ஜனாதிபதி முறையுடன் மாகாணசபைகளும், விகிதாசார தேர்தல் முறையும் போக வேண்டும் என்ற கருத்து ஆபத்தானது.-மனோ கணேசன்



நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அகற்றப்படுமானால், 13ம் திருத்தம் அதனோடு மாகாணசபைகளும், அதனோடு விகிதாரசார தேர்தல் முறைமையும் போக வேண்டும்" என்ற கருத்து அரங்குக்கு மெல்ல வருகிறது. இது ஆபத்தானது. கண்களை விற்று சித்திரம் வாங்க நாம் தயார் இல்லை. அரசியலமைப்பை திருத்துகிறோம் என்ற போர்வையில், இன்றைய அரசியலமைப்பின் கீழ் இருக்கும் இந்த குறைந்தபட்ச உரிமைகள் மீது, எவரும் கை வைத்தால், அதற்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணி உயிரை கொடுத்து போராடும்.
வடக்கு கிழக்கின் ஏனைய தமிழ் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும் இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை பகிரங்கமாக அறிவித்தால், ஒட்டு மொத்த தமிழ், முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடுகளை நாம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாட்டுக்கு அறிவிக்கலாம் என ஜனநாயக மக்கள் முன்னணி - தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

அரசில் இருந்து விலகி விட்டதாக கூறும் இரத்தின தேரர் "நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அகற்றப்படுமானால், 13ம் திருத்தம் அதனோடு மாகாணசபைகளும், அதனோடு விகிதாரசார தேர்தல் முறைமையும் போக வேண்டும்" என, கட்சி தலைவர்கள் கூட்ட்டத்தில் கூறினார்.

அவரை இறுக்கமாக இடைமறித்து "எந்த அரசியலமைப்பு திருத்தம் வந்தாலும், விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம் என்ற குறைந்தபட்ச அதிகாரபரவலாக்கல் ஆகியவற்றின் மீது கைவைக்க நாம் விட மாட்டோம்." என்று நான் பதில் சொன்னேன். இந்த நிலைப்பாட்டிலேயே ஐக்கிய மக்கள் கூட்டணியின் சகோதர பங்காளி கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவையும் உறுதியாக இருக்கின்றமையை அக்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த பிக்கு எம்பியின் இந்நிலைப்பாடு அங்கு வேறு சிலரின் மனதுகளுக்குள்ளும் ஒளிந்து இருப்பது எனக்கு தெரியும். கடந்த சில தினங்களாக நடைபெறும் கட்சி தலைவர்கள் கலந்துரையாடல்களில், இந்த கருத்து நேரடியாகவும், மறைமுகமாகவும், பல பெரும்பான்மை கட்சி அரசியல் கட்சி தலைவர்களால், பிரதிநிதிகளால் கூறப்பட்டது.

இதுபற்றிய பேச்சு, நேற்று நடந்த கட்சி தலைவர் கூட்டத்தில் மீண்டும் வந்தது. நான் மீண்டும் சொன்னேன். "விகிதாசார தேர்தல் முறைமை, மாகாணசபைகளை அகற்றித்தான் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அகற்ற முடியுமென்றால், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முழுமையாக அகற்ற வேண்டாம். 20ம் திருத்தத்தை முழுமையாக அகற்றி 19ம் திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவோம். அதில் ஜனாதிபதி படுபலவீனமாகி விடுவார்."
"அதை விடுத்து, விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம் என்ற குறைபட்ச அதிகாரபரவலாக்கல் ஆகியவற்றின் மீது கை வைத்தால், அதற்கு எதிராக நான் என் உயிரை கொடுத்தாவது போராடுவேன்." என்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நான் கூறியுள்ளேன். மேலும் இருக்கும் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதை விடுத்து, மேலும் புதிய பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் என சபாநாயகரிடம் நான் கூறினேன்.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இதுபற்றிய தன் கருத்தை நேற்று முதல்நாள் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மிக தெளிவாக அறிவித்தார். “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக அகற்ற வேண்டும் என நாம் சொன்னாலும், விகிதாசார தேர்தல் முறைமையையும், 13ம் திருத்தத்தையும் மாற்ற நாம் உடன்பட மாட்டோம். இவை தொடர்பாக எங்கள் பங்காளி கட்சிகளுக்கு நாம் உறுதியளித்துள்ளோம்." என்று சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பாக கூறினார். இது ஒரு தேசிய கட்சி/கூட்டணி ஒன்றின் தலைவரின் மிக முற்போக்கான நிலைப்பாடாகும்.

13ம் திருத்தம் தொடர்பில் தமக்கு அக்கறை இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நண்பர் கஜேந்திரகுமார் எம்பி என்னிடம் கூறியுள்ளார். ஆனால், விகிதாசார தேர்தல் முறைமையும், ஏதோ ஒருவகையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும் தொடர வேண்டுமென்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என அவர் மேலும் கூறியுள்ளார்.

13ம் திருத்தம் மூலமான மாகாணசபைகள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டுமல்ல, முழு நாட்டிலும் ஒன்பது மாகாணங்களிலும், குறிப்பாக மத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் உள்ளன. ஆகவே அதுபற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் நியாயமான நிலைபாட்டை வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் புரிந்துகொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன்.

கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதியாக கலந்துக்கொள்ளும் நண்பர் சுமந்திரன் எம்பி, விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம் ஆகியவை தொடர்பில் எமது நிலைப்பாடுகளுடன் உடன்படுவதாக கூறுகிறார். ஆனால், அவரது சில கருத்துகள், "விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம்" ஆகியவற்றை தேசிய தளத்தில் தேவையற்ற சிக்கல்களில் கொண்டு போய் மாட்டி விடுமோ என்ற சந்தேகம் எனக்குள் ஏற்பட்டுள்ளது. ஆகவே இத்தகைய தேவையற்ற முரண்பாடுகளை தவிர்த்து கொள்ளும் நோக்கில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பில் தமது இன்றைய தெளிவான நிலைப்பாடுகளை அறிவிக்க கோருகிறேன்.
வடக்கு கிழக்கின் ஏனைய தமிழ் கட்சிகளும் இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை பகிரங்கமாக அறிவித்தால், ஒட்டு மொத்த தமிழ், முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடுகளை நாம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாட்டுக்கு அறிவிக்கலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :