நாட்டின் பொருளாதார சரிவு, விலையேற்றம் என்பன நடுத்தர மக்களை பாதித்துள்ளது. இதனை கூடிய விரைவில் அரசு நிவர்த்திக்கும் எனும் நம்பிக்கை இருக்கிறது. கொரோனா சூழ்நிலையில் தேர்தல் நடத்த வேண்டாம் என்று எதிரணியினர் கூச்சலிட்டபோதும் ஜனநாயக கடமையை துணிவுடன் நிறைவேற்றியவர் ஜனாதிபதி கோத்தாபய. நாட்டின் பொருளாதார சிக்கல்களை தீர்க்கும் ஆற்றல் இந்த அரசுக்கு இருக்கிறது. அதற்கான வேலைத்திட்டங்களை நிதியமைச்சர், பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒருகட்டமே அமைச்சர் பஸிலின் இந்திய விஜயமும், சவூதி இளவரசரின் இலங்கைக்கான விஜயமும் அமைந்திருந்தது என ஐக்கிய காங்கிரஸ் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
புதன்கிழமை இரவு கல்முனையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஐக்கிய மக்கள் சக்தியினால் செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு பாதுகாப்பு படையினரையும் மீறி ஜனாதிபதி செயலகத்தில் அடாத்தாக நுழைய முயன்று பல்வேறு விடயங்கள் நடந்தேறியது. அதன்போது கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கண்ணீர் புகையடித்து, தண்ணீரடித்து ஆர்ப்பாட்டத்தை கலைத்தது போன்று இல்லாமல் இந்த ஆட்சியாளர்கள் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்த விடயம் பாராட்டத்தக்கது. அதன்மூலம் இந்த அரசாங்கம் சர்வதேசத்திற்கும் தங்களின் ஜனநாயக கொள்கையின் வலிமையை காட்டியுள்ளது
அந்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவு எம்.பி க்கள் பலரும் கலந்து கொள்ளாமையும், தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் அவர்களின் எம்.பிக்கள், அரசின் அதிருப்தியாளர்களான அதாஉல்லா, விமல், கம்பன்வில, வாசுதேவ போன்றவர்கள் என யாரும் கலந்துகொள்ளாமை மூலம் இவர்களின் ஆதரவுத்தளம் குறைந்துள்ளதை அறிந்து கொள்ளலாம். எதிரணி எம்.பிக்களின் ஆதரவுடன் அரசின் செல்வாக்கு கூடிக் கொண்டே செல்லும் இந்த காலகட்டத்தில் அந்த ஆர்ப்பாட்டம் வெற்றியளிக்கவில்லை என்றே தெரிகிறது.
நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டு வந்தது 1979ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் அன்றைய ஜனாதிபதி ஜேஆர் ஆகும். இச்சட்டம் நாட்டுக்கு மோசமானது என்றால் கடந்த ரணில், சஜித் பொல்லாட்சியில் முற்றாக அதை ஒழித்திருக்கலாம். அப்படி செய்யாமல் தூங்கிக்கொண்டிருந்து விட்டு இப்போது புலம்புகிறார்கள். ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து தாக்கியவனுகளை பிடிக்காமல் தாக்கும் கோஷ்டியை பிடித்துக்கொடுத்த முஸ்லிம்களை சிறை பிடிக்க ரணில், சஜித் அரசு மீண்டும் பயங்கரவாத சட்டத்தை கொண்டு வந்து 3500க்கு மேற்பட்ட முஸ்லிம்களை கைது செய்தது என்பது மறந்து விட்டதா? அப்போதெல்லாம் அரசுக்கு ஜால்ரா அடித்தவர்கள் இப்போது பயங்கரவாத சட்டத்தை நீக்க வேண்டும் என ஒப்பாரி வைப்பது ஏன்?
அன்றைய ரனில், சஜித் ஆட்சியில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களில் பெரும்பான்மையானோரை சரியான விசாரணையின் பின் எமது இந்த அரசு விடுவித்துள்ளது. ஆனாலும் நாட்டில் பிரிவினையை உருவாக்கி, வடக்கிலிருந்து முஸ்லிம்களின் அனைத்து சொத்துக்களையும் கொள்ளையடித்து விரட்டியது போன்று கிழக்கிலிருந்தும் முஸ்லிம்களை விரட்ட சாணக்கியனுக்கு பயங்கரவாத சட்டம் தடையாக இருக்கலாம், ஆனால் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு இச்சட்டம் தடையானதல்ல. அந்த கைதான மௌலவி ஒருவர் அண்மையில் விடுதலையாகி வெளியிட்ட கருத்துக்களே இந்த அரசாங்கத்தின் மனிதாபிமானத்திற்கான சாட்சியாக இருக்கிறது என்றார்.
0 comments :
Post a Comment