இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசியர் கலாநிதி எம்.எம். பாஸில் அவர்கள் பேராசிரியராக பதவியுயர்வு பெற்றதனைக் கௌரவிக்கும் முகமாக அவருக்கான பாராட்டு விழா இன்று 23.12.2021 ஆம் திகதி கலை கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பீடத்தின் மூத்த பேராசிரியர் றமீஸ் அப்துல்லா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் வரவேற்புரையினை ஆங்கில மொழித்துறைத் தலைவர் கலாநிதி ஏ.எம்.எம். நவாஸ் ஆற்றியதுடன் தலைமையுரையினை மூத்த பேராசிரியர் றமீஸ் அப்துல்லா நிகழ்த்தினார். இப்பாராட்டு விழா நிகழ்வின் சிறப்புரையினை பீடத்தின் மற்றுமொரு மூத்த பேராசிரியரான கலாநிதி எம்.ஐ.எம். கலீல் ஆற்றினார். பேராசிரியர் எம்.எம். பாஸில் ஒரு மாணவனாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இணைந்து, அதில் ஒரு விரிவுரையாளராக் சிரேஷ்ட விரிவுரையாளராக் பேராசிரியராக் துறைத் தலைவராக் பீடாதிபதியாக உயர்ந்து நிற்பதனை பேராசிரியர் கலீல் தனது உரையில் சிலாகித்துப் பேசியிருந்தார்.
சிறப்புரையினைத் தொடர்ந்து மூத்த பேராசிரியர்களான பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, பேராசிரியர் கலீல் ஆகியோர் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் அவர்களுக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர். பின்னர் பேராசிரியர் பாஸில் குறித்த வாழ்த்துப்பாவினை சமூகவியல் துறையின் தலைவர் கலாநிதி எஸ்.எம். ஐயூப் வழங்கினார். சிகரம் தொடும் சிகரம் எனும் தலைப்பில் அமைந்த அவரது வாழ்த்துப்பா, பேராசிரியர் பாஸில் அவர்களின் வாழ்வியல் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதாக அமைந்திருந்தது.
பிரதம அதிதி உரையினை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் நிகழ்த்தினார். ஒரு ஆசிரியராக, நண்பராக, சக விரிவுரையாளராக பல பரிமாணங்களில் பேராசியர் பாஸிலுடன் தனக்கிருக்கும் உறவினை உபவேந்தர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிப் போக்கில் பேராசிரியர் பாஸில் என்ற தனியொரு நபர் ஆற்றிய பங்களிப்புக்களையும் உபவேந்தர் நினைவுகூர்ந்தார். உபவேந்தரின் உரையினைத் தொடர்ந்து பேராசிரியர் பாஸிலுக்கான நினைவுச் சின்னம் உபவேந்தரினால் வழங்கிவைக்கப்பட்டது.
இப்பாராட்டு நிகழ்வில் கலை கலாசார பீடத்தின் விரிவுரையாளர்களும் போதனைசாரா ஊழியர்களும் பேராசிரியர் பாஸிலுக்கு பரிசில்களை வழங்கிக் கௌரவித்தனர். அத்தோடு, பேராசிரியர் பாஸில் குறித்து அரசறிவியல் துறையினைத் சேர்ந்த விரிவுரையாளர் வி. கமலசிறி ஒரு கவிதையினை வழங்கினார். பின்னர் இவ்விழாவின் கதாநாயகனாக கலந்துகொண்ட பேராசியர் எம்.எம். பாஸில் அவர்களின் ஏற்புரை இடம்பெற்றது. அரசறிவியற்துறைத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ.எம். பௌசர் அவர்கள் வழங்கிய நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.
இந்நிகழ்வில் பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், நூலகர், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், பிரதிப் பதிவாளர், விரிவுரையாளர்கள், பொறியியலாளர், பல்கலைக்கழக பிரதம பாதுகாப்பு உத்தியோகத்தர், உதவி விரிவுரையாளர்கள், போதனைசாரா உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment