நாட்டில் எரிபொருள்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையைக் கருத்தில் கொண்டு, மாநகர சபைக்கு தொடர்ச்சியாக எரிபொருள்களை விநியோகிக்க பெரிய நீலாவணையில் அமைந்துள்ள அஸீஸ் அன்ட் சன்ஸ் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஏ.ஏ.ஏ.ஹபீல், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.
தற்போது எழுந்துள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையில் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக மாநகர முதல்வர் மேற்படி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளருடன் இன்று நடத்திய அவசர பேச்சுவார்த்தையின் பயனாக அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இதன்படி கல்முனை மாநகர சபையின் வாகனங்களுக்கு இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தனியான ஒரு கொள்கலன் ஊடாக எவ்வித தடங்கலுமின்றி தொடர்ச்சியாக எரிபொருள்களை விநியோகிப்பதற்கும் நாட்டில் எரிபொருள்கள் முற்றாக தீர்ந்து விடுகின்ற நிலைமை ஏற்பட்டாலும் குறைந்தது 02 வாரங்களுக்காவது மாநகர சபைக்கு எரிபொருள்களை வழங்குவதற்கும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.
இதற்காக கல்முனை மாநகர வாழ் மக்கள் சார்பாக அஸீஸ் அன்ட் சன்ஸ் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஏ.ஏ.ஏ.ஹபீல் அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, நிலைமையைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையை மட்டுப்படுத்த வேண்டியேற்படின் பொது மக்கள் தமது வீடுகளில் சேர்கின்ற அன்றாட சமையலறைக் கழிவுகள் மற்றும் உக்கக்கூடிய கழிவுகளை மாத்திரம் கழிவகற்றல் வாகனங்களில் ஒப்படைக்குமாறும் ஏனைய உக்க முடியாத திண்மக்கழிவுகளை குறித்த சில காலப்பகுதிக்கு தத்தம் இடங்களில் வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றது.
0 comments :
Post a Comment