பாட்டனார் படிப்பித்த பாடசாலைக்கு உதவுவோம்!
ஜக்கிய இராச்சியத்தின் சர்வதேசஅழகி இவஞ்சலின் லட்சுமணர்.
இலங்கைக்கு முதல் தடவையாக விஜயம் செய்துள்ளேன். இலங்கை இயற்கைஎழில்மிகுந்த வளமான நாடு. கனிவான மக்கள்.நல்ல விருந்தோம்பல் பண்பு. இலங்கையை எனக்கு நன்கு பிடித்துள்ளது. எனது பூர்வீகம் இலங்கைதான்.அதுவும் நாவிதன்வெளி. எனது பாட்டனார் ராஜசிங்கம் அதிபராயிருந்து படிப்பித்த பாடசாலைக்கு இன்னும் உதவுவோம். மக்களுக்கும் நிறைய உதவுவோம்.
இவ்வாறு கூறுகிறார் ஜக்கிய இராச்சியத்தின் சர்வதேசஅழகி (Miss International UJ -2020-2022)செல்வி இவஞ்சலின் லட்சுமணர் .
ஆசியாவிலிருந்து இந்த உயர்விருதுக்குத் தெரிவான முதல் பெண் இவஞ்சலின். 21வயதேயான இவஞ்சலின் நடிப்பு மற்றும் தொலைக்காட்சி துறையில் கனடாவில் பட்டப்படிப்பை பூர்த்திசெய்தவர். லண்டனில் இவங்சலின் பெஷன் லிமிட்டட் (Evanjelin Fashion Ltd)நிறுவனத்தின் ஸ்தாபகராகவும் இயக்குனராகவும் இருக்கிறார். சிறந்த ஒரு பரோபகாரி.தமிழ் ஓரளவுதெரிகிறது. லண்டனில் பிறந்துவளர்ந்தவர். அழகியல்துறையில் சிறந்துவிளங்கும் இவர் ரெனிஸ் கூடைப்பந்து கிரிக்கட் காற்பந்து வலைப்பந்து போன்ற விளையாட்டில் தலைமைத்துவத்தை வகித்து சாம்பியான விருதுபெற்றவர்.
2017-18 வருடத்திற்கா Miss Teen Great Britain CROWN பெற்றவர்.2016-17இல் Miss Junior Teen Great Britain CROWN 1st runnerup பெற்றவர்.
லண்டன் பிஷப் சொலனரில் நடைபெற்ற 18வயதுக்குட்பட்ட பெண்களுக்கான காற்பந்தாட்டத்தில் மிட்லண்ட கப்பை வென்றெடுத்தவர். அதேவேளை கிரிக்கட்ட சுற்றுப்போட்டியிலும் மிட்லண்ட கப் (Midland cup)பெற்றவர்.
எதிர்வரும் அக்டோபரில் யப்பானில் நடைபெறவிருக்கும் உலகஅழகி தெரிவுப்போட்டியில் கலந்துகொள்ளவிருக்கும் பிரித்தானிய உலகஅழகி இவஞ்சலினை நாவிதன்வெளியில் சந்தித்து பேசிளோம்.
நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில்(தேசியபாடசாலை) அவரால் நிறுவப்பட்ட 10அடி உயர சரஸ்வதி சிலையை கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பகல் திறந்துவைத்தார்.
1970களில் நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் அதிபராயிருந்த ராஜசிங்கம் அவர்களின் பேத்தியான இவர் பாரியபிரித்தானியாவின் அழகுராணியாக மூன்று தடவைகள் தெரிவுசெய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
முள்ளாள் அதிபர் ராஜசிங்கத்தின் மகன் ஜீவராஜூ சாந்தி ராஜகருணா தம்பதியினரின் மகளான உலகஅழகுராணி இவஞ்சலின் லண்டனில் பிறந்துவளர்ந்தவர். கிரிக்கட் வலைப்பந்து போன்ற விளையாட்டுகளில் மிகுந்த ஈடுபாடுகொண்ட அவர் அழகுக்கலையில் முத்திரைபதித்தவர்.
ராஜசிங்கத்தின் குடும்பத்தினர் இப்பிராந்தியத்தில் வசதியில்லாத மக்களுக்கு வடு கட்டிக்கொடுத்தல் பாடசாலைகளுக்கு உதவுதல் போன்ற சமுகசேவைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன் ஓரங்கமாக இப்பாடசாலையில் 10அடி உயர சரஸ்வதி சிலை நிறுவ நிதியுதவி நல்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளியைச்சேர்ந்த ஜக்கிய இராச்சியத்தின் இவ்வாண்டுக்கான சர்வதேச அழகி செல்வி இவஞ்சலின் லட்சுமணர் இதற்கென இலங்கை வந்திருந்தார். அவருடன் அவரது தாயார் சாந்திராஜகருணாவும் வருகைதந்தனர். இலங்கை சுற்றுலாஅதிகாரசபை அவர்களுக்கான விருந்தினர் அங்கீகாரத்தை வழங்கியுள்ளதுடன் கூடவே அதன்பிரதிநிதிகளும் வந்திருந்தனர்.
முன்னதாக அதிதிகள் பாண்ட் வாத்தியம் சகிதம் மாலைசூட்டி பூச்செண்டு வழங்கி கோலாகலமாக வரவேற்கப்பட்டனர்.
பாடசாலை வளாகத்தில் நிறுவப்பட்ட சரஸ்வதித்தாயின் சிலை திறப்புவிழா வித்தியாலய அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக சரஸ்வதித்தாயின் சிலையை உலகஅழகுராணி இவஞ்சலின் திறந்துவைக்க சிலைக்கான நினைவுபடிமக்கல்லை அவரது தாயார் சாந்திராஜகருணா திரைநீக்கம் செய்துவைத்தார்.
தமிழ்ப்பாட ஆசிரியை திருமதி ஜெயரஞ்சினி தயாபரன் வரவேற்புரைவழங்க சிரேஸ்டஆசிரியர் நடராஜா கோடீஸ்வரன் நிகழ்ச்சியை நெறிப்படுத்தித் தொகுத்தளித்தார்.
சம்மாந்துறை வலய உதவிக்கல்விப்பணிப்பாளரும் பாடசாலைஇணைப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா கௌரவஅதிதியாகக்கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பிரதிஅதிபர் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் விசேடஉரை நிகழ்த்தினார்.
மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் மேடையேறின. உலகஅழகி வருகைதந்து அவர் நிருமாணித்த சரஸ்வதி சிலையைத்திறந்துவைத்தமைக்காக உலகஅழகி இவஞ்சலின் அவரது தாயார் சாந்தி ஆகியோருக்கு பாடசாலைச்சமுகம் பொன்னாடை போர்த்துக்கௌரவித்தது.
உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா அவர்களுக்கு நன்றியுடன்கூடிய வாழ்த்துப்பத்திரத்தை வழங்கிவைத்தார்.
பின்னர் உலகஅழகி இவஞ்சலின் 'வணக்கம் நன்றி' எனும்வார்த்தைகளை தமிழில் பேசி உரையை ஆங்கிலத்தில் பேசினார். சகோதாரஇனத்தைச்சேர்ந்த அவரது தாயார் சாந்திராஜகருணா தமிழில் அழகாக உரையாற்றினார். பாடசாலைக்குத் தேவையான மேடை மற்றும் ஒலிபெருக்கி வசதிகளையும் செய்துதருவதாக அவர் உறுதியளித்தார்.உபஅதிபர் பி.ஜெகதீசன் நன்றியுரையாற்றினார். உலகஅழகியின் உறவினரான ஆசிரியை சிவானந்தி ருபனின் விருந்துபசாரமும் இடம்பெற்றது.
விழாவில் உலகஅழகி இவஞ்சலின் பாட்டனார் முன்னாள் அதிபர் ராஜசிங்கத்திற்கு ஆத்மார்த்த அஞ்சலி செலுத்தப்பட்டர். அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் அக்டோபரில் யப்பானில் நடைபெறவிருக்கும் உலகஅழகி தெரிவுப்போட்டியில் கலந்துகொள்ளவிருக்கும் பிரித்தானிய உலகஅழகி இவஞ்சலின் வெற்றிபெறவேண்டி அங்கு இறை பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டது.
அதன்பின்னர் அவர்களால் குடியிருப்புமுனையில் நிருமாணிக்கப்பட்ட வீடொன்றினை வசதிகுறைந்த குடும்பமொன்றிற்கு வழங்கிவைத்து அதற்கான தளபாடங்களையும் வழங்கிவைத்தனர்.
உலகஅழகியின் உறவினரான ஆசிரியை சிவானந்தி ருபனின் வீட்டில்வைத்து உலகஅழகியுடன் நேர்முகத்திற்காக சந்தித்தேன். அவருடன் அவரது தாயார் சாந்தி ஜீவராஜூம் உடனிருந்தார்.
கேள்வி: வணக்கம் நீங்கள் இலங்கைக்குவரும் முதல் தடவையா?இலங்கை விஜயம் எப்படி அமைந்தது?
பதில்: வணக்கம் இதுதான் இலங்கைக்குவரும் முதல் பயணம். எனது அம்மா பிறந்த காலி தொடக்கம் எனது அப்பா பிறந்த நாவிதன்வெளி வரை இதுவரை இரண்டரை வார காலபயணத்தில் சுகமான அனுபவம் பெற்றேன். நாளை யாழ்ப்பாணம் சென்று மீண்டும் கொழும்பு செல்லவிருக்கிறேன்.
இலங்கை வளமான நாடு.நல்லமக்கள்.எங்கும் இன்முகத்தோடு வரவேற்கும் நல்ல உள்ளம்கொண்ட மக்கள்.
கேள்வி: கண்டி தலதா மாளிகைக்கும் சென்றதாக அறிகிறோம்..
பதில்: ஆம் அழகான வணக்கஸ்தலம். அங்கு பெருவரவேற்புமளித்தாhர்கள். கண்டியன் சாறி அணிந்து மகிழ்ந்தேன்.
கேள்வி: நாவிதன்வெளியில் உங்களுக்கான வரவேற்பு எப்படி இருந்தது?
பதில்: உச்சக்கட்ட மனம்பிடித்த வரவேற்பு. சரஸ்வதி சிலையை நானும் தாயாரும் திறந்துவைக்க கிடைத்தது ஒரு வரப்பிரசாதம்.நல்ல விருந்தோம்பல். எனது பாட்டனார் ராஜசிங்கம் லட்சுமணர் அதிபராயிருந்து கற்பித்த நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்திற்கு என்ன உதவி தேவையென்றாலும் செய்வோம். அங்கு மேடை ஒலிபெருக்கி தேவையென்றார்கள். அதனைச்செய்ய சித்தமாயிருக்கிறோம்.மேலும் உதவிசெய்யக்காத்திருக்கிறோம்.
கேள்வி: பாடசாலைக்கு முக்கியத்துவம் கொடுக்கக் காரணம் என்ன?
பதில்: நான் உலக அழகியாயிருந்தாலும் எனக்கு கைகொடுத்தது கல்விதான். நான் பெஷன்டிசைன் நவீன வடிவமைப்பு பாடம்தான் படித்தேன்.பின்பு கனடாவில் நடிப்பு மற்றும் தொலைக்காட்சி துறையில் பட்டப்படிப்பை கடந்தவருடம் பூர்த்திசெய்தேன்.அதனால் சிறந்த தொழில்வாய்ப்பு தேடிவருகிறது. எனினும் இறையருளால் இந்த அழகுத்துறையும் எனக்கு வாய்ப்பளித்துள்ளது.
கேள்வி: தங்களுக்கு எத்தனை வயது? இது இக்கிய இராச்சியத்தில் அழகுராணியாக தெரிவானது முதல் தடவையா?
பதில்: எனக்கு 21வயது.கடந்த 3தடவைகள் இந்த கிரீடத்தைசூடியுள்ளேன்.2020-21க்காக நான் இறுதியாக 56போட்டியாளர்களுடன் போட்டியிட்டு முதல் ஆசியப்பெண்ணாகத் தெரிவானேன். அது சந்தோசமாகவிருக்கிறது. கொவிட் காரணமாக இவ்வாண்டுக்கும் அதனை நீடித்துள்ளார்கள்.
கேள்வி: இன்னமும் அழகுராணிபோட்டியில் கலந்துகொள்ளும் எண்ணம் இருக்கிறதா?
பதில்: எதிர்வரும் அக்டோபரில் யப்பானில் நடைபெறவிருக்கும் உலகஅழகி தெரிவுப்போட்டியில் கலந்துகொள்ளவிருக்கிறேன்.
கேள்வி: தங்கள் பொழுதுபோக்கு என்ன?
பதில்:அழகுக்கலை மற்றவர்களுக்கு உதவுதல் ஆடைவடிவமைப்பு கலையிலீடுபடுதலும் பயணித்தலும்
கேள்வி: நீங்கள் ஒரு சிறந்த பரோபகாரி என அறிகிறோம்? அந்த சிந்தனைபண்பு எப்படி வந்தது.?
பதில். அந்தப்பண்பு எனது அம்மாவிடமிருந்துவந்தது. 2014இல் 60ஆயிரம் டொலர்களுக்கு மேல் நிதிச்சேகரிப்புசெய்து எண்ணற்ற தானதருமங்களைச் செய்தோம். Together for Short lives Christie Charity செயற்றிட்ஙகளினூடக மக்களுக்கு உதவியுள்ளோம்.E.Francia Foundation ஜ ஆரம்பித்து சுயஉதவி செய்துவந்தேன்.
கேள்வி : தங்கள் எதிர்கால லட்சியம் என்ன?
பதில்: இறைவன் என்னைப்படைத்தது மக்களுக்கு உதவிசெய்வதற்காக. எனவே முடிந்தளவு சமுகசேவை செய்யக்காத்திருக்கிறேன்.
நேர்காணல்: வி.ரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர்
0 comments :
Post a Comment