எதிர்வரும் 10 வருட காலத்தில் 150,000 எதிர்கால தலைவர்களை மலர செய்வதற்கு தலைமைத்துவ மேம்பாட்டுக்கான தேசிய மத்திய நிலையம் திடசங்கற்பம் பூண்டு செயற்படுகின்றது என்று இதன் பணிப்பாளர் எம். ஐ. எம். அஷ்ரப் தெரிவித்தார்.
தலைமைத்துவ மேம்பாட்டுக்கான தேசிய மத்திய நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து நிலையத்தின் புதிய வேலை திட்டங்கள் தொடர்பாக பேசியபோது பணிப்பாளர் அஷ்ரப் மேலும் தெரிவித்தவை வருமாறு
முன்னாள் ஜனாதிபதி ஆர். பிறேமதாஸவின் கம்முதாவ வேலை திட்டத்தின் கீழ் எம்பிலிப்பிட்டியவில் 35 ஏக்கர் நிலத்தில் உருவாக்கப்பட்ட கிராமிய தலைவர்களை பயிற்றுவிப்பதற்கான சர்வதேச பயிற்சி நிலையமே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் காலத்தில் தலைமைத்துவ மேம்பாட்டுக்கான தேசிய மத்திய நிலையமாக புதிய பொலிவு பெற்றது.
கம்முதாவ வேலை திட்டத்தின் கீழ் பல அமைப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால் அவற்றுள் இப்போது வரை நின்று நிலைத்து நீடித்து தொடர்ந்தும் சேவையாற்றி வருகின்ற வரலாற்று பெருமை தலைமைத்துவ மேம்பாட்டுக்கான தேசிய மத்திய நிலையத்தையே சேரும்.
கிராமிய தலைவர்களை பயிற்றுவிப்பதற்காக என்றே ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட போதிலும் பிற்காலத்தில் மாணவர்கள், இளையோர்கள் மிக அதிக அளவில் பயிற்சிகளை பெற வந்ததாலேயே அனைவருக்கும் பொருந்த கூடிய வகையில் 2013 ஆம் ஆண்டு பெயர் மாற்றப்பட்டு பரிணாமம் அடைந்தது என்பது குறிப்பிட்டு சொல்ல தக்க மைல்கல் ஆகும். இளைஞர் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சராக விளங்கிய டலஸ் அழகபெரும விசேட அமைச்சரவை தீர்மானம் மூலமாக இம்மகத்தான கைங்கரியத்தை மேற்கொண்டார்.
ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் ஒவ்வொரு இளம் தலைவரை தெரிவு செய்து வருடாந்தம் 15,000 இளம் தலைவர்களை உருவாக்கி 2022 - 2032 கால பகுதியில் மொத்தமாக 150,000 இளம் தலைவர்களை தயார் செய்து எதிர்கால தலைவர்களாக மலர செய்கின்ற வேலை திட்டம் இப்போது எம்மால் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இது தூர நோக்கு, தீர்க்கதரிசனம் நிறைந்த வேலை திட்டம் ஆகும். ஒழுக்க விழுமிய நற்பண்புகளை ஓம்பி நடப்பவர்களாகவும், 21 நூற்றாண்டுக்கு தேவையான திறன்களை கொண்டவர்களாகவும் இந்த எதிர்கால தலைவர்கள் மிளிர்வார்கள்.
இவ்வேலை திட்டத்தோடு சேர்ந்ததாகவே தலைமைத்துவ மேம்பாட்டுக்கான தேசிய மத்திய நிலையத்தின் 37 வருட கால வரலாற்றில் முதன்முதலாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவ மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட தொடங்கி உள்ளன. இவை 05 நாள் வதிவிட பயிற்சி முகாம்களாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. தனிநபர் அபிவிருத்திக்கான பயிற்சிகள், சமூக அபிவிருத்திக்கான பயிற்சிகள், கள விஜயங்கள், தலைமைத்துவ மேம்பாட்டுக்கான விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சிகள், தியானம் உள்ளிட்ட ஆற்றுப்படுத்துகைகள், அரங்கேற்றங்கள் போன்ற பல அம்சங்களை இவை கொண்டிருக்கின்றன.
இதற்கு அமைய கடந்த 11 ஆம் திகதி முதல் 05 நாட்களுக்கு வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் 200 பேருக்கு முதலாவது பயிற்சி முகாமில் பயனாளிகளாக பங்கேற்கின்ற மகத்தான வாய்ப்பு கிடைத்தது. மூவினங்களையும் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றார்கள். இம்முகாமில் பங்கேற்றதன் மூலமாக பட்டை தீட்டப்பட்டு உள்ளார்கள் என்று மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.
எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் ருகுணு பல்கலைக்கழக மாணவர்கள் 200 பேருக்கு வதிவிட பயிற்சி முகாமை நடத்த ஏற்பாடாகி உள்ளது. இவ்விதமாக ஒவ்வொரு பல்கலைக்கழகத்தில் இருந்தும் பல நூறு மாணவர்கள் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டு பல்கலைக்கழக ரீதியாக பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். சிறந்த எதிர்கால தலைவர்களை உருவாக்குவதன் மூலமாக நாட்டில் சமூக நல்லிணக்கம், இன நல்லிணக்கம் ஆகியவற்றை நிலைநாட்டவும் முடியும்.
0 comments :
Post a Comment