சாய்ந்தமருது-
ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்துவந்த சகோதரர்கள் தங்களது சொத்துக்களை பிரித்துக்கொண்டு தனிக்குடும்பமாக வாழ்ந்துவந்தாலும், குடும்ப உறவுக்குள் பகைமை ஏற்பட்டுவிடாமல் சகோதரர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று மூத்த சகோதரன் எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லை.
எங்கேயோ இருந்துவந்த பணக்கார வியாபாரிகள் சகோதரர்களுக்கிடையிலான உறவுகளை பிரித்து மூத்த சகோதரனை அழிப்பதற்கு இளைய சகோதரனை பயன்படுத்த முற்படும்போது, அதனை அறிந்துகொண்ட மூத்த சகோதரன் தனது இளைய சகோதரனை கண்டிப்பதிலும், தண்டிப்பதிலும் எந்த தவறுமில்லை.
இங்கே மூத்த சகோதரனாக ரஷ்யாவும், இளைய சகோதரனாக உக்ரேனும், பணக்கார வியாபாரிகளாக நேட்டோ நாடுகளும் உள்ளன.
சோவியத் யூனியனின் குடியரசுகளில் ஒன்றான உக்ரேன், 1991 இல் சோவியத் யூனியன் பல கூறுகளாக பிரிந்து தனியான சுதந்திர நாடுகளாக உருவானபோது அதில் உக்ரேனும் தனிநாடானது.
இரண்டாம் உலகமகா யுத்தத்துக்கு பின்பு சோவியத் யூனியனுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் கடுமையான பனிப்போர் நிலவியது. இதில் சோவியத் யூனியனுக்கு எதிராக வட அத்லாந்திக் நாடுகளின் கூட்டமைப்பான நேட்டோ (North Atlantic Treaty Organization - NATO) அமைப்பினை அமெரிக்கா உருவாக்கியது.
1949 இல் 12 நாடுகளை அங்கத்தவர்களாகக் கொண்டு இராணுவ கூட்டமைப்பாக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் தற்போது 30 நாடுகள் அங்கம் வகிக்கின்றது. “வட அத்லாந்திக்” என்று பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அப்பிராந்தியத்தில் இல்லாத நாடுகளும் நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கின்றது.
1991 இல் சோவியத் யூனியன் பல நாடுகளாக பிரிந்ததன் பின்பு அதற்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ கூட்டமைப்பினை கலைத்திருக்க வேண்டும். ஆனால் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து சென்ற நாடுகளையும் நேட்டோ கூட்டமைப்பில் இணைத்து ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா செயல்படுவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
அதன் காரணமாகவே உக்ரேனை நேட்டோவில் இணைக்க கூடாதென்றும், 1997 க்கு பின்பு நேட்டோவில் இணைக்கப்பட்ட நாடுகளை அதிலிருந்து விலக்க வேண்டுமென்றும் ரஷ்யா வலியுறுத்தியது. ஆனால் இதனை நேட்டோ நிராகரித்தது.
நேட்டோ அங்கத்துவ நாடுகளுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால், அதன் கூட்டமைப்பு நாடுகள் அனைத்தும் அங்கத்தவ நாடுகளை பாதுகாப்பதற்கு இராணுவ உதவிகளையும், படைகளையும் உதவிக்கு அனுப்பும்.
அதுபோல் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்துசென்ற நாடுகளுக்கு ஏற்படும் ஆபத்துக்களை ரஷ்யா எதிர்கொள்ளும். அந்தவகையில் கடந்த வருடம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் முன்னேறிக்கொண்டு வந்தபோது அதன் எல்லை நாடுகளான தஜிகிஸ்தான், உஸ்பகிஸ்தான், துர்க்மேனிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு தலிபான்களினால் வருகின்ற ஆபத்தினை தடுக்கும் பொருட்டு அந்நாடுகளின் எல்லைகளில் ரஷ்ய படைகள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டது.
இது போன்று உக்ரேனும் ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட வேண்டுமென்றும், தனது எதிரி நாடுகளுக்கு உக்ரேனில் இடம் வழங்கக்கூடாதென்றும் ரஷ்யா விரும்புகின்றது. ஆனால் ரஷ்யாவை அச்சுறுத்தும் பொருட்டு முன்னாள் சோவியத் நாடுகளை நேட்டோ கூட்டமைப்பில் இணைத்துக்கொண்டு அங்கே தனது ஏவுகணை தளங்களையும், வான் பாதுகாப்பு மைய்யங்களையும் அமைப்பதற்கு மேற்கொள்ளும் அமெரிக்காவின் முயற்சியை தடுக்கும் பொருட்டே வேறு வழியின்றி உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது.
உக்ரேன் எல்லையில் தனது படைகளை குவிப்பதற்கு முன்பு ரஷ்யாவுடன் செய்துகொண்ட Minsk ஒப்பந்தத்தை நடைமுறை படுத்தும்படி ரஷ்யா உக்ரேனை வலியுறுத்தியது. ஆனால் இன்றைய உக்ரேன் ஆட்சியாளர் கடந்தகால ஆட்சியாலர்கள் போன்று அல்லாது அமெரிக்கா சார்பு மேற்கத்தேய போக்கினை கடைப்பிடித்து வருவதனை ரஷ்ய அதிபர் அனுமதிக்கவில்லை.
ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய நாடான உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினை “ஆக்கிரமிப்பு” என்று கூறமுடியாது. அவ்வாறு ஆக்கிரமிப்பு நடத்துவதென்றால் உக்ரேனைவிட நிலப்பரப்பில் சிறியதும், படை பலத்தில் பலயீனமான அயல் நாடுகளை ரஷ்யா ஆக்கிரமித்திருக்கலாம். ஆனால் உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பானது ஓர் தற்காலிக நடவடிக்கையாகும்.
அதாவது அமெரிக்கா சார்பான உக்ரேன் ஆட்சி தலைவரையும், சில இராணுவ அதிகாரிகளையும் களையெடுப்பு செய்துவிட்டு தனக்கு சார்பானவர்களை ஆட்சியில் அமர்த்திவிட்டு ரஷ்ய படைகள் அங்கிருந்து வெளியேறும் என்பது எனது கணிப்பாகும்.
0 comments :
Post a Comment