மக்கள் நலன்சார்ந்த மக்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்துகின்ற வேலைத் திட்டங்களுக்கு தான் இந்த அரசாங்கத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான ஹாபிஸ் நஷீர் அஹமட் தெரிவித்தார்.
இந்த ஆண்டுக்கான இறுதி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் ஹாபிஸ் நஷீர் அஹமட் தலைமையில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
இந்த அரசாங்கத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வேலைத் திட்டங்களை செய்து அதற்கு முன்னுரிமை வழங்கி அவர்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பிரதேச செயலகம் தோறும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நிதி அமைச்சில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு ஏற்ப எதிர்காலத்தில் மக்களின் வாழ்வாதரத்தை முன்னேற்றக்கூடிய வேலைத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி ஒவ்வொரு தனி மனிதரின் வாழ்வாதாரத்தையும் முன்னேற்ற அரசாங்க அதிகாரிகள் உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த வருடம் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வீதி, கல்வி, சுகாதாரம், விவசாயம், வாழ்வாதார உதவிகள் என்று 45 வேலைத் திட்டங்கள் நாற்பது மில்லியன் ரூபாவில் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச செலாளர் வீ.தவராஜா தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் பிரதேச செயலாளர் வீ.தவராஜா, பிரதேச செயலக உதவி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment