அதிபர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார் திருமதி செய்னம்பு ஹமீட்



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராக கடமையாற்றி திருமதி.செய்னம்பு ஹமீட் அதிபர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஓட்டமாவடி இரண்டாம் வட்டாரத்தில் முஹம்மது காசிம் பாத்து முத்து தம்பதிகளுக்கு செயினம்பு மகளாக பிறந்தார். இவரது ஆரம்ப கல்வியை ஓட்டமாவடி பெண்கள் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வி தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை ஓட்டமாவடி மகா வித்தியாலயத்திலும் கற்று சித்தி அடைந்தார்.
இவர் கற்கின்ற காலத்தில் பாடசாலையில் நடைபெறுகின்ற விளையாட்டு போட்டிகளிலும் வட்டார, மாவட்ட போட்டிகளிலும் பங்குபற்றி சம்பியனாக வெற்றி பெற்றதுடன் பாடசாலைக்கும் வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். இதேபோன்று பேச்சுப் போட்டிகளிலும் பாடசாலை மட்டம், மாவட்ட, மாகாண, அகில இலங்கை ரீதியிலும் பங்குபற்றி வெற்றி பெற்றுள்ளார்.

இவர் ஒரு பல்துறை மாணவியாக பாடசாலைக் காலங்களில் சிறந்து விளங்கினார். பாடசாலையின் மாணவர் மன்ற தலைவியாகவும் இல்ல விளையாட்டு போட்டிகளின் போது இல்ல தலைவியாகவும், விளையாட்டு தலைவியாகவும் கடமையாற்றியதுடன் ஓட்டமாவடி மகா வித்தியாலயத்தின் முதலாவது பெண்கள் சிரேஷ்ட மாணவர் தலைவியாகவும் இருந்துள்ளார்.

அத்தோடு இவர் ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் முகாமையாளராக கடமையாற்றிய கே.எம்.எஸ் ஹமீட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகனாக முகமட் லைஸ் பிறந்தார். இவர் தற்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் கடமை புரிகின்றார்.

அதேபோன்று பாடசாலைக் கல்வியை முடித்தவுடன் ஓட்டமாவடி பெண்கள் கிராம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளராகவும் கடமையாற்றி சிறந்த பொதுப் பணியிலும் ஈடுபட்டுள்ளார். இவர் தையல் மற்றும் ஏனைய கைப்பணி வேலைகளிலும் சிறந்த பயிற்சிகளையும் பெற்றுள்ளார்.

குறிப்பாக இவரது பொது பணியானது சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. அதாவது 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் முதலாவது பெண் இயக்குனராகவும் 2007ஆம் ஆண்டு சங்கத்துக்கு தேர்தல் மூலம் தலைவியாகவும் தெரிவுசெய்யப்பட்டார். அகில இலங்கையிலேயே பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு தெரிவான முதலாவது முஸ்லிம் பெண் தலைவி எனும் பெருமையும் இவருக்கு உரியதாகும்.
மேலும் 1983ஆம் ஆண்டு ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் முதலாவது முஸ்லிம் பெண் இலிகிதராக தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார். அதேநேரம் 1987ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற ஆசிரியர் தேர்வுக்கான போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று 1988ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 22ம் திகதி தொடக்கம் ஆசிரிய சேவையில் சேர்ந்து தனது பணியை சிறப்பாக ஆற்றிய பின் 1991 தொடக்கம் 1992 வரையான காலப்பகுதியில் அலுத்கம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியை முடித்து மீண்டும் 1993ஆம் ஆண்டு தொடக்கம் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகாவித்தியாலயத்தில் தனது ஆசிரியப் பணியை தொடர்ந்தார். ஒட்டமாவடி பாத்திமா பாலிகாவில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் இவரது வகுப்பில் இருந்தே முதன்முதலாக நான்கு மாணவிகள் சித்தி பெற்றுள்ளனர். இதனையடுத்து பல வருடங்களாக இவரது வகுப்பிலிருந்து மாணவிகள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தொடர்ச்சியாக சித்தி பெற்று வந்தமையினால் கல்வி அதிகாரிகளின் பாராட்டுக்களையும் பெற்று வந்தார்.

அத்தோடு இப்பாடசாலையில் இருந்து 2000மாம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலயத்துக்கு இடமாற்றம் பெற்றுக்கொண்டு சிறந்த ஆசிரியையாக கடமையாற்றியதுடன் 2006ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட அதிபர் சேவைக்கான போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்றதுடன் கல்குடாத் தொகுதியின் முதலாவது சித்தியடைந்த முஸ்லிம் பெண் அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதினெட்டாம் தேதி வரை ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலயத்தில் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் அதிபராக கடமையாற்றிய காலப்பகுதி ஹிஜ்ரா வித்தியாலயத்துக்கு பொற்காலம் என குறிப்பிடலாம். அப்பாடசாலையின் தேவையாக இருந்த கட்டிட தேவை, தளபாட தேவை அனைத்தும் மாவட்ட அரசியல்வாதிகளின் உதவியுடன் பூர்த்தி செய்யப்பட்டதுடன் மிகவும் அவசிய தேவையாக நீண்ட காலமாக இருந்து வந்த பாடசாலை இடநெருக்கடியை சீர்செய்யத் தேவையான பாடசாலைக் காணியின் தேவையாகும்.

இத் தேவையும் 2017 தொடக்கம் 2018 காலப்பகுதியில் பாடசாலைக்கு அருகிலுள்ள காணியொன்றை இவரது தலைமையின் கீழ் குழு அமைக்கப்பட்டு பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு, ஆசிரியர்கள், பெற்றோர்கள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் உதவியுடன் சுமார் 35 லட்சம் ரூபா நிதி சேகரிக்கப்பட்டு கொள்வனவு செய்யப்பட்டு பாடசாலைக்கு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து 2019 மார்ச் மாதம் தொடக்கம் 2021.11.22ஆம் திகதிவரை ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :