இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ள கடிதத்தின் தலைப்பு
"13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்த கோருதல்" என இருந்த நிலையில் தற்போது அது "தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்" என மாற்றப்பட்டுள்ளாலும் அனைத்தும் ஒரே பொருளை கொண்டதாகவும் கிழக்கு முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்கு எதிரானதுமாகும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,
தமிழ் கூட்டமைப்பு தலைமையிலான கட்சிகளும் ரவூப் ஹக்கீமும் இணைந்து தயாரித்துள்ள இந்த வரைவு என்பது கிழக்கு மாகாண தமிழ் மக்களிடமோ அல்லது இலங்கை வாழ் முஸ்லிம்களிடமோ கேட்காமல் சர்வாதிகாரமாக தயாரிக்கப்பட்ட ஒன்றாகும்.
கிழக்கில் அதிக வாக்குகள் கொண்டதாக முஸ்லிம் காங்கிரஸ் இருந்தாலும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சித்தலைவர்களுக்கு மாற்றமாக உள்ள நிலையில் ரவூப் ஹக்கீம் மேற்படி ஆவணத்தில் கையொப்பம் இடுவது கிழக்கு முஸ்லிம்களின் ஒப்புதலாக அமையாது. அது மட்டுமல்லாது மேற்படி ஆவணம் கிழக்கை சேர்ந்த அரசியல் கட்சித்தலைமைகளுடன் ஆலோசனை செய்யாமல் தயாரிக்கப்பட்ட சர்வாதிகார வரைவாகும். இந்த வரைவு கிழக்கு முஸ்லிம்களுக்கும் நாட்டின் இறைமைக்கும் அச்சுறுத்தலாகும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.
ஆகவே, இனப்பிரச்சினைக்கான தீர்வில் வடக்கு கிழக்கை இணைக்க கோரும் எத்தகைய தீர்மானத்தையும் எமது கட்சி நிராகரிக்கிறது. தற்போது உள்ளது போல் வடக்கும் கிழக்கும் பிரிந்துள்ளதை ஏற்று முஸ்லிம்களுக்கான அதிகாரத்தையும் ஏற்று ஜனநாயக ரீதியிலான தீர்வை முன் வைக்க தமிழ் கூட்டமைப்பு கிழக்கை தலைமையாக கொண்ட செயற்பாட்டில் உள்ள கட்சிகளுடன் உரையாடிய பின்பே எத்தகைய வரைபையும் முன் வைக்க வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தமிழ் கட்சிகளிடமும் இந்திய அரசிடமும் கோரிக்கை முன் வைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment