சர்வதேச கல்வி மற்றும் சுற்றுலா தொடர்பான ஆராய்ச்சி மாநாடு வியாழக்கிழமை (31) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
சமாதான கற்கைகளுக்கான நிலையம் ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு, அந்நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு கல்வியலாளர்கள், புத்திஜீவிகள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதானிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
வெளிநாடுகளிலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது உயர் கல்வி தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்வதற்கு பல்வேறு நாடுகளுக்குச் செல்கின்றனர். அவ்வாறானவர்களை இலங்கைக்கு அழைத்துவந்து அவர்களின் உயர்கல்வி மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை தொடர்வதற்கும் இலங்கையிலுள்ள முக்கிய இடங்களுக்கு சுற்றுலா செல்வதற்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதுமே இம்மாநாட்டின் நோக்கமாகும்.
இதனால் இலங்கையின் கல்வித்திட்டம் வெளிநாடுகளில் முக்கியத்துவம் பெறுவதுடன், வெளிநாட்டு வருமானங்களும் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் போது தமது உயிரையும் துச்சமென மதித்து, பொருளாதார ரீதியாகவும் செலவு செய்து, தொண்டர்களாக பணியாற்றியோர் மற்றும் நிலையான அபிவிருத்தித்திட்டங்களுக்கு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பங்களிப்புச் செய்தோர் என பலர் இம்மாநாட்டின் போது விருது வழங்கி கௌரவிக்கப் படவுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலையான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பங்களிப்புக்களைச் செய்த கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், ஏறாவூர் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபையிர் இம்மாநாட்டின் போது சமாதான தூதுவர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.
தொண்டர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டே சமாதான கற்கைகள் நிலையம் உரியவர்களை அடையாளம் கண்டு இவ்வாறான விருதுகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment