ஒற்றுமையில்லாதவர்களாக இருந்தால் இன்னுமின்னும் நாம் நசுக்கப்படுவோம். சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் சமூகம் விட்டுக்கொடுப்புடன் தான் வாழவேண்டும். அதற்காக நாம் அத்தியாவசிய உரிமைகளை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது. உதாரணமாக ஐந்து நேர தொழுகையை மூன்று நேரமாக தொழுங்கள் என்றால் எப்படி நாம் விட்டுக்கொடுப்பது. சில விடயங்களில் விட்டுக்கொடுத்து செல்லலாம் இருந்தாலும் எல்லாவற்றுக்கும் விட்டுக்கொடுக்க முடியாது என நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. தாஹீர் தெரிவித்தார்.
குவைத் நாட்டின் அந்-நஜாத் சர்வதேச தொண்டு நிறுவன நிதி அனுசரணையில் இலங்கை அந்நூர் சமூக அமைப்பினால் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்ட நிந்தவூர் ஸைத் இப்னு ஸாபித் குர்ஆன் மத்ரஸாவை மாணவர்களுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று (19) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொருளாதார ரீதியாக முஸ்லிங்களை நசுக்கும் வேலையை இப்போது நாங்கள் கண்டுகொண்டிருக்கிறோம். அது மட்டுமின்றி நிர்வாக கட்டமைப்பிலும் முஸ்லிம் பெயர்தாங்கியவர்களை நிர்வாகத்தில் உள்வாங்குவதிலும் சந்தர்ப்பங்கள் குறைவாக இருக்கிறது. முஸ்லிங்களின் பொருளாதாரத்தை இனங்கண்டு கட்டம் கட்டமாக ஒழித்துக்கட்டும் வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் கொழும்பு உட்பட முக்கிய நகரங்களில் இருந்த முஸ்லிங்களின் வர்த்தக நிலையங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. அதனூடாக நிறைய பொருளாதார நஷ்டம் ஏற்பட்டது.
இப்போது விவசாயிகள் இரசாயன உரத்தை பாவிக்க வேண்டுமா அல்லது சேதன பசளையை பயன்படுத்த வேண்டுமா என்று சிந்தித்து முடிவெடுக்க முன்னரே சேதன பசளையை பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதன் சாதக பாதங்களை அறியாமல் வற்புறுத்தப்பட்டு விவசாயிகள் இன்று இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் 20 சதவீதம் அம்பாறையில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றது. அதில் எமது பிரதேசத்தில் 90 வீதமாக நெல்லை உற்பத்தி செய்பவர்கள் முஸ்லிங்கள். இப்போகத்தின் விளைச்சல் சரிபாதியாக குறைந்துள்ளது. இவற்றுக்கெல்லாம் காரணம் உங்களுக்கிடையில் ஒற்றுமை இல்லாதது தான். இஸ்லாம் கூறும் அடிப்படையில் வாழ்ந்தால் எல்லோருக்கும் நன்மை கிட்டும் என்றார்.
அரச காரியாலயங்கள், பாடசாலைகள், பள்ளிவாசல்களுக்கு இலவச குடிநீர் வழங்குதல் மற்றும் பல சமூக நல வேலைத்திட்டங்களை அந்நூர் சமூக அமைப்பு மக்களுக்காக தொடர்ந்தும் பல ஆண்டுகளாக நாடாளாவிய ரீதியில் செய்து வருகின்றது. அவர்களின் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக அந்நூர் சமூக அமைப்பின் பிரதேச இணைப்பாளர் ஐ.எல். றஸ்மி (றிசாட்) யின் ஒழுங்கமைப்பில் இலங்கை அந்நூர் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.எம். அலியார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குர்ஆன் பாடசாலை மாணவர்களின் நலன்கருதி இவ்வேலைத்திட்டத்தை பாடசாலை நிர்வாகிகளிடம் உத்தியோகபூர்வமாக இன்று கையளித்தார்.
இந்நிகழ்வில் ஏறாவூர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.ஐ. தஸ்லீம், இலங்கை அந்நூர் சமூக அமைப்பின் தேசிய இணைப்பாளர் ஏ.எம். நளீம், அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ. எல். என். ஹுதா, அந்நூர் சமூக அமைப்பின் செயற்பாட்டாளர்கள், உலமாக்கள், உட்பட மதரஸா ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment