பிரதேச மட்ட அரசியலில் ஈடுபடும் பெண் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பெண் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் டிஜிட்டல் அறிவினை மேம்படுத்துவதற்கான திட்டமொன்றை, " கபே தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டங்களில், கடந்த சில வாரங்களாக முன்னெடுத்து வருகின்றது.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய முதலாம் கட்ட நிகழ்வு இன்று சனிக்கிழமை(26.02.2022), காலை இடம் பெற்றது.
ஏறாவூர் நகரசபை மண்டத்தில் இந்த செயலமர்வு காலை 9 மணிக்கு ஆரம்பித்து, பிற்பகல் ஒரு மணியளவில் மதியபோசனத்துடன் நிறைவு பெற்றது.
இந்த செயலமர்வில் சமூக ஊடகங்களின் முக்கியத்துவம், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு சமூக ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் ஊடக கோட்பாடுகள் உற்பட, ஊடக மாநாடுகளில் உரையாற்றுகின்ற விதம் மற்றும் தகவல் அறியும் சட்டம் போன்றன தொடர்பிலும் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.
வளவார்களாக, புத்தசாசன பண்பாட்டு அழுவல்கள் அமைச்சின் இணைப்புச்செயலாளரும் சிரேஷ் ட ஊடகவியலாளருமான ஜே.ஜே. யோகராஜா மற்றும் "விடியல் "இணையத்தள ஆசிரியர் ரிப்தி அலி ஆகியோரும் கலந்து கொண்டு பல விளக்கங்களை அளித்தனர்.
அத்துடன் கடந்த தேர்தலின்போது, கண்காணிப்புத்தொண்டர்களாக கடமையாற்றிய இளைஞர்கள் பதினொரு பேருக்கும் , "நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான, 'கபே ' தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பினால் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது.
இச்சான்றிதழ்களை மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் திரு கே.கருணாகரன் , சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு ஜே.ஜே. யோகராஜா,மட்டு மாவட்ட உதவித்தேர்தல்கள் ஆணையாளர் எம். பி.எம்.ஸுபியான், உள்ளூராட்சி மன்ற திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு பி. விக்ணேஸ்வரன் மற்றும் கபே அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மனாஸ் மக்கீன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
முதலாவது சான்றிதழை சென் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் தலைவர் மீராசாகிபு அவர்கள், மகிழ்வுடன் பெற்றுக்கொண்டதுடன் ஏனைய கண்காணிப்புத்தொண்டர் இளைஞர்களும் நன்றியுடன் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்பாளர்களாக பிரதேச மட்ட அரசியலில் ஈடுபடக்கூடிய, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பெண் உறுப்பினர்கள் உற்பட,மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியலில் ஆர்வமுள்ள, பல பெண் சமூக செயற்பாட்டாளர்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
மேலும் , தமது அனுபவங்கள் மற்றும் தாம்அஅரசியலில் முகம் கொடுக்கும் பிரச்சனைகள் பற்றியும் தெளிவாக வழவாளர்களுடன் கலந்துரையாடி, பிரச்சனை தீர்வுகளுக்கான விளக்கங்களை பெற்றுக்கொண்டனர்.
அத்துடன் இதில் கலந்து கொண்ட பல பங்கேற்பாளர்களுக்கும், இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் குறிக்கோளானது, மிகவும் பிரயோசனமானதாக அமைந்துள்ளதாகவும் ,இவ்வாறான திட்டங்களுடன் கூடிய செயலமர்வுகள் தமது அரசியல், சமூக வாழ்க்கைக்கு இன்றிமையாத ஒன்றாக இருப்பதாகவும், இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்தமைக்காக, "கபே" அமைப்பினர்க்கு தமது நன்றியை தெரிவித்தனர்.
மேலும், இந்த நிகழ்வை மாவட்ட மட்டத்தில் ஏற்பாடு செய்த இணைப்பாளர் ஜே.எப். காமிலா பேகம் கருத்துத் தெரிவிக்கையில், இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் போது , இணையவழி வன்முறைகளை தொழில்நுட்ப ரீதியாக எவ்வாறு முகம் கொடுப்பது என்பது பற்றியும் , அதேபோன்று மூன்றாம் கட்டத்தில் ஊடக இணையவழி வன்முறைகளுக்கு முகம் கொடுக்கின்ற போது, அவற்றுக்கு சட்ட ரீதியாக எவ்வாறு நடவடிக்கைகளை முன் எடுப்பது போன்றன தொடர்பிலும் பங்கேற்பாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்படவுள்ளது, என்பதையும் பங்கேற்பாளர்களுக்கு தெரிவித்தார்!
0 comments :
Post a Comment