தேர்தலுக்கு முன்போ, பின்போ விமல், உதயவுடன் கூட்டணி கிடையாது. மனோவிடம் சஜித் தெரிவிப்பு



ரசில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருடன் நாம் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம். தேர்தலுக்கு முன்னும் சரி, பின்னும்சரி இத்தகைய இனவாதிகளை எம்முடன் சேர்க்க மாட்டோம் என எதிர்க்கட்சி தலைவர், ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச எம்பி, சற்று முன்னர் தம்மிடம் உறுதியாக தெரிவித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எம்பி ஊடகங்களிடம் கூறினார்.

இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

அரசாங்கம் ஆட்டம் காண்கிறது. வரலாறு முழுக்க தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாதம் கக்கிய முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அரசில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்னமும் பலர் வெளியேற்றப்பட உள்ளனர். இந்நிலையில் வழமைபோல் புதிய கூட்டணிகள். புதிய நகர்வுகள் நிகழ்கின்றன.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் பற்றிய கருத்துகள் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் ஆகியோர் மத்தியில் இன்று இடம்பெற்ற உரையாடலின் போது, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஒருபோதும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியாக சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என எதிர்க்கட்சி தலைவர் பிரேமதாச தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் கணேசனிடம் தெரிவித்துள்ளார். இனவாதிகளை எம்முடன் தேர்தலுக்கு, முன்னரோ, பின்னரோ இணைத்துக்கொள்ள மாட்டேன் என மேலும் சஜித் பிரேமதாச எம்பி தன்னிடம் சற்று முன் கூறியதாக மனோ எம்பி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

விமல், உதய பதவிகள் ஆகியோரின் பதவிகள் காலி. இரத்தின தேரருக்கு பதவி இல்லை. இருந்தால் அதுவும் போயிருக்கும். இவர்கள் அரசியலில் இலங்கை இனவாத பிதாமைந்தர்கள். ஆகவே இவர்கள் மீது எவருக்கும் அனுதாபம் இல்லை. நாட்டில் ராஜபக்சர்கள் மீது பெரும் வெறுப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஆனால், விமல், உதய ஆகிய இருவரை விட ராஜபக்சர்களுக்கு ஏற்புடைமை உண்டு. இவர்களுக்கு அதுவும் இல்லை.

விமல், உதய இருவரும், ராஜபக்ச ஆட்சியின இன்றைய அலங்கோலங்களுக்கு பிரதான பொறுப்பு கூற வேண்டியவர்கள். ராஜபக்சர்கள், இனவாதத்தையும், மத அடிப்படைவாதத்தையும் தூண்டி விட்டே ஆட்சியை பிடித்தார்கள். அந்த விடயத்தை பொறுப்பேற்று தேர்தல் காலத்திலும், அதற்கு முன்னரும் கொண்டு நடத்தியவர்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, ரத்தின ஆமதுரு ஆகியோரே ஆகும்.
தமிழ்-முஸ்லிம் எதிர்ப்பு, இந்து-இஸ்லாம்-கத்தோலிக்க எதிர்ப்பு என்ற இன, மத அடிப்படைவாதங்களை இலங்கையில் ஸ்தாபனரீதியாக முன்னின்று நடத்தியவர்கள் இவர்கள் மூவரும்தான். அதை வரலாறு அறியும். நான் நன்கு அறிவேன். இந்த நிமிடம்வரைக்கூட திருந்தாத இவர்கள் இடம்பெறும் ஆட்சியில் இடம்பெற நான் தயார் இல்லை. இந்த நோக்கிலேயே எதிர்க்கட்சி தலைவர், ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச எம்பியுடன் நான் உரையாடினேன். அதற்கு உரிய சிறப்பான பதிலை அவர் எனக்கு கூறியுள்ளார். அதையிட்டு மகிழ்வடைகிறேன்.
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, ரத்தின ஆமதுரு இனவாத வினை விதைத்தார்கள். இன்று ஊழ்வினை வினை அறுக்கிறார்கள். “அறு தம்பி, அறு.., நன்றாக அறு..!” என நாம் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கத்தான் வேண்டும். சிங்கள ஊடகங்களில் நான் இவர்களை பார்த்துக்கொள்வேன்.

அரசில் இருந்து வெளியேறும், வெளியேற்றப்படும் வேறு சிலருக்கு இங்கே இடம் இருக்கலாம். ஆனால், நிச்சயமாக இத்தகைய அக்மார்க் இனவாதிகளுக்கு இடமிருக்க முடியாது. இடம்தந்து மீண்டும் ஒருமுறை இன்னொரு சுற்றுவட்டம் போக முடியாது. அதை எமது தமிழ், முஸ்லிம் மக்கள் தாங்க மாட்டார்கள். பொறுக்க கூடாது. இன்று தேசிய சூழல், சர்வதேசிய சூழல் ஆகியவை பொருந்தி வருகின்றன. அவற்றை மீண்டும் பாழடிக்க இந்த இனவாதிகளுக்கு இடமளிக்க முடியாது. அத்தகைய எந்தவொரு முயற்சியையும் நான், முற்போக்கு சக்திகளுடன் சேர்ந்து எதிர்ப்பேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :