கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் சாய்ந்தமருது மஸ்ஜிதுஸ் ஸபா பள்ளிவாசலுக்கு ஜனாஸாக்களை குளிப்பாட்டும் கட்டில் மற்றும் ஒரு தொகுதி கோப்ரா எல்.ஈ.டி. மின் விளக்குகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பவுண்டேஷன் ஸ்தாபகத் தலைவரும் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளையேற்று குறுகிய காலத்திற்குள் இவற்றை வழங்குவதற்கான நடவடிக்கையை அவர் மேற்கொண்டிருந்தார்.
நேற்று இப்பள்ளிவாசலுக்கு அவர் நேரடியாக விஜயம் செய்து பள்ளி நிர்வாகிகளிடம் இவற்றைக் கையளித்தார். இந்நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாகத் தலைவர் அல்ஹாஜ் அப்துல் அஜீஸ் உள்ளிட்ட நிர்வாகிகளும் பவுண்டேஷன் பிரதிநிதிகளும் மற்றும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது ரஹ்மத் மன்சூரின் இவ்வாறான மனித நேயமிக்க உயரிய சேவைகளுக்காக குறித்த பள்ளிவாசல்களின் நிர்வாகிகளினால் நன்றி தெரிவிக்கப்பட்டது.
தமது பவுண்டேஷனின் இவ்வாறான சமூக சேவை வேலைத் திட்டங்களுக்கு அனுசரணை வழங்கி வருகின்ற வை.டபிள்யூ.எம்.ஏ. (YWMA) அமைப்புக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்வதாக ரஹ்மத் மன்சூர் அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.
அதேவேளை, மிக விரைவில் இப்பள்ளிவாசலுக்கு ஜனாஸாக்களை சுமந்து கொண்டு செல்லும் சந்தூக் ஒன்றை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, சம்மாந்துறை, நிந்தவூர், ஒலுவில், சாளம்பைக்கேணி, மத்திய முகாம் போன்ற பிரதேசங்களுக்கும் ஜனாஸா நலன்புரிக்காக இவ்வாறான உதவிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவை தவிர இந்த அமைப்பினால் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் குடிநீர் வசதிகள் உட்பட பல்வேறு மனித நேய சமூகப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment