கல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத் திட்டத்தில் அமைந்துள்ள முகைதீன் பள்ளிவாசலை வை.டபிள்யூ.எம்.ஏ. நிறுவனத்தின் அனுசரணையுடன் மீள்நிர்மாணம் செய்வதற்கு கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கென முதற்கட்டமாக 10 இலட்சம் ரூபாவை குறித்த நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இம்மீள்நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் வைபவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. ரஹ்மத் பவுண்டேஷன் தலைவரும் கல்முனை மாநகர சபை பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வை.டபிள்யூ.எம்.ஏ. நிறுவனத்தின் சார்பில் துவான் நஜீம் காசிம், ஹுசைன் காசிம், கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, கல்முனை முஹைதீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அசீஸ், கிரீன் பீல்ட் முஹைதீன் பள்ளிவாசல் நிர்வாகத் தலைவர் டி.ஏ.மஜீத், செயலாளர் எம்.எச்.ஏ.கரீம், பொருளாளர் ஏ.எம்.றியாஸ் உட்பட உலமாக்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது முதற்கட்ட நிதி 10 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலை, பள்ளிவாசல் நிருவாகத்தினரிடம் கையளிக்கப்பட்டதுடன் விசேட துஆப் பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 2004ஆம் இடம்பெற்ற சுனாமி பேரனர்த்தம் காரணமாக உயிர், உடமைகள், வீடு, வாசல்களை இழந்து நிர்க்கதியான சுமார் 450 குடும்பங்களுக்கென உருவாக்கப்பட்ட கிரீன் பீல்ட் வீட்டுத் திட்டத்தில் தொழுகைக்காக சிறியளவில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இப்பள்ளிவாசல் கடந்த சில காலங்களாக இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை புனரமைப்பு செய்வதற்கு உதவுமாறு ரஹ்மத் மன்சூரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளையேற்று, அவர் இதற்கான முயற்சிகளை துரிதமாக மேற்கொண்டிருந்தார்.
இதன் பிரகாரம் இப்பள்ளிவாசலை மீள்நிர்மாணம் செய்வதற்கு அனுசரணை வழங்க முன்வந்த வை.டபிள்யூ.எம்.ஏ. நிறுவனம் மற்றும் அதன் தலைவி வவாஷா தாஹா உள்ளிட்ட நிர்வாகத்தினருக்கு இதன்போது அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டார்.
0 comments :
Post a Comment