பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் முஸ்லிம் புத்திஜீவிகள், திறமைசாலிகள் ஒடுக்கப்படுகின்றனர்; -கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஆரிகா காரியப்பர்



அஸ்லம் எஸ்.மௌலானா-
யங்கரவாத தடைச்சட்டம் எனும் பாரிய ஆயுதத்தின் மூலம் முஸ்லிம் சமூகத்திலுள்ள புத்திஜீவிகள், திறமைசாலிகள் எல்லாம் ஒடுக்கப்படுகின்றனர் என்று கல்முனை மாநகர சபையின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் தெரிவித்தார்.

மக்களின் உயிவாழ்கின்ற உரிமைக்கு எதிராக பிரயோகிக்கப்படுகின்ற இப்பயங்கரவாத தடைச் சட்டம் இனியும் நீடிப்பதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் சூளுரைத்தார்.

கல்முனை மாநகர சபையின் 47ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு திங்கட்கிழமை (28) பிற்பகல் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் சமர்ப்பித்த பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரும் பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு உறுப்பினர் ஆரிகா காரியப்பர் மேலும் தெரிவிக்கையில்;

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டமானது 1979ஆம் ஆண்டு ஒரே நாளில் கொண்டு வரப்பட்டு, ஒரே நாளில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட சட்டமாக இருக்கிறது. ஆரம்பத்தில் தமிழர்களை இலக்கு வைத்து நடைமுறைப்படுத்தப்பட்ட இச்சட்டமானது பிற்பட்ட காலத்தில், குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது ஏவுகணைத் தாக்குதலுக்கு ஒப்பாக கொடூரமாக அமுல்படுத்தப்பட்டு வருவதைக் காண்கிறோம்.

இந்த சட்டத்தை பயன்படுத்தி எமது முஸ்லிம் சமூகத்திலுள்ள இளைஞர்கள் மட்டுமல்லாமல் மிக முக்கிய புத்திஜீவிகள் கூட அநியாயமாக கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பயங்கரவாத செயற்பாடுகளுடன் எவ்வித தொடர்பும் இல்லாத, தேசிய ரீதியில் பிரபலமான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், கவிஞர் அஹ்னப் ஜெஸீம் போன்றோர் நீண்ட காலமாக சிறைப்பிடிக்கப்பட்டு, சமீபத்தில்தான் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறே எவ்வித குற்றமும் இழைக்காத இன்னும் பலர் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.

பயங்கரவாத தடைச்சட்டம் எனும் பாரிய ஆயுதத்தின் மூலம் இன்று முஸ்லிம் சமூகத்திலுள்ள புத்திஜீவிகள், திறமைசாலிகள் எல்லாம் ஒடுக்கப்பட்டிருக்கின்றார்கள். சர்வதேச அழுத்தம் காரணமாக அண்மையில் இந்த சட்டத்தில் கொண்டு வரப்பட்டிருக்கின்ற திருத்தம் வெறும் கண்துடைப்பான ஒரு விடயமாகும். குறிப்பாக தடுப்புக்காவல் 18 மாதங்கள் என்பது 12 மாதங்களாக குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இச்சட்டத்தின் ஏனைய ஏற்பாடுகள் எல்லாம் அவ்வாறே இருக்கிறது.

ஒருவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி என்றே கருதப்படுகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனால் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக அழைத்துச் சொல்லப்படுகின்ற சிலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதனை பல சந்தர்ப்பங்களில் சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாக கண்டித்திருக்கிறது. இவ்வாறான நிலைமையில் மக்களின் அடிப்படை உரிமையை மீறுகின்ற ஒரு சட்டமாகவே இந்த பயங்கரவாத தடை சட்டம் காணப்படுகிறது. மக்களின் உயிவாழ்கின்ற உரிமைக்கு எதிராக பிரயோகிக்கப்படுகின்ற இப்பயங்கரவாத தடைச் சட்டம் இனியும் நீடிப்பதை அனுமதிக்க முடியாது. அதனை உடனடியாக நீக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும்- என்றார்.

இப்பிரேரணை மீது மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப், உறுப்பினர்களான சந்திரசேகரம் இராஜன், ஏ.ஆர்.அமீர், ரொஷான் அக்தர் ஆகியோரும் கருத்துக்களை முன்வைத்து, பயங்கரவாத தடைச்சட்டம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். உறுப்பினர் எம்.எம்.நிஸார் பிரேரணை தொடர்பில் மாற்றுக் கருத்தை பதிவு செய்திருந்த அதேவேளை பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :