திராய்க்கேணி கிராமத்தின் பாரம்பரிய கேணி பறிபோகும் அபாயம்!! கேட்பார் பார்ப்பார் இல்லையா? திராயக்கேணி பொதுநலஅமைப்புகள் போர்க்கொடி!



காரைதீவு சகா-
திராய்க்கேணி தமிழ்க்கிராமத்தின் பாரம்பரிய சலவைத்தொழிலுக்கான நீர்நிறைந்த கேணியை எவ்விதஅனுமதியும் இல்லாமல், அட்டாளைச்சேனை பிரதேசசபைத்தவிசாளர் அத்துமீறி மூடிவருவதாக பொதுநலஅமைப்புகள் பரவலாக முறையிட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில்,அட்டாளைச்சேனை பிரதேசசெயலாளர் பிரிவினுள் வருகின்ற ஒரேயொரு தமிழ்க்கிராமம் திராய்க்கேணிக் கிராமமாகும். இக்கிராமமக்கள் கடந்தகாலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்குமத்தியில், இனவன்முறையால் துவம்சம் செய்யப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்துவருகின்றனர்.பரம்பரை பரம்பரையாக இக்கேணியில் தமது சலவைத்தொழிலைச் செய்துவருகின்ற இந்நிலையில், அப்பகுதி தவிசாளர் இவ்விதம் அராஜமாகச் செயற்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட தமிழர் என்ற வகையில் எமக்கு குரல்கொடுக்க உதவி செய்ய, நீதி கேட்க யாருமில்லையா? என்றும் அவர்கள் அவலக்குரல் எழுப்புகின்றனர். கேட்பார் பார்ப்பார் இல்லையா? என திராய்க்கேணி பொதுநலஅமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

திராய்க்கேணி பெரியதம்பிரான் கோயில் பரிபாலனசபையினர், இவ்அத்துமீறி மண்நிரப்பும் செயற்பாடு குறித்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தொடக்கம் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் வரை எழுத்துமூலம் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

ஆலய பரிபாலனசபைத்தலைவர் சி.கார்த்திகேசு மற்றும் செயலாளர் கி.புவனேஸ்வரன் இணைந்து முறையிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.:

திராய்க்கேணி பாலமுனை 06ஆம் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீ பெரியதம்பிரான் ஆலய பரிபாலனசபையினரின் கீழ் பராமரிக்கப்பட்டுவந்த சலவைத்தொழிலாளருக்குரிய குளத்தையும் ,சலவைத்தொட்டி உள்ள கட்டடத்தையும் மாரி காலங்களில் குளத்தில் வேலைசெய்து கோடைகாலத்தில் கட்டடத்தில் வேலைகளை பரம்பரை பரம்பரையாக செய்துகொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் ,ஆலய நிருவாகசபையினரிடமோ அல்லது சலவைத்தொழிலாளிகளிடமோ எவ்வித அனுமதியுமின்றி எமது நிலத்திலுள்ள குளத்தை ஒலுவிலைச்சேர்ந்த அட்டாளைச்சேனை தவிசாளர் எ.எல்.அமானுல்லா என்பவர் கனரக வாகனங்களின் உதவியுடன் மண்போட்டு மூடிக்கொண்டுவருகின்றார்.

அவரது இவ் அராஜகச் செயலை உடனடியாக தடுத்துநிறுத்தி, எமது பாரம்பரிய சலவைத்தொழிலை தொடர்ந்து செய்வதற்கு ஆவன செய்யுமாறு வேண்டுகிறோம். என குறிப்பிடப்பட்டுள்ளது.

எமக்கான நீதி கிடைக்காவிட்டால் நாம் வீதியில் இறங்கி போராட்டம் நடாத்தவும் பின்னிற்கமாட்டோம். எம்மிடம் வாக்குப்பெற்ற அரசியல்வாதிகள் எமக்காக இத்தருணத்தில் நீதிக்காக குரல் கொடுக்கத்தவறினால் இனிமேல் எமது வாக்குகளை இழக்கநேரிடும் என்பதையும் தெரிவிக்கின்றோம் என அவர்கள் அழைக்குறையாக கூறுகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :