நாட்டின் கல்வி முறைமையில் தற்போதைய உலக நடைமுறைக்கு ஏற்ற வகையில் மாற்றங்களை கொண்டு வர ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார். இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தினால் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த இளைஞர், யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு தொழில்நுட்ப பீடத்தின் கேட்போர் மண்டபத்தில் நடைபெற்றது.
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்ப துறைத் தலைவர் கே.எம்.றிப்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், தற்காலத்தில் கல்விக் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். கணனி (ICT), ஆங்கில துறையை விருத்தி செய்வதற்காக கல்வி செயலணி ஸ்தாபிக்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும் மேலும் ஆங்கிலம், கணனி கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான விடயங்கள் பேசப்பட்டதாகவும் தெரிவித்தார். எதிர்காலத்திற்கு பொருத்தமான திறமை வாய்ந்த சந்ததிகளை உருவாக்க கல்வி கட்டமைப்பின் கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் மற்றும் பல மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வளமிக்க எதிர்காலத்தில் நற்பண்புகள் ஆற்றல் மற்றும் வெற்றியைக்காண கல்வி வலுவான பாதையாகும்.
மாணவர்கள் கல்வி கற்பது மட்டுமல்லாமல் அவர்களுடைய வாழ்க்கையில் ஒழுக்கம் என்பதும் மிக உயர்ந்த பண்பாகும். நம்பிக்கை, தன்னம்பிக்கை மற்றும் குழுவிலுள்ள ஏனையவர்கள் மீதான நம்பிக்கையை ஒரு தலைவரது வெற்றியின் இதயமாக கருதப்படுகிறது. எளிமையான பணிகளில் கூட அதிக கவனத்தைச் கூட்டாக செலுத்துதல் மற்றும் கூட்டாக செயற்படும் திறனை வளர்த்துக் கொள்ளல் என்பன மாணவர்களுக்கான பண்புகளாகும். ஒருவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் மற்றவர்களின் ஒத்துழைப்பின்றி வெற்றி பெற முடியாது. இடையிடையே இடையூறுகள், தடைகள் ஏற்பட்டாலும் மாணவர்கள் தனது படிப்பில் கவனம் செலுத்த வேண்டுமெனவும், பின்னடைவுகள் பயணத்தின் ஒரு பகுதி எனவும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு துணிச்சலான தீர்மானங்களை எடுக்க கூடியவராக மாணவர்கள் இருக்க வேண்டும்.
எமது நாட்டின் கல்வி முறைமையில் தற்போதைய உலக நடைமுறைக்கு ஏற்ற வகையில் காணப்படவில்லை. விசேடமாக மூன்றாம் நிலைக்கல்வி முறைமையில் பல்வேறு மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கு கல்வி செயலணி ஆலோசனை வழங்கியுள்ளது. மாணவர்கள் எந்த பட்டப்படிப்பை தொடர்ந்தாலும், அவர்கள் அனைவரும் குறைந்தது தகவல் தொழில் நுட்பத்திலேனும் ஓரளவு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாவதுடன் ஏனைய திறன்களையும் பெற்றிருக்க வேண்டும்.நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரினால் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தொழில்நுட்ப பீடாதிபதி, பதிவாளர், துறைத்தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment