 1.30மணியளவில் பொதுமக்களும் வெளியேறினர்.
இறுதியாக இரவுவரை சிலையும் காவலுக்கு பொலிசார் இருவரும் நின்றிருந்தனர். ஏனைய அனைவரும் கலைந்துசென்றனர்.இரவு விசேடஅதிரபடிப்படையினர் காவலுக்கு நின்றிருந்தனர்.

எனினும் நேற்று நள்ளிரவு சிலை அகற்றப்பட்டிருப்பதாக அதிகாலையில் செய்திகள் உறுதிப்படுத்தியது. ஆனால் சிலைவைத்திருந்த 5அடி உயரஇரும்புத் தாங்கியும் நடப்பட்ட பௌத்தகொடிகளும் இப்போதும் அங்கேயே இருக்கின்றன.

அதாவது 3வது தடவையாக அப்பிரதேசத்தில் சிலை வைக்கஎடுத்த முயற்சியும் தோல்வியில் நிறைவடைந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :