மலையக மக்களை அடியோடு மறந்த ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை - உதயகுமார் எம்பி சபையில் கவலை



காரணமே இல்லாமல் ஒத்திவைக்கப்பட்ட இந்த பாராளுமன்றம் மீண்டும் கூடி நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய உரையை நாம் செவிமெடுத்தோம். நாட்டை முன்னேற்ற அனைவரின் ஒத்துழைப்பையும் அவர் கோரினார். நிச்சயமாக நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்குமானால் முழு ஆதரவு வழங்கப்படும்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் பாரிய பங்கு வகிக்கும் மலையக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் ஒரு வார்த்தைக்கூட அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் கூறாமல் தனது உரையை முடித்தது பெரும் ஏமாற்றத்தையும் கவலையையும் அளிக்கிறது.
 
எனவே மலையக பெருந்தோட்ட மக்களை அடியோடு மறந்த ஜனாதிபதி அவர்களின் உரை குறித்து ஒட்டுமொத்த மலையக மக்கள் சார்பில் கவலையை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனாதிபதியின் உரை பழைய பல்லவியை மீண்டும் மீண்டும் பாடுவது போலவே உள்ளது. நாட்டு மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு ஜனாதிபதி அவர்களின் உரையில் இவ்வித தீர்வும் இல்லை. அதனால் வெறும் ஏமாற்றமே மக்களுக்கு கிடைத்துள்ளது.
 
அன்றாடம் சமையல் எரிவாயுவிற்கு வரிசையில் நிற்கும் மக்களுக்கு
அரிசி விலை உயர்வால் அல்லலுரும் மக்களுக்கு
உரம் இன்றி கஸ்டப்படும் விவசாயிகளுக்கு
எரிபொருள் விலை உயர்வால் திண்டாடும் வாகன சாரதிகளுக்கு
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் துன்பப்படும் சாதாரண மக்களுக்கு டொலர் இன்றி இறக்குமதி செய்ய முடியாது தவிக்கும் வர்த்தகர்களுக்கு போதிய சம்பளம் இன்றி அன்றாடம் வெயில் மழையில் உழைக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு
நாளாந்தம் கூலிக்கு வேலை செய்யும் சாமானிய தொழிலாளிக்கு
நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் அரச ஊழியர்களுக்கு, தனியார் ஊழியர்களுக்கு எவ்வித தீர்வும் இல்லாத கொள்கை உரையாகவே ஜனாதிபதி அவர்களின் உரையை பார்க்க முடிகிறது.
 
பெயரளவில் கொள்கை என்ற சொல்லை வைத்துக் கொண்டு நிலையான கொள்கை ஒன்று இல்லாமல் இந்த அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கிறது. கொள்கை என அறிவித்த அனைத்து திட்டங்களில் இருந்தும் இந்த அரசாங்கம் பின்வாங்கி உள்ளது.
அரிசி மாவியாவை இல்லாது ஒழிப்பதாகக் கூறி அதிவிசேட வர்த்தமானி வௌியிட்டு இராணுவத்தை களமிறக்கிய அரசாங்கம் இறுதியில் அரிசி ஆலை உரிமையாளர்களிடம் தோல்வி அடைந்துள்ளது. அரிசியை வௌிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதாகக் கூறிய அரசாங்கம் தற்போது வெட்கமின்றி வௌிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறது. உள்நாட்டு விவசாயிகளை அந்தரங்கத்தில் தொங்கவிட்டுள்ளது.
 
1500 ரூபாவிற்கு கொள்வனவு செய்த உரம் இன்று 10,000 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. சேதன உரம் என்ற பெயரில் கழிவுகளை வழங்கி விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர்.
இரசாயன உரம் இறக்குமதி தடை என்ற அதிவிசேட வர்த்தமானியை மீளப் பெற்று சேதன பசளை திட்டத்தில் கொள்கை மாற்றமில்லை என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.
பால்மா விலையை நினைத்தால் தலைசுற்றுகிறது. சந்தையில் தற்போது பால்மாவை காண்பது தங்கத்தை கண்ணில் பார்ப்பதற்கு சமமாகிவிட்டது. தற்போது மீண்டும் பால் மா மீண்டும் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. 400 ரூபாவரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பிரச்சினை பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. நாட்டில் திடீர் திடீர் என மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. மின்சாரம் துண்டிக்கப்படும் போது குடிநீரும் தடைபடுகிறது.
மின்சாரம் உற்பத்தி செய்ய போதுமான எரிபொருள் வழங்கப்படுவதில்லை என சம்பந்தப்பட்ட அமைச்சர் கூறுகிறார். எரிபொருள் வழங்க டொலர் இல்லை என துறைக்குப் பொறுப்பான அமைச்சர் கூறுகிறார். இதுபோன்ற வேடிக்கையான அரசாங்கத்தை இதற்கு முன் பார்த்ததில்லை.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :