இத்தனை காலமும் கவிதையினூடாக தான் கொண்டிருந்த புலமையை உலகறியச்செய்த கதீர், 27.02.2022 இல் காக்கை நிறச் சேலை எனும் சிறுகதைகள் அடங்கிய நூல் ஒன்றினை வெளியிட்டு இலக்கியத்துறையில் இன்னுமோர் படியைத் தொட்டுள்ளார்.
கலைஞர்கள் ,பல்துறைகளையும் சார்ந்தவர்கள் மற்றும் வாசகர்கள் நண்பர்கள் உறவினர்கள் புடைசூழ; கவிஞரும் வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் அஸாத் எம் ஹனீபாவின் தலைமையில் கவிஞர் கதீரின் காக்கை நிறச் சேலை எனும் சிறுகதைகள் அடங்கிய நூல் வெளியீட்டு நிகழ்வு சாய்ந்தமருது லீமெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
கவிஞர் விஜிலியின் அரங்கழைப்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வின் வரவேற்புரையை பல்துறை எழுத்தாளர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் நிகழ்த்திய அதேவேளை தலைமையுரையை கவிஞரும் வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் அஸாத் எம் ஹனீபா நிகழ்த்தினார். இவரது உரையில் நூலாசிரியர் பற்றியும் அவர் எழுத்துத்துறையில் கொண்டுள்ள ஆர்வம் குறித்தும் சிலாகித்துப் பேசினார். அத்துடன் நிகழ்வுக்கு வந்துள்ளவர்களின் வரவே எழுத்தாளருக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் என்றும் தெரிவித்தார்.
நூல்பற்றிய விமர்சனங்களை ரியாஸ் குரானா, டணிஸ்கரன், கே.எல். நப்லா, மு.மு.மு. பாசில், ஏ.எம். சாஜித் அஹமட் மற்றும் சிறாஜ் மசூர் என்ற கலைஞர் பட்டாளமே வழங்கிச் சென்றது.
நூலின் முதற் பிரதியை நூலாசிரியரின் மனைவி சர்ஜானா பெற்றுக்கொண்ட அதேவேளை குறித்த நூல் அவரது மனைவிக்கே சமர்ப்பணம் செய்யப்பட்டிருந்தது.
1. ஆக்கா
2. கரு நொச்சி
3. குலை மாறிக் காய்த்த தென்னை
4. ஞாயிறும் புதனும்
5. பூனைக் குடில்
6. பேரன்-மகன்-வீடு
7. பேராசிரியரின் கொலை
8. மெல்லுணர்வு
ஆகிய சிறுகதைகளை உள்ளடக்கிய இத் தொகுதியை அநுசரி வெளியீட்டகத்தின் வெளியீடாக அமைந்திருந்தது. ஜீவமணியின் முகப்பு வடிவப்புடன் கூடிய இந்நூல் பல விமர்சகர்களின் பாராட்டுக்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment