கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் இடமாற்றம் பிரதேச மக்கள் மீதான அடக்குமுறை



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலாளராகக் கடமையாற்றும் எஸ்.எச்.முஸம்மில் அவர்களை மாகாண சபையின் கீழுள்ள திணைக்களத்துக்கு இடமாற்ற எடுக்கும் முயற்சியானது, பிரதேச மக்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறையாகவே நோக்க வேண்டியுள்ளது.

இது உடனடியாக இரத்துச் செய்யப்பட்டு அதே செயலகத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டுமென வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் 14 பிரதேச செயலகங்களில் 10 தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேச செயலகப் பிரிவுகளாகவும் 04 முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பிரதேச செயலகப் பிரிவுகளாகவும் காணப்படுகின்றது.

தமிழ் மக்கள் செறிந்து பிரதேசங்களில் எந்தவொரு முஸ்லிம் பிரதேச செயலாளரும் கடமையாற்ற முடியாதவொரு நிலையும், திட்டமிட்ட வகையில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் காத்தான்குடி, கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகங்களில் தமிழ் பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கும் தமிழ் பிரதேச செயலாளர் ஒருவரை நியமித்து தமது அடைவுகளை அடைந்து கொள்ள முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.

இவ்வாறாக ஒரு தலைப்பட்சமான அதிகார சூழலே மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்றது. அண்மையில் கூட கோறளைப்பற்று வடக்கு, வாகரை பிரதேச செயலகத்துக்கு உதவிப்பிரதேச செயலாளராக முஸ்லிம் ஒருவர் நியமனம் பெற்று வந்த போது, தடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முஸ்லிம் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் பிரதேச செயலாளர்களை மாகாண அமைச்சுக்களுக்கு இடமாற்றி, முஸ்லிம் பிரதேச செயலகங்களில் மாகாண அமைச்சுக்களிலுள்ள அதிகாரிகளை நியமிக்கும் மறைமுக அஜந்தாவும் அதனூடாக முஸ்லிம் பிரதேச செயலகங்களின் சீரான செயற்பாடுகளைச் சீர்குலைக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றது.

அதன் தொடரிலேயே கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளரை இடமாற்ற எடுக்கும் சதியினை நோக்க வேண்டியுள்ளது. கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகம் எல்லை ரீதியான பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், பிரதேச செயலாளரை இடமாற்றுவதனூடாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நிலப்பரப்பை கபளீகரம் செய்து, குறித்த பிரதேச செயலகத்தை இல்லாமல் செய்து, ஒரே பிரதேச செயலகமாக மாற்றி முஸ்லிம் மக்களை நிருவாக அடக்குமுறைக்குள் தள்ளும் செயற்பாடுகளே அண்மைக்காலமாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கு திரைமறைவில் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலக அலுவலகக் கட்டடத்தை அவசரமாக இடமாற்ற எடுத்த முயற்சியையும் கூறலாம். ஓட்டமாவடி பிரதேச செயலகத்தை அவசரமாக காகித ஆலை வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள புதிய நிருவாகக் கட்டடத்தினுள் முற்றாக கட்டட பணிகள் முடிவடையாமல் இடமாற்றி இரு பிரதேச செயலகங்களும் ஒரு குறிப்பிட்ட ஒரே தூர எல்லையில் அமைந்துள்ளதைக் காரணங்காட்டி கோறளைப்பற்று மத்தியை இல்லாமலாக்கும் சதியும் அரங்கேற்றப்பட்டதுடன், அதற்கு மறைமுகமாக பிரதேச செயலாளரே துணை போனதையும் நாம் அவதானித்தோம்.

இது விடயம் தொடர்பில் நாம் விழிப்படைய வேண்டும். கடந்த காலங்களில் விட்ட வரலாற்றுத்தவறுகளால் பல்வேறு இன்னல்களை கல்குடா முஸ்லிம்கள் அனுபவித்து வரும் நிலையில், மீண்டும் மீண்டும் அதே தவறுகளை விடாமல், இதன் பின்னணியிலுள்ள ஆபத்துக்களை உணர்ந்து செயற்பட வேண்டும்.

நியாயமான செயற்பாடுகளை முன்னெடுக்கும் பிரதேச செயலாளரை அப்புறப்படுத்தி, தங்களுக்குச் சாதகமான ஒரு தமிழ் அதிகாரியை மாகாண சபையிலிருந்து கொண்டு வந்து நியமிப்பதனூடாக தமது எண்ணங்களை அடைந்து கொள்ள எடுக்கும் முயற்சியாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது.

அதன் தொடரில் பல்வேறு முன்னெடுப்புக்களை தமிழ்த்தரப்பு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் திரைமறைவிலும் வெளிப்படையாகவும் முடுக்கி விட்டுள்ளதை அறிய முடிகின்றது. அண்மையில் இம்மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தூண்டுதலில் புணானையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையும் அண்மைய தினங்களில் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனைப் பிரதேசத்தில் வினியோகிக்கப்பட்ட துண்டுபிரசுரத்தையும் நோக்க வேண்டியுள்ளது.

துண்டுப்பிரசுரங்களூடாகவும் அரசியல் அடக்குமுறை, நிருவாக ஒடுக்குமுறையூடாகவும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களை ஒடுக்கி, நில அபகரிப்பை மேற்கொள்ள எடுக்கும் முயற்சியின் ஓரங்கமே பிரதேச செயலாளரின் இடமாற்றம்.

இம்மாவட்டத்தில் சுமார் 12 வருடங்கள் தொடர்ச்சியாக ஒரே மாவட்டத்திற்குள் கடமையாற்றிவர்களை இடமாற்றம் செய்கின்றோம் என்ற போர்வையிலேயே குறித்த பிரதேச செயலாளரை மாத்திரம் இங்கிருந்து அப்புறப்படுத்த சதி மேற்கொள்ளப்படுகின்றது. அதே நேரம், இதே மாவட்டத்திற்குள் சுமார் ஆறுக்கும் மேற்பட்ட தமிழ் பிரதேச செயலாளர்கள் 12 ஆண்டுகளுக்கும் அதிக காலம் இடமாற்றமின்றி கடமை புரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இவற்றையெல்லாம் ஒத்துமொத்தமாக நோக்குகையில், கோறளைப்பற்று மத்திக்கான பிரதேச செயலாளரும் இம்மாவட்ட முஸ்லிம்களுமே இலக்கு என்பதை அவதானிக்க முடிகின்றது. ஆகவே, பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை உடனடியாக இரத்துச்செய்து அதே பிரதேச செயலகத்தில் கடமையாற்ற அனுமதிக்க வேண்டும் எனக்கேட்டுக் கொள்வதோடு, மாறாக, இடமாற்றம் இடம்பெறுமாக இருந்தால், முஸ்லிம் பிரதேச செயலாளர் ஒருவரையே நியமிக்க வேண்டுமென இப்பிரதேச மக்கள் கோரி நிற்கின்றனர்.

குறித்த பிரதேச செயலகத்துக்கு முஸ்லிம் பிரதேச செயலாளர் ஒருவர் நியமிக்கப்படாத விடத்து மக்கள் வீதிக்கு இறங்கிப் போராடுவதைத் தவிர்க்க முடியாத சூழல் உருவாகும். அத்தோடு, இதன் விளைவாக ஏற்படும் அத்தனைக்கும் மாவட்டத்தில் அதிகாரமிக்கவர்கள் பொறுப்புக்கூற வேண்டிய நிலையும் உருவாகும்.

இது விடயத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழு ஒருங்கிணைப்புத் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட், பிரதேச அரசியல்வாதிகள், கல்குடா ஜம்இய்யதுல் உலமா, சிவில் சமூக அமைப்புக்கள் என அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டுமென்பதுடன், இம்மக்களின் நியாயமான கோரிக்கை உதாசீனப்படுத்தப்பட்டு முஸ்லிம் அல்லாத பிரதேச செயலாளர் ஒருவர் நியமிக்கப்படுவராக இருந்தால் மக்களை ஒன்று திரட்டி தீர்வு கிடைக்கும் வரை போராட முன் வர வேண்டுமெனவும் அவர் மேலும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :