20வது சீர்திருத்தத்திற்கு கை உயர்த்தியவர்கள் என்று றிஸாட் பதியுதீன் ஏசி திரிகின்றார். 20வது சீர்திருத்தத்திற்கு கை உயர்த்தியது தவறு என்றால் 17ம், 18ம், 19ம் சீர்திருத்தத்திற்கு நீங்கள் அமைச்சராக இருக்கும் போது கை உயர்த்தினீர்கள் அது சரியா என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் கேள்வியெழுப்பினார்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட அறபா நகரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள முஹைதீன் அப்துல் காதர் வித்தியாலய அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அறபா நகர் ஜும்ஆ பள்ளிவாயல் முன்றலில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் 20வது சீர்திருத்தத்திற்கு கை உயர்த்தியவர்கள் என்று ஏசி திரிகின்றார். 20வது சீர்திருத்தத்திற்கு கை உயர்த்தியது பிரச்சனை என்றால் 17ம், 18ம், 19ம் சீர்திருத்தத்திற்கு நீங்கள் அமைச்சராக இருக்கும் போது கை உயர்த்தினீர்கள் அது சரியா.
இதே பாராளுமன்ற உறுப்பினர்களை போக சொன்னதும் நீங்கள்தான். நாங்க இங்கால இருக்கம் என்று சொல்லி அனுப்பி போட்டு இப்போது ஒன்றும் தெரியாதது போன்று அரசியல் காய் நகர்த்தல்களை செய்கின்றனர். இப்போதை அரசியல் யதார்த்தினை கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
கோறளைப்பற்று மத்திக்கு 240 சதுர கிலோ மீற்றர் காணி வழங்கப்படிருக்க வேண்டும். இந்த விடயங்கள் தெரிந்த எந்தவொரு அரசியல் தலைமையும் முன்னெடுக்க முடியாத, வக்கில்லாத அரசியலை நடாத்திய வரலாற்றை முஸ்லிம் சமூகம் மறந்துவிட முடியாது. மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகம், அநியாயம், அநீதி தமிழ் சமூகத்தால் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் பதில் சொல்லியாக வேண்டும். மாவட்ட செயலகத்தில் நடாத்தப்பட்ட நயவஞ்சக தன்மையாக விடயங்கனை முழு உலகிற்கும் கொண்டு செல்ல தயாராக உள்ளேன். மட்டக்களப்பு மாவட்டத்தின் 26 வீதம் உள்ள எங்களுக்கு உரிய காணி வேண்டும். இவ்வாறான துரோகத் தனத்தினை முஸ்லிம் சமூகம் தெரியாதவர்களாக இருந்து விடக் கூடாது.
நாங்கள் கண் மூடித்தனமாக இருப்பதால் எங்களுடைய அரசியல் தலைமைகளும் ஏமாற்றியது மாத்திரமல்ல. மற்றைய அரசியல் தலைமைகளும் எங்களை ஏமாற்றி நாங்கள் முழித்திருக்கும் போது எங்களுடைய காணிகளை பிடுங்கிய வரலாறுகளையும் ஒரு போதும் மறந்து விட முடியாது.
20வது சீர்திருத்தத்திற்கு கை உயர்த்தவில்லையாயின் கோறளைப்பற்று மத்திக்கும், ஓட்டமாவடி பிரதேசத்திற்கும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவராக பிள்ளையான் அல்லது வியாளேந்திரன் வந்திருப்பார்கள். ஓட்டமாவடி பிரதேச சபைக்குரிய காணியை இன்னும் கள்ளத்தனமாக கிரான் பிரதேச செயலகம் வைத்துள்ளது.
20வது சீர்திருத்தத்திற்கு கை உயர்த்தியதால் எல்லாவற்றுக்கும் சரனடைந்து நிற்போம் என்று நினைக்க கூடாது. இந்த நாட்டினுடைய சட்டத்தினை இயற்றுவதற்கு ஞானசார தேரருக்கு என்ன தகுதி உள்ளது. இதனை பார்த்து கண்மூடித் தனமாக இருக்கும் அரசியல் தலமையல்ல. உடல்களை எரித்த போது எங்களது உள்ளம் வேதனைப்பட்ட வரலாறு உள்ளது. அழுத கண்ணீர் இருக்கின்றது. நாங்கள் அதனை முடித்து வைக்க வேண்டிய தேவை ஒரு அரசியல் தலைமைக்கு இருந்தது அதைதான் செய்தோம்.
எங்களுடைய அரசியல் காய் நகர்த்தல் காரணமாக உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. உடல்கள் அடக்கம் செய்யப்பட உள்ளதாக முதலில் தெரிந்ததும் நான்தான். அரசியல் காய் நகர்த்தல் என்றார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் முயற்சியினால் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குடப்பட்ட ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அறபா நகரில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள முன்னாள் பிரதியமைச்சர் மர்ஹ_ம் முஹைதீன் அப்துல் காதர் வித்தியாலயத்தின் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
தியாவட்டவான் முகைதீன் அப்துல் காதர் வித்தியாலய அதிபர் ஏ.யூ.எம்.நளீம் (ஸலாமி) தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் செய்யித் உமர் மௌலானா, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ஜே.எப்.றிப்கா, ஓட்டமாவடி கோட்டக்கல்வி பணிப்பாளர் வி.ரீ.அஜ்மீர், முஸ்லிம் சமய திணைக்களம் கிழக்குப் பிராந்திய காரியாலய பொறுப்பதிகாரி ஏ.எல்.ஜூனைட் (நளீமீ), முகைதீன் அப்துல் காதரின் புதல்வர் முகம்மட் முகைதீன் பாடசாலை அமுலாக்க குழு தலைவர் எம்.ஏ.எம்.அப்துல் காதர் உட்பட பள்ளிவாயல் நிருவாகத்தின், பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதேச இணைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது முஹைதீன் அப்துல் காதர் வித்தியாலயத்தினை அமைப்பதற்கு முயற்சித்தமைக்காக பிரதேச மக்களால் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் செய்யித் உமர் மௌலானா ஆகியோர் கௌரவிக்கப்பட்டதுடன், பாடசாலைக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment