கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் வெள்ள அனர்த்த நிலைமையைக் கட்டுப்படுத்த மாநகர சபை துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
நேற்று ஞாயிறு பிற்பகல் தொடக்கம் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற பலத்த மழை காரணமாக கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, மருதமுனை, பெரியநீலாவணை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை போன்ற பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ள நிலைமையை கருத்தில் கொண்டு, கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மற்றும் ஆணையாளர் எம்.சி.அன்சார் ஆகியோரின் அவசர அறிவுறுத்தலின் பேரில் இன்று சாய்ந்தமருது பிரதான முகத்துவாரம் உட்பட கல்முனை மாநகர பிரதேசங்களிலுள்ள அனைத்து முகத்துவாரங்களையும் திறந்து, வெள்ள நீரை கடலுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை மேற்கொண்டிருந்தது.
அத்துடன் ஏலவே துப்பரவு செய்யப்பட்டு, மீண்டும் குப்பைகளினாலும் மண் திட்டுகளினாலும் அடைபட்டுள்ள வடிகான்கள் மாநகர சபையினால் துரிதமாக சீர்செய்யப்பட்டு வருகின்றன. வெள்ள அனர்த்தத்தில் இருந்து மக்களையும் உடமைகளையும் பாதுகாக்கும் பொருட்டு மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு மற்றும் பொது வசதிகள் பிரிவு என்பவற்றின் ஊழியர்கள் முழுநேரப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment