ஒற்றைத் தென்னையின் ஓலைகளை கடந்து செல்லும் காற்று (கவிதை)


-கலாநிதி எஸ்.எம். அய்யூப்-

திமிறிக் கொண்டு செல்லும்
வாகனங்களின் வன்தூரிகை
பூமியின் மேனிக்கு கறுப்பு நிற காபன் புகையை
பூசிக்கொண்டிருந்தது
காற்றில் கர்ப்பம் தரித்து வயிறு வீங்கிய
வண்ண வண்ண பொலித்தின் பைகள்
அங்குமிங்கும் பறந்து செல்லும் பட்டாம் பூச்சிகளாய்
மேலும் கீழும் பக்கமாகவும்
பறந்து கொண்டிருந்தன
உறுமிக்கொண்டும் உதைத்துக் கொண்டும்
செல்லும் விமானங்கள்
குட்டியும் குராலுமாக ஒன்றாகவிருந்த மேகங்களை
பின்வாங்கிய படைகளாய்
சின்னாபின்னமாக்கிக் கொண்டிருந்தன
தண்ணீரைக் கிழித்துக் கொண்டு செல்லும் கப்பல்களின்
ஓட்டை வழி கசிந்த எண்ணெய்ப் பிசுபிசுப்புகள்
கடல் நீரை அமுக்குச் சைத்தானாய்
அமுக்கிக் கொண்டிருந்தன
ஆறு குளம் ஏரிகளில் கொட்டப்பட்ட இரசாயனங்கள்
தண்ணீரை பச்சோந்திகளாய் மாற்றி
வேளைக்கொரு நிறமிட்டுக் கொண்டிருந்தன
இப்படியே மனித மூளை
சொட்டுச் சொட்டாய் கசிந்து கொண்டிருந்தது
வாசலில் நின்ற ஒற்றைத் தென்னையில்
சவண்டு தொங்கிய ஓலைகள்
தன்னைக் கடந்து செல்லும் காற்றுடன் சேர்ந்து கொண்டு
பூமியின் மேற்பரப்பை துப்புரவாக்கி கொண்டிருந்தன


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :