ஆசியாவின் ஆளுமைகளை உருவாக்குகின்ற வேலை திட்டத்துக்கு வவுனியா பல்கலைக்கழக மாணவர்களே முதன்முதல் உள்ளீர்ப்பு.-பேராசிரியர் நந்தன விஜேசிங்க தெரிவிப்பு



தர்மேந்திரா-
ன்றைய பல்கலைக்கழக மாணவர்களை தேசிய மட்டத்தில் மாத்திரம் அல்ல ஆசிய மட்டத்திலும் நாளைய தலைவர்களாக மலர செய்கின்ற வேலை திட்டத்தின் தூர நோக்கு சிந்தனையின் முதலாவது அம்சமாகவே வவுனியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவ மேம்பாட்டு பயிற்சி முகாம் வடிவமைக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றது என்று பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சமூக நல்லிணக்க செயற்பாட்டு குழு உறுப்பினரும், ஜனாதிபதி செயலணி அங்கத்தவருமான பேராதனை பல்கலைக்கழக சமூகவியல் துறை பேராசிரியர் நந்தன சாந்தி விஜேசிங்க தெரிவித்தார்.
வவுனியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு எம்பிலிப்பிட்டியவில் உள்ள தலைமைத்துவ மேம்பாட்டுக்கான தேசிய மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் 05 நாட்கள் தலைமைத்துவ மேம்பாட்டு பயிற்சி முகாம் நடத்தப்படுகின்றது. தெரிவு செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்கள் 200 பேர் வவுனியாவில் இருந்து புகையிரதம் மூலமாக தலைமைத்துவ மேம்பாட்டுக்கான தேசிய மையத்துக்கு அழைத்து வரப்பட்டு துறை சார்ந்த வளவாளர்களால் பயிற்சிகள் வழங்கப்படுகின்றார்கள்.

இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது பேராசிரியர் நந்தன விஜேசிங்க மேலும் தெரிவித்தவை வருமாறு

இந்நாட்டின் மூன்று தசாப்த கால யுத்தம் 2009 ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்து விட்டது. ஆனால் யுத்தம் ஏற்படுத்திய வடுக்கள், பாதிப்புகள், தாக்கங்கள் ஆகியவற்றில் இருந்து எமது நாட்டின் மூவின மக்களும் இன்னமும் மீளவே இல்லை.
இதனால் பெயரளவிலான சமாதானமே காணப்பட்டு வருகின்றது. இதை உண்மையான சமாதானமாக கொள்ளவே முடியாது இருக்கின்றது. குறிப்பாக எதிர்மறையான எண்ணங்கள் பலவும் எமது மக்களை ஆட்கொண்டு நிற்கின்றன.
நீறு பூத்த நெருப்பு போலவே தற்போதைய சமாதானம் காணப்படுகின்ற நிலையில் சமூக நல்லிணக்கம் மூலமாக மனங்களை முழுமையாக வெல்ல வேண்டிய அவசியம் நிலவுகின்றது. இது சவால்கள் நிறைந்த இப்பகீரத முயற்சி ஆகும்.
நாம் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற வேலை திட்டங்கள் பலவற்றையும் யுத்தம் இடம்பெற்று கொண்டிருந்த காலத்தில்கூட மேற்கொண்டு வந்துதான் இருக்கின்றோம். ஆனால் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பிற்பாடு புதிய உத்வேகத்துடன் இவ்வேலை திட்டங்களை முடுக்கி விட்டிருந்தோம்.
மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் சமூக நல்லிணக்க விடயங்களுக்கான அவரின் செயலாளராக நான் பதவி வகித்து ஆற்றிய சேவைகள் தொடர்பாக என்றும் பெருமை அடைந்தவனாக விளங்குகின்றேன். குறிப்பாக சமூக நல்லிணக்க மையங்களை நாடு பூராவும் நிறுவுகின்ற செயல் திட்டத்தை முன்னெடுத்தோம். நிலையான சமூக நல்லிணக்க ஏற்படுத்துகின்ற வேலை திட்டங்கள் பலவற்றுக்கும் நாம் வித்திட்டு இருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முடக்கம் நேர்ந்து விட்டது. உதாரணமாக ஆசியாவின் மிக உயரமான பல்கலைக்கழகத்தை பளையில் அமைப்பதற்கான வேலை திட்டம் முடங்கி போய் விட்டது.

ஆனால் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸ தலைமையிலான புதிய ஆட்சியில் எமது வேலை திட்டங்களை விட்ட இடத்தில் இருந்து புத்துயிர்ப்போடு மீண்டும் தொடர்கின்றோம். அதன் மிக முக்கியமாக மைல் கல்லாக வவுனியா பல்கலைக்கழகத்தில் சமூக நல்லிணக்க மையம் நிறுவப்பட்டு ஜனாதிபதியால் கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது. எமது நாட்டின் 17 ஆவது பல்கலைக்கழகம் வவுனியா பல்கலைக்கழகம் ஆகும். மிக குறைவான வளங்களையே கொண்டிருக்கின்றது. யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தில் அமைந்து உள்ளது. ஆனால் வவுனியா பல்கலைக்கழகம்தான் இந்நாட்டின் பல்கலைக்கழக வரலாற்றிலேயே முதலாவது சமூக நல்லிணக்க மையத்தை உரித்தாக்கி வைத்திருக்கின்றது. நாம் நினைத்து இருந்தால் வேறு ஒரு பல்கலைக்கழகத்தில் இச்சமூக நல்லிணக்க மையத்தை அமைத்து கொடுத்திருக்க முடியும்.

இது ஒரு புரட்சிகர மாற்றுத்துக்கான திறவுகோல் என்றால் மிகை ஆகாது. எதிர்காலத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் சமூக நல்லிணக்க மையங்கள் நிறுவப்படும் என்பது திண்ணம். அதே போல பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவ மேம்பாட்டு பயிற்சி முகாம்களை நடத்துகின்ற தேசிய வேலை திட்டத்தை ஆரம்பித்து இருக்கின்றோம். இத்திட்டத்தின் முதலாவது பயனாளிகளாக வவுனியா பல்கலைக்கழக மாணவர்களையே உள்வாங்கி இருக்கின்றோம்.
2050 ஆம் ஆண்டு ஆசியாவின் ஆளுமையாக இலங்கை மாறும். அதே போல 2100 ஆம் ஆசிய பிராந்தியமே உலகத்தை வழி நடத்தும். இவற்றுக்காக இன்றைய பல்கலைக்கழக மாணவர்களை வருங்கால தலைவர்களாக உருவாக்கி வளப்படுத்துகின்ற வேலை திட்டத்துக்கு உயிர் கொடுத்து உள்ளோம். கரை கண்ட துறை சார்ந்த நிபுணர்களாலேயே எமது பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :