இலங்கை முஸ்லிம் அரசியலில் சர்வதேசமறிந்த சமகாலத் தலைவர், சட்ட முதுமணி, கவிஞர், சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், மும்மொழித்தேர்ச்சி மிக்கவர் என பல்வேறு துறைகளில் தடம்பதித்த ஆளுமைமிக்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அகவை 62ஐ எட்டியிருப்பதனால் அவர் பற்றிய ஒரு சிறப்புப் பார்வையாக இக்கட்டுரை எழுதப்படுகிறது.
கண்டி குருந்துகொல்லையை பிறப்பிடமாகவும் கலகெதரயை வசிப்பிடமாகவும் கொண்ட நூர் முஹம்மத் , ரவூப் ஹக்கீமின் தந்தைவழி பாட்டனார் ஆவார். சிங்கள மற்றும் தமிழ் மொழியாற்றல் மிக்க அவர் கவிஞராகவும், எழுத்தாளராகவும் இருந்தார். அவர் திருக்குர்ஆனில் சில பகுதிகளை சிங்கள மொழியில் மொழி பெயர்த்ததோடு, சிங்கள மொழியில் "இஸ்லாம் யனு குமக்த" (இஸ்லாம் என்பது என்ன?) என்ற கேள்வி, பதில் அமைப்பிலான நூலையும் அச்சிட்டு வெளியிட்டிருந்தார்."சத்திய இஸ்லாம் சன்மார்க்க வினா, விடை" என்ற ஐந்து கடமைகளின் விளக்கத்தை தமிழில் புத்தகமாக வெளியிட்டுமிருந்தார்.சிங்கள பாடசாலையொன்றிலும் கூட முதன் முறையாக முஸ்லிம் அதிபராக நியமிக்கப்பட்ட நூர் முஹம்மது அவர்கள், கலகெதரயில் "வாத்தியார் அப்பா" என அழைக்கப்பட்டார்.
நுவரலியா மாவட்டம், ஹபுகஸ்தலாவையைச் சேர்ந்த உதுமான் லெப்பை ஆலிம் சாஹிப் ரவூப் ஹக்கீம் அவர்களது தாய்வழி பாட்டனார் ஆவார் .இலங்கை ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த காலத்திலேயே இந்தியா சென்று தமிழ்நாட்டில் காயல்பட்டிணத்தில் மார்க்கக் கல்வியையும் - அரபு மொழி தேர்ச்சியையும் பெற்ற பின்னர், 35 வருடங்கள் ஊதியம் பெறாது ஹபுகஸ்தலாவை ஜும்மா மஸ்ஜிதின் பிரதான கதீபாக கடமையாற்றிய அன்னார் அரபுத்தமிழில் (அரவி, அரபு எழுத்துக்கள் பயன்படுத்தப்படும்) தேர்ச்சி பெற்றிருந்தார்.அரபுத் தமிழில் பிரசித்தி பெற்ற கவிதை அமைப்பிலான நூலாக பதூர் சஹாபாக்களை போற்றி எழுதப்பட்ட நாம கீர்த்தனப் பண்ணிசைப்பு நூலான "பத்று மாலை" யை இயற்றியவருமாவார் . திருமணப் பதிவாளராகவும் ஆங்கிலேய அரசால் அவர் நியமிக்கப் பட்டிருந்தார்.
இவ்வாறான சிறந்த குடும்பப் பின்னணியைக் கொண்டிருந்த அப்துல் ரவூப், ஹாஜரா தம்பதிகளுக்கு மூன்றாவது குழந்தையாக 1960 ஆம்ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் திகதி நாவலப்பிட்டியில் பிறந்தவர்தான் அப்துல் ரவூப் ஹிப்பதுல் ஹக்கீம்.
கல்வி மற்றும் தொழில்:-
அனுராதபுரம் மாவட்டம், கலாவெவ முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் என்.எம்.ஏ. ரவூப் அதிபராக இருந்த காலப்பகுதியிலேயே ரவூப் ஹக்கீம் பிறந்தார். பின்னர் கடமை நிமித்தமாக கெக்கிராவை – ஹோராப்பொல , பொலன்னறுவை மாவட்டத்தில் தம்பாளை ஆகிய இடங்களுக்கு அப்துல் ரவூப் அதிபர் இடமாற்றம் பெற்றுச் சென்ற சந்தர்ப்பங்களில் அக் கிராமங்களின் சமூக அபிவிருத்திக்காக பெரும் பங்காற்றியுள்ளார். தாம் வாழ்ந்த கிராமங்களில் மாத்திரம் அல்லாது, அயல் கிராமங்களுக்கும் சென்று பெண்களின் மார்க்க வழிபாடுகளை சீர் செய்து வழிநடாத்துவதில் ஹக்கீமின் தாயாரும் பெரும்பங்காற்றியுள்ளார் .
ரவூப் ஹக்கீமின் ஆரம்பகால கற்றல் நடவடிக்கைகள் தந்தையோடு இணைந்து குடும்பமாக புலம்பெயர்ந்த பாடசாலைகளில் இருந்தாலும் ,ஆறாம் தரததிற்கு அவர் தன் தந்தையின் கிராமமான கலகெதரவிலுள்ள ஜப்பார் மத்திய கல்லூரியில் சேர்க்கப்பட்டார் .அப்போதேயே சிறந்த பேச்சாற்றலைக் கொண்டிருந்த ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்ட ரீதியாக நடாத்தப்பட்ட அனைத்து மொழி ,வயது பிரிவுகளிளுமான மிகச்சிறந்த பேச்சாளருக்கான மலேஷிய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் கேடயத்தையும் வென்றிருந்தார். கலகெதரையில் பயின்று கொண்டிருந்த போது அக்காலப்பகுதியில் ஏழாம் தரத்தில் நடாத்தப்பட்டுவந்த "நவோதய" புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி மிகச் சிறப்பாக சித்தியடைந்ததன் காரணமாக 1973 இல் கொழும்பிலுள்ள ரோயல் கல்லூரியில் கற்கும் சந்தர்ப்பத்தை அவர் பெற்றுக் கொண்டார்.
ரவூப் ஹக்கீம் தனது தலைமைத்துவ ஆளுமையையும், எழுத்து மற்றும் பேச்சுத் திறமைகளையும் வளர்த்துக்கொண்டதோடு, ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் ஆற்றல் மிக்கவராக தன்னை புடம் போடும் களமாக ரோயல்கல்லூரியை பயன்படுத்திக் கொண்டார்.
அவர் ரோயல் கல்லூரியில் தமிழ் நாடக மன்றத்தின் தலைவராக இருந்தார். ரோயல் கல்லூரியின் விவாதக் குழுவில் நான்கு வருடங்கள் உறுப்பினராக இருந்து பின்னர்அதன் தலைவராவும் அணியை வழிநடாத்தினார்.
1976ம் ஆண்டு பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில், பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் ரவூப் ஹக்கீம் ரோயல் கல்லூரியிலிருந்து பங்கேற்று அந் நாட்டின்சிற்பி முஹம்மத் அலி ஜின்னா பற்றி சிறப்பாக எழுதியதற்காக தங்கப்பதக்கத்தை வென்றதோடு, பின்னர் 1979ம் ஆண்டில் சிறந்த பேச்சாளருக்கான இராமநாதன் நினைவு விருதையும் வென்றார்.
பாடசாலைக் கல்வியை முடித்து விட்டு சட்டக் கல்லூரியில் இணைந்தார். அங்கும் தனது திறமைகளால் மிகச்சிறப்பாக அவர் செயற்பட்டார். சட்டக் கல்லூரி தமிழ் மன்றத்தின் தலைவராகவும் ரவூப் ஹக்கீம் இருந்தார்.
இங்கிலாந்தின் சொலிசிடர் பரீட்சையில் தேறி யிருந்த ரவூப் ஹக்கீம் பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமாணி (L.LM) பட்டத்தையும் பெற்றுக் கொண்டார் .
திருமண வாழ்வு:-
கண்டி மாநகர சபை உறுப்பினராக இளம் வயதில் தெரிவு செய்யப்பட்ட பிரபல வர்த்தகரும் , சமூக சேவையாளருமான இஸ்மாயில் முஹம்மத் குத்தூஸ் அவர்களின் ஒரே மகளான ஷானாஸ் என்பவரை ரவூப் ஹக்கீம் திருமணம் செய்து கொண்டார்.
ஷானாஸ் குத்தூஸ் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வணிகத்துறையில் முதுமாணி (MBA) பட்டத்தைப் பெற்றவர். தனது வணிக நிறுவனமான கார்னிவல் ஐஸ் கிரீம் நிறுவனத்தை வெற்றிகரமாக முகாமைத்தும் செய்து வருகின்றார்.இனிப்புப் பண்டங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவியாகவிருந்தவர். தொழிலாண்மை பெண் ஆளுமைகளுக்கு சிறந்த முன்னூதாரணமாகத் திகழ்கிறார்.
ரவூப் ஹக்கீம்- ஷானாஸ் தம்பதிகளுக்கு செய்னப், செய்தூன் என இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.. மூத்த மகளான செய்னப் நட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவத்தில் பட்டம் பெற்றவர்.கலாநிதி மில்ஹான் இக்ராம் முகமது என்ற வழக்கறிஞரை மணந்து கொண்டார். இவ்விருவருக்கும் சுபைதா என்ற மகள் ஒருவர் இருக்கிறார்.
ரவூப் ஹக்கீமின் மற்றைய மகளான செய்தூன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் அண்மையில் பட்டம்பெற்றுக் கொண்டார்.அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இயந்திரவியலாளரான ராயீட் பரீட் என்பவரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
அரசியல் பிரவேசமும் அதன் பின்னணியும்:-
ரவூப் ஹக்கீம் முதன் முதலாக முஸ்லிம்களின் விடுதலை இயக்கமான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினூடாகவே அரசியலுக்குள்பிரவேசித்தார்.
சட்டக்கல்லூரியில் கற்றுக் கொண்டிருக்கும் போது முதன் முதலாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப்பைச் சந்தித்தார். 1972 ஆம் ஆண்டின்அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான அஷ்ரப் அவர்களது விமர்சனத்தை ஆர்மாகப் படித்துக் கொண்டிருக்கும் போது ரவூப் ஹக்கீம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அஷ்ரஃப்பிடம் சென்று ஒரு மறக்க முடியாத உரையாடலில் ஈடுபட்டார்.
விடுதலைப் புலிகளின் தேடுதல் நடவடிக்கைகள் கிழக்கில் மும்முரமாக இருந்த காலப் பகுதியில் அஷ்ரப் அவர்கள் கொழும்பிற்கு இடம்பெயர்ந்தபோது ,ஜனாதிபதி சட்டத்தரணி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஊடாக அஷ்ரப் – ஹக்கீம் உறவு வளர்ந்த்தது .
1989ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தலைவர் அஷ்ரஃப்பின் வேண்டுகோளின் பேரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினைப் பிரதிநிதித்துவப்படுத்தி கண்டி மாவட்டத்தில் ரவூப் ஹக்கீமின் மாமனாரான இஸ்மாயில் குத்தூஸ் போட்டியிட்டார்.
அத்தேர்தலில் இஸ்மாயில் குத்தூஸின் பிரசார முகாமையாளராக ரவூப் ஹக்கீம் செயற்பட்டார். பிரஸ்தாபத் தேர்தலில் கட்சியில் போட்டியிட்டவர்களின் பட்டியலில் முதலிடத்தை குத்தூஸ் பெற்றுக் கொண்டாலும், முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டதால் சிறிய வாக்கு வித்தியாசத்தில் ஆசனத்திற்குத் தகுதிபெறவில்லை.
இவ்வாறு 1988ம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து தலைவர் அஷ்ரஃப்பின் வேண்டு கோள்களின்படி சிறப்பாகச் செயற்பட்டது மாத்திரமின்றி, கட்சி வளர்ச்சிப் பணிகளிலும் ஹக்கீம் அயராது பாடுபட்டார். 1992ம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளராக ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டார். கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடிகளின் போது அவர் தலைமைக்குப் பக்கபலமாகச் செயற்பட்டார்.
ரவூப் ஹக்கீமின் ஆளுமை பண்புகள்,கட்சி செயலாளராக சிறப்பாக செயற்பட்டமை, கட்சி வளர்ச்சியில் அவரது பங்களிப்பு என்பவற்றோடு தலைமைத்துவ விசுவாசம் கருத்திற் கொள்ளப்பட்டதால் 1994ம் ஆண்டு ரவூப் ஹக்கீமின் 34வது வயதில் தேசியப்பட்டியலூடாக பாராளுமன்ற உறுப்புரிமை அஷ்ரஃப்பினால் வழங்கப்பட்டது. அத்தோடு, பாராளுமன்றத்தில் குழுக்களின் பிரதித் தலைவராகவும் ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டார்.
1998ம் ஆண்டு அரசியல் மற்றும் அரசாங்க விவகாரங்களுக்காக ஜெய்சீஸ் அமைப்பு வருடாவருடம் வழங்கும் சிறந்த இளைய அரசியல்வாதிக்கான விருதை வென்றுள்ள ரவூப் ஹக்கீம் ,கொழும்பு மாவட்ட பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பையும் வென்றவராவார் .
1999ம் ஆண்டு தலைவர் அஷ்ரஃப் தூரநோக்கோடு தேசிய ஐக்கிய முன்னணி கட்சியை ஆரம்பித்தார். முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருந்த ரவூப் ஹக்கீமை அப் பதவியில் இருந்து அகற்றி , தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளராக ஹக்கீமை அஷ்ரஃப் பதவி மாற்றம் செய்தார்
2000ம் ஆண்டு கண்டி மாவட்டத்தில் தேசிய ஐக்கிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி,ஆனால் ,மரச் சின்னத்தில் பாராளுமன்ற தேர்தலில் அஷ்ரஃப்பினால் ரவூப் ஹக்கீம் களமிறக்கப்பட்டார். வடக்கு, கிழக்கிற்கு வெளியே பிரதான அரசியல் நீரோட்ட தேசிய கட்சிகளில் அல்லாது ஒரு முஸ்லிம் கட்சியிலிருந்து ஒருவர் போட்டியிட்டு வெற்றி பெற்றமை அதுவே முதல் தடவையாகும்.
2000ம் ஆண்டு பெருந்தலைவர் அஷ்ரஃப்பின் திடீர் மறைவைத் தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸிக்குள் தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டது. இதன் காரணமாக ரவூப் ஹக்கீம் மற்றும் பேரியல் அஷ்ரஃப் ஆகிய இருவரும் கட்சி தலைமைத்துவத்திற்கு இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள்.அதன் பின், சிறிது காலத்திலேயே சில முரண்பாடுகள் ஏற்பட, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவராக பேரியல் அஷ்ரஃப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக ரவூப் ஹக்கீமும் நியமிக்கப்பட்டார்கள்.
2000ம் ஆண்டு ரவூப் ஹக்கீம், உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகம், முஸ்லில் சமய விவகாரங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சராக சந்திரிக்கா அம்மையாரின் தலைமையிலான அமைச்சரவையில் நியமிக்கப்பட்டார்.
2001ம் ஆண்டு மாவனெல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற இணக்ககலவர்த்தின் பின்னணியில் அரச சார்பு அரசியல்வாதிகள் இருந்ததனை ஹக்கீம் வெளிப்படையாகவும் பலமாகவும் கண்டித்ததன் காரணமாக தனது அமைச்சரவையிலிருந்து சந்திரிக்கா அம்மையார் ரவூப் ஹக்கீமை அமைச்சுப் பதவில் இருந்து இரவோடிரவாக அதிரடியாக நீக்கினார். அதன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறயதனால் சந்திரிக்கா அரசு பெரும்பான்மையை இழந்து தடுமாறி கவிழ்ந்தது.
2001ம் ஆண்டு ஒக்டோபரில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொண்டது.அதே ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து கண்டியில் போட்டியிட்டு ரவூப்ஹக்கீம் மீண்டும் அங்கு வெற்றி பெற்றார்.
பாராளுமன்றத் தேர்தல் வெற்றியின் பின்னர் அமைக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் துறைமுக அபிவிருத்தி, கப்பல் துறை , முஸ்லிம் விவகார மற்றும் கிழக்கு அபிவிருத்தி அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார்.
2004ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் அதாவுல்லாஹ் , ஹரீஸ் , அன்வர் இஸ்மாயில் ஆகியோர் முஸ்லிம் காங்கிரசில் இருந்து விலகி, சந்திரிக்கா அணியோடு இணைந்து ஒரு சவால் மிக்க சூழலை கிழக்கு அரசியலில் தோற்றுவித்த போதும், மிகவும் துணிச்சலோடு களத்தில் இறங்கிய ரவூப் ஹக்கீம் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு அமோக வெற்றியை ஈட்டி, மீண்டும் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். இத்தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியை இழந்ததன் காரணமாக பங்காளிகட்சியான முஸ்லிம் காங்கிரஸும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.
2007ம் ஆண்டு ஜனவரி மாதம் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சு வழங்கப்பட்டது. அதே வருடம் டிசம்பர் மாதம் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறியது.
2008ம் ஆண்டு முதன் முதலாக கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற போது ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டது. ஹிஸ்புல்லாஹ் திடீர் என கட்சிதாவியதால் உருவான சவால் மிக்க சூழலை தைரியமாக எதிர்கொண்ட தலைவர் ரவூப் ஹக்கீம், தனது பாராளுமன்ற ஆசனத்தை இராஜினாமா செய்துவிட்டு திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளால் வெற்றி பெற்றார். கிழக்கு மாகாண சபை ஆட்சியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியதன் காரணமாக ரவூப் ஹக்கீம் மாகாண சபை உறுப்பினர் பதவியைவிட்டு விலகி ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப் பட்டியலூடாக மீண்டும் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தார்.
2010ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ரவூப் ஹக்கீம், கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியோடு இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொண்டதன் காரணமாக நீதி அமைச்சராக ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டார்.
மகிந்த ராஜபக்ஷ அரசின் இனவாத செயற்பாடுகள் முஸ்லிம் சமுகத்தை மிகவும் இக்கட்டான சூழ் நிலைக்கு ஆளாக்கி இருந்த்ததனால் அரசுக்குள் இருந்து கொண்டே சமூகத்திற்கான போராட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை வரை கொண்டு செல்கின்ற சாணக்கியமான நகர்த்தல்களை மேற்கொண்டிருந்த ஹக்கீம் , 2014ம் ஆண்டு இறுதிப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் அன்றைய எதிரணி பொது வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிரிசேனவுக்கு ஆதரவு கொடுப்பதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார்.
2015ம் ஆண்டு மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு அமைக்கப்பட்ட அமைச்சரவையில் ரவூப் ஹக்கீம் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2015ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டது. இதன் போது ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அமைச்சரவையில் நகரத்திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சராக அவர் இருந்தார்.அந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற 52 நாள் அரசியல் குழப்பத்தின் பின்னர் ரவூப் ஹக்கீமுக்கு முன்னைய அமைச்சுக்களுடன் சேர்த்து உயர்கல்வியமைச்சும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அவர் 2019ம் ஆண்டு பாராளுமன்ற அரசியல் வாழ்வில்தொடர்ச்சியாக 25 வருடங்களை நிறைவுசெய்து வெள்ளி விழா கண்ட அரசியல்வாதியாகினார் .
சமூகம் நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் போது அமைச்சுப் பதவிகளைத் துறந்து வெளியேறி துணிச்சலுடன் சவால்களுக்கு முகம் கொடுத்து வெற்றிகண்டவர் ரவூப் ஹக்கீம் . ஆட்சியாளர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கத்தை அழிக்க அந்த கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களைப் பயன்படுத்திய போது கட்சியை அழிவிலிருந்து பாதுகாக்கும் நோக்கோடு அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவேண்டிய இக்கட்டான சூழ்நிலைகள் உருவாக்கப் பட்டபோது அவற்றிற்கும் ரவூப் ஹக்கீம் முகம் கொடுக்க நேர்ந்தது .
2020ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் சஜித் பிரமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்டு முதன்மை வெற்றியாளராக வெற்றி பெற்றார். பொதுஜன பெரமுன கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதால், எதிர்க்கட்சி அரசியலை ரவூப்ஹக்கீம் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்.
2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவங்களின் பின்னர் இன்றுவரை முஸ்லிம் சமூகத்திற்கெதிரான இனவாதச்சக்திகளின் நெருக்குவாரங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
ஜனாஸா எரிப்பு, முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம், முஸ்லிம் விவாக, விவாகரத்து, காதி நீதி மன்றத்திற்கெதிரான நிலைப்பாடு, மத்ரஸாவுக்கெதிரான கருத்து எனப்பலவாறான பிரச்சனைகளுக்கு சமூகம் முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் போது, தனது கட்சியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், சமூக உணர்வுகளுக்குமதிப்பளித்து, இந்த ஆட்சி நாட்டு மக்களை வீதிக்கு இறக்கும் நிலையைத் தோற்றிவித்தருப்பதை கண்டித்து தனி நபராக தன்னாலான அனைத்து வழிகளிலும் போராடிக் கொண்டிருக்கும் தலைவராக ரவூப் ஹக்கீம் திகழ்கிறார்.
முஸ்லிம்கள் பயங்கரவாதிகள், பெண் அடிமைவாதிகள் என பிழையான கருத்தியலை பிரசார உத்தியாக இனவாதிகள் கையில் எடுத்திருந்த சூழலில் , போது ரவூப் ஹக்கீம் அவ்விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் நோக்கில் "WE ARE A PART , NOT APAART " (நாம் ஒரு பிரிவினரேயன்றி , பிரிந்து வாழ்பவர்கள் அல்லர்) என்ற நூலை எழுதி 2020ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டார்.
அந்நூலில் " இஸ்லாம் பயங்கரவாதம், பெண்ணடிமைத்துவமும் கொண்ட மார்க்கமல்ல" என்ற கருதுகோளை அவர் தகுந்த ஆதாரங்களுடன் நிறுவுகிறார். அந்நூல் காலத்திற்குப் பொருத்தமான நூலாக நோக்கப்படுகிறது. அந்நூல் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டிருக்கிறது. விரைவில் தமிழ் மற்றும் சிங்கள மொழியிலும் வெளியிடுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு தனது வாழ்நாளில் பல படித்தரங்களைப் பெற்று முன்னேறி இனங்களுக்கிடையில்நல்லிணக்கத்தோடு செயற்படும் தலைவராக, பெரும்பான்மை இன மக்களின் ஆதரவையும் ஒருசேரப் பெற்ற முஸ்லிம் அரசியல் தலைவர் என்ற தகமை ரவூப் ஹக்கேமிற்கே உரியது.அவர் சிங்கள மக்களோடும்,தமிழ் மக்களோடும் சிறந்த உறவைப் பேணி வருகிறார்.ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் இனநல்லுறவைப் பலப்படுத்தும் தலைவராக ரவூப் ஹக்கீம் இருப்பதனால், "அமரபுர நிக்காயவின் சம்புத்த சாசனோதய மகா சங்கத்தினால்” அதன் துணை பீடாதிபதி கொடுகொட தம்மவாச நாயக்க தேரரின் தலைமையிலான சங்க சபை "சர்வ சமய சாமகாமீ தேச அபிமானி லங்கா புத்ர" எனும் விருதை கண்டி புஷ்பானந்த கேட்போர் கூடத்தில் வைத்து ரவூப் ஹக்கீமுக்கு வழங்கி கௌரவித்துள்ளது.
(நன்றி : தமிழன்)
0 comments :
Post a Comment