விடைபெற்ற சிரேஸ்ட ஊடகவியலாளர் நடராஜன்!



ம்பாறை மாவட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் இரத்தினம் நடராஜன் ஞாயிறன்று(20) இவ்வுலக வாழ்வைவிட்டு நிரந்தரமாக விடைபெற்றுள்ளார்..

அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பனங்காட்டைச்சேர்ந்த இ.நடராஜனுக்கு மரணிக்கும்போது வயது 64. இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் தினகரன் பத்திரிகையின் பனங்காடு நிருபராவார்.

1980 முதல் வீரகேசரி பொத்துவில் நிருபராக கடமையாற்றினார் தொடர்ந்து தினகரன் பத்திரிகையின் பனங்காடு நிருபராக கடமையாற்றியதுடன் சுதந்திர ஊடகவியலாளராக உதயன் வலம்புரி தமிழமிரர் தமிழ்தந்தி மெட்ரோ தினப்புயல் பீபீசிதமிழ் வானொலி தமிழன் போன்ற ஊடகங்களில் ஊடகவியலாளராக கடமையாற்றினார். இறுதி காலத்தில் வீரகேசரியில் தனக்கு பொத்துவில் நிருபராக சேவையாற்ற சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே என்று என்னிடம் கவலைப்பட்டவர்.

இரத்தினம் நடராஜனின் மனைவி இராமலிங்கம் கௌரி.. இரண்டு பிள்ளைகள் நடராஜன் ஹரன் (ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் .- யாழ் போதனா வைத்தியசாலை)...அவரும் ஓர் ஊடகவியலாளன். மகள் நடராஜன் மிருணாளினி ( கணினி பதிவாளர் சமூர்த்தி வங்கி பனங்காடு ).

இவர் ஆரம்பகல்வியை இராம கிருஷ்ணா மிஷன் பாடசாலையிலும் உயர்தரம் கல்வியை அக்னரைப்பற்று மத்திய கல்லூரியிலும் பயின்றவர்
எழுத்திலும் பண்பிலும் உயர்ந்த ஓர் ஊடகவியலாளன். தமிழ் எழுத்துப்பிழையின்றி செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதும் ஒரு மிகப்பெரிய படைப்பாளி .

அம்பாறை மாவட்டத்தில் இந்துசமய விவகாரங்களை குறிப்பாக ஆலயங்களின் விழாக்கள் பண்டிகைகள் விரதங்கள் தொடர்பாக எழுதும் பாங்கு நடராஜனுக்கும் எனக்கும் இருப்பதாக அவதானிகள் தெரிவிப்பார்கள்.

அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அமைப்பதில் எனக்கு பக்கபலமாக இருந்தவர். அவரும் அவரது மகன் ஹரனும் என்றும் எம்முடன் துரோகத்தனமின்றி வெளிப்படையாக இறுதிவரை கைகோர்த்தவர்கள். ஒருதடவை மலையகத்தில் பெரிய மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு மனித அபிவிருத்தி தாபனம் மட்டு.அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களை காரைதீவிலிருந்து அழைத்துச்சென்றது. அதற்கு அவரும் அவரது மகள் ஹரனும் எம்முடன் நேரத்திற்குவந்து கலந்துகொண்டது மாத்திரமல்லாமல் அந்தப்பயணத்தையே கலகலப்பாக வைத்திருந்த பெருங்குணமும் அவர்களையே சாரும்.

நேரில கண்டால் 'வணக்கம் ஐயா ' என்று புன்சிரிப்புடன் குழைந்து சொல்வார்அடக்'கமாகப் பேசுவார்.இறுதியாக மற்றுமொரு சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.பி.சிவப்பிரகாசத்தின் இறுதிக்கிரியையின்போது ஆலையடிவேம்பைச்சேர்ந்த திரு.கைலாயபிள்ளை திரு சந்திரசேகரம் ஆகிய மூத்தோருடன் கண்டேன்.கனிவான பார்வை. பண்பாக பேச்சு.இன்று இவற்றைக்காண்பது அரிது.

' தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் பெறப்படும்' என்று வள்ளுவம் கூறுகிறது. அதற்கிணங்க தனது வழியில் எழுத்துத் துறையிலும் ஊடகத் துறையிலும் தன் மகனைத் தத்து கொடுத்திருப்பவர் நடராஜன். இவரது மகன் ஹரன். அவரும் ஊடகத்துறையில் தந்தையைப்போல் எவ்வித குத்துவெட்டுக்களையோ துரோகங்களையோ இழைக்காமல் சிறந்த நற்பண்புகளோடு மிளிர்கிறார்.

நடராஜனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாரின் சோகத்தில் ஊடவியலாளர்களாகிய நாமும் பங்கேற்கிறோம்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக.

வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :