ஆனால் முஸ்லிம் சமூகத்தின் நாடித்துடிப்பினை மிக துல்லியமாக கணிப்பிட்டு அதற்கு ஏற்றாற்போல் வியூகங்களை வகுத்து தேர்தல் வெற்றிக்கான அரசியலை மாத்திரம் செய்கிறார் இன்றைய தலைவர்.
மு.கா தலைவரின் ஏற்பாட்டில் “தென்கிழக்கு” என்ற வாசகத்தை முதன்மைப்படுத்தி இன்றைய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அழைப்பு விடுத்ததானது உண்மையில் அது “அரசுக்கு எதிரான” ஆர்ப்பாட்டம் என்று நம்பினால் அவர்களைப்போல் முட்டாள்கள் எவரும் இருக்க முடியாது.
இன்றைய ஆட்சியில் ஹபாயா உற்பட கலாச்சார ரீதியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள், ஒரே நாடு ஒரே சட்டம் என்ற போர்வையில் தனியார் சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகள், நாளாந்தம் முஸ்லிம்களின் காணிகள் அபகரிக்கப்பட்டமை, முஸ்லிம் பிரதேசங்களில் புத்தர் சிலை நிறுவ முற்படுகின்றமை, போன்ற இன்றைய அரசாங்கத்தின் எதேச்சதிகார போக்குகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் அல்லது ஹர்த்தால்கள் நடாத்தி எதிர்ப்பு நடவடிக்கையினை காண்பிக்க வேண்டும் என்று பல தடவைகள் அழுத்தம் வழங்கினோம். இரவு பகலாக எழுதினோம். ஆனால் அவைகள் எதனையும் எமது தலைவர் கண்டுகொள்ளவில்லை.
அவைகள் ஒருபுறமிருக்க, இன்றைய ஆட்சியாளர்கள் எமது ஜனாசாக்களை இரக்கமின்றி எரித்தார்கள். எமது சமூகம் பாரிய அவலங்களையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டது. அப்போதும் இந்த ஆட்சிக்கு எதிராக வீதியில் இறங்கி போராட எமது தலைமை முன்வரவில்லை.
ஆனால் இன்று விழுந்தடித்துக்கொண்டு ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதற்கு முன்வந்ததானது “வாழ்க, ஒழிக அல்லது நாரே தக்பீர்” என்று கோசம்போடுகின்ற எடுபிடிகளுக்கு உற்சாகமாக இருக்கலாம். ஆனால் இதற்குள் புதைந்துகிடக்கின்ற தனிநபரின் அரசியல் வாழ்க்கைக்கான காய் நகர்த்தல் என்பதனை புத்தி உள்ளவர்கள் மட்டுமே புரிந்துகொள்வர்.
கடந்த ஆட்சிக்காலங்களில் எமது தலைவர் பாராளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் அடிக்கடி வீர வசனம் பேசுவார். ஆனால் அவைகள் அனைத்தும் இன்றைய ஆட்சியில் செல்லாக்காசானது. அதாவது முஸ்லிம்களுக்கு எதிராக கெடுபிடிகள் மற்றும் ஜனாசாக்கள் எரிக்கப்பட்ட போதிலும் எமது தலைவரினால் அதனை தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆக குறைந்தது கட்சியின் பெயரால் எதிர்ப்பு பேரணியாவது நடாத்த முடியவில்லை. தலைவரின் வீர வசனங்களினால் எந்த பயனுமில்லை என்பதனை மக்கள் புரிந்துகொண்டனர்.
அவ்வாறான சூழ்நிலையில் மு.கா பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தனது கட்டளைக்கு அடிபணிய மறுத்ததனால், ஆகக்குறைந்தது ஒரு உறுப்பினரையாவது கட்டுப்படுத்த ஆளுமையற்ற தலைவர் என்ற அவப்பெயரை எமது தலைவர் சம்பாதித்தார்.
இதனால் “தலைவர் முஸ்லிம் மக்களின் செல்வாக்கினை இழந்துள்ளார். எனவே அவர் தலைவர் பதவியை விட்டு விலக வேண்டும்” என்ற கோசமும் அவ்வப்போது பரவலாக எதிரொலித்தது.
இவ்வாறான நிலையில் இன்று முஸ்லிம் மக்கள் மத்தியில் மு.கா பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செல்வாக்கு உள்ளதா ? அல்லது தலைவருக்கு உள்ளதா ? என்ற பலப்பரீட்சை ஏற்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் அரசியல் அரங்கில் தன்னை ஸ்திரப்படுத்தி தலைவர் பதவியை பலப்படுத்துவதென்றால் முஸ்லிம் மக்கள் மத்தியில் தனக்கு மட்டுமே அதிக செல்வாக்கு உள்ளது என்று காண்பிக்க வேண்டிய தேவை தலைவர் ரவுப் ஹக்கீமுக்கு ஏற்பட்டது. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் அப்போது அமையவில்லை.
இப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி அதிகரிப்பினால் ஆட்சியாளர்களுக்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பலைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு முஸ்லிம் மக்கள் மத்தியில் தனக்குத்தான் அதிக செல்வாக்கு உள்ளது என்பதனை நிரூபிப்பதற்காகவே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்த ஆர்ப்பாட்டம் வெற்றியளித்தால் “பழைய குறுடி கதவ தொறடி” என்பதுபோன்று மீண்டும் “நாரே தக்பீர், வாழ்க ஒழிக” என்னும் போராளிகளின் கோசத்தோடு தலைவர் வலம்வருவார். இதனால் தலைவர் என்னும் தனி நபர் உல்லாசமாக வாழ்வார் ஆனால் எமது சமூகத்துக்கு எந்தவித பிரயோசனமும் ஏற்படப்போவதுமில்லை, ஆட்சி மாறப்போவதுமில்லை.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
0 comments :
Post a Comment