தற்போது வழங்கப்படவுள்ள கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனங்களில் கிழக்கு மாகாண கல்விக் கல்லூரி ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்திற்கே நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தனவிடம் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தனவுக்கு அவர் இன்று(18) அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டிலுள்ள கல்விக் கல்லூரிகளில் பயிற்சி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மிகவும் முக்கியமான இந்த விடயத்தை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
2021 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் ஆளணி சுற்று நிருபத்திற்கமைய கிழக்கு மாகாணத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இதனைவிட கல்வி அதிகாரிகள்,ஆசிரிய ஆலோசகர்கள் அதிபர்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்ட வெற்றிடங்கள் இங்கு காணப்படுகின்றன. இந்த வெற்றிடங்களை ஆசிரியர்களே நிரப்பி வருகின்றனர். இந்த வகையில் மொத்தமாக கிழக்கு மாகாணத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் தற்போது காணப்படுகின்றன.
கிழக்கு மாகாணம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை,க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை போன்ற பொதுப் பரீட்சை பெறுபேறுகளில் தொடர்ந்து பின் தங்கி வருவதற்கு பெரியளவு காணப்படும் இந்த ஆசிரியர் பற்றாக்குறை பிரதான காரணமாகும். இதனைக் கருத்தில் கொண்டு தான் கடந்த எமது நல்லாட்;சிக் காலத்தில் கிழக்கு மாகாண கல்விக் கல்லூரி ஆசிரியர்கள் கிழக்கு மாகாணத்திற்கே நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது வழங்கப்படுகின்ற கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல ஆசிரியர்கள் கிழக்கு மாகாணத்திற்கு வெளியே நியமிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது வெளியாகியுள்ள பெயர்ப் பட்டியலின் மூலம் இதனை அறிந்து கொள்ள முடிகின்றது.
மாவட்ட மற்றும் பிரதேச வெற்றிடங்களின் அடிப்படையிலேயே கல்விக் கல்லூரி பயிற்சி ஆசிரியர்களுக்கான தெரிவு இடம்பெறுகின்றது. எனவே, தற்போதைய இந்த நியமனம் கல்விக் கல்லூரி தெரிவு முறைக்கு முரணாக அமைந்து விடும் என்பதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
இதனை விட கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடம் இருக்கும் போது அந்த மாகாண வெற்றிட அடிப்படையில் கல்விக் கல்லூரிக்கு தெரிவான ஆசிரியர்களை வேறு மாகாணங்களுக்கு நியமிக்க முயற்சிப்பது கிழக்கு மாகாணம் தொடர்ந்து கல்வியில் பின் தங்குவதற்கு காரணமாக அமைந்து விடும்.
எனவே. இந்த விடயங்களைக் கவனத்தில் கொண்டு கிழக்கு மாகாண கல்விக் கல்லூரி ஆசிரியர்களை அவர்கள் கல்விக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்ட வலய மற்றும் மாவட்ட அடிப்படையில் கிழக்கு மாகணப் பாடசாலைகளுக்கு நியமிக்கும் பொருட்டு அவர்களை கிழக்கு மாகாணத்திற்கு இணைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.- இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கடிதத்திக் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment