திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள நாச்சிக்குடா கிராம சேவகர் பிரிவை வசிப்பிடமாகக் கொண்ட மூத்த ஊடகவியலாளர் காசிம் சுலைமான் லெப்பை 32 வருடங்கள் ஊடகப் பணியை ஆற்றியுள்ளார்.
இவர் 31.07.1947ஆம் ஆண்டில் சீனக்குடாவில் பிறந்தார். தி/சீனக்குடா வெள்ளை மணல் அல் அஸ்ஹர் மகா வித்தியாலயத்தில் தனது கல்வியை கற்றுள்ளார்.
கடுகண்ணாவ குறுக்குத் தலையைச் சேர்ந்த சம்சுல் ஹிதாயா என்பவரை மனைவியாக மணந்து கொண்ட இவருக்கு தஸ்னீம் வானு,றிஹானா பேகம்,முகம்மட் ஆஸிக், ஹஸ்ஸானா,முகமட் ஆசாத்,முகமட் ஆகீல் முதலிய ஆறு புதல்வர்கள் உள்ளனர்.
1968ஆம் ஆண்டு இலங்கை கனிப் பொருள் கூட்டுத்தாபனத்தில் ஊழியராக சேர்ந்து பதவி உயர்வுகளைப் பெற்ற பின்னர் 1979ஆம் ஆண்டில் இடமாற்றம் செய்யப் பட்டதையடுத்து தனது சுயவிருப்பத்துடன் ஒய்வு பெற்றார்.
1979ஆம் ஆண்டில் ஊடகப் பணியை ஆரம்பித்த இவர் சூடாமணி, விடிவெள்ளி,நவமணி, சுடர்ஒளி,சக்தி எப்.எம்.ஆகிய ஊடகங்களில் பிராந்திய நிருபராக கடமையாற்றினார்.குறிப்பாக திருமலை மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளை ஊடகங்களுக்கு வெளிக் காட்டினார்.
1987 ஆம்ஆண்டு காலப் பகுதியில் இந் நாட்டில் ஏற்பட்ட வன்செயல் தலைதுக்கியிருந்தன் காரணமாக திருமலை மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் யாருமில்லாத நிலையில் இம்மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்குச் சென்றும்,பல சவால்களுக்கு மத்தியிலும் செய்திகளை சேகரித்து பத்திரிகைகளுக்கு அனுப்பியதன் மூலம் ஆசிரியர் பீடத்தினால் பராட்டுக்களையும் நன் மதிப்பையும் இவர் பெற்றுக் கொண்டார்.
1997ஆம் ஆண்டு திருமலை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் ஊடகவியலாளர் ஓன்றியத்தின் அமைப்பாளராகவும் நியமிக்கப் பட்டார்.2000ஆம் ஆண்டு திருமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் அங்கத்தவராகவும் செயற் பட்டதோடு, 2004ஆம் ஆண்டு மூத்த ஊடகவியலாளருக்கான விருதை இச் சங்கம் வழங்கி கௌரவித்தது.
இவர் நாச்சிக்குடா அல் ஸஹ்ரியா ஜூம்ஆப் பள்ளி வாசல் செயலாளராகவும், பொருளாளராகவும்,ஸஹ்ரியா அரபு மத்ரசாவின் ஸ்தாபக உறுப்பினராகவும் மற்றும் முதியோர் சங்கத்தின் செயலாளராகவும் இருந்து பல்வேறு சமூக சேவைகளை இவர் புரிந்துள்ளார்.
இவர் மரணிக்கும் வரை சீனக்குடா குடாக் கரை விவாகப் பதிவாளராகவும்,முழு நேர ஊடகவியலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
இவர் 16.01.2011ஆம் ஆண்டு இவ் வையகத்தை விட்டு பிரிந்து பதினொன்று வருடங்களாகின்றன.அவர் செய்த ஊடகப் பணிகளை திருமலை மாவட்ட மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள் என்பது திண்ணம்.
0 comments :
Post a Comment