இலங்கை அரசியல் அரங்கில்!



ஆர்.சனத்-
'20' ஐ ஒழித்து '19' இற்கு புத்துயிர் கொடுக்கும் பிரேரணை அமைச்சரவையில் இன்று முன்வைப்பு.

மஹிந்தவின் பதவியை காக்க ஆளுங்கட்சி வியூகம்.


நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு இ.தொ.கா. ஆதரவு .


04 ஆம் திகதி சபையில் நடக்கபோவது என்ன?


ரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கிவிட்டு, 19 ஐ திருத்தங்கள் சகிதம் மீள செயற்படுத்துவதற்கான பிரேரணை, இன்று (25.04.2022) அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
 
ஏப்ரல் 18 ஆம் திகதி நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.
 
இக்கூட்டத்தின்போது முக்கியமான சில அமைச்சரவைப் பத்திரங்கள் முன்வைக்கப்படவுள்ளன. இதன்போதே '20' ஐ நீக்கிவிட்டு '19' ஐ திருத்தங்கள் சகிதம் செயற்படுத்தும் அமைச்சரவை பத்திரத்தை பிரதமர் முன்வைக்கவுள்ளார்.
 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்களான அமைச்சரவையும் வீடு செல்ல வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் தொடர் போராட்டங்கள் இடம்பெறும் நிலையில், ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக மறுத்துவிட்டனர்.
அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியை பதவியில் இருந்து அகற்ற வேண்டுமானால் அவருக்கு எதிராக குற்றப் பிரேரணை முன்வைக்கப்பட வேண்டும். அதற்கு 150 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். மேலும் சில இறுக்கமான நடைமுறைகளும் உள்ளன. எனவே, தற்போதைய சூழ்நிலையில் குற்றப் பிரேரணையை நிறைவேற்றுவது பெரும் சவாலுக்குரிய விடயமாகும்.
 
எனவேதான், பிரதமர் மஹிந்த உள்ளடங்களான அரசை பதவியில் இருந்து அகற்றுவதற்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. அதுமட்டுமல்ல நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி, சுயாதீன அணிகள் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியால் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேற்படி யோசனைகளை சபாநாயகர், சட்டமா அதிபருக்கும், பிரதமருக்கும் அனுப்பி வைத்தார். அவற்றில் உள்ள விடயங்களையும் உள்ளடக்கியே புதிய பிரேரணையை மஹிந்த அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளார். அந்த பிரேரணையே 21 ஆவது திருத்தச்சட்டமாக சபைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.
 
சஜித் அணியின் வியூகம்:

அதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அரசுக்கு எதிராக ஓரணியில் திரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளுக்கும் இடையில் பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன.
 
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையிலான குழுவினர், சுயாதீன அணிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்களை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடிவருகின்றனர்.
 
பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு தயாராகிவரும் ஐக்கிய மக்கள் சக்தி, தற்போது அதற்கான ஆவணத்தில் கையொப்பம் திரட்டிவருகின்றது.
 
அப்பிரேரணையின் உள்ளடக்கங்கள் தொடர்பில் தமக்கு தெரியப்படுத்தப்படாததால், ஆதரவு வழங்கும் முடிவை எடுக்கவில்லை என சுதந்திரக்கட்சி உட்பட சுயாதீன அணிகள் அறிவித்தன. பிரதமர் பதவி விலகி சர்வக்கட்சி அரசு அமைக்க இடமளிக்காவிட்டால், தாமும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர தயார் எனவும் குறிப்பிட்டின.
 
இந்நிலையிலேயே பிரேரணையின் உள்ளடக்கங்கள் பற்றியும், எதிரணிகளின் யோசனைகளையும் உள்வாங்கும் நடவடிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்துள்ளது.
 
இ.தொ.கா. ஆதரவு

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு இ.தொ.கா. ஆதரவு வழங்கும் என அக்கட்சியின் அரசியல் உயர்பீடம் தீர்மானித்துள்ளதென இ.தொ.காவின் ஊடகப் பிரிவு நேற்று தெரிவித்துள்ளது.
 
இதற்கிடையில் பிரதமருக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையை ஆளுங்கட்சி மேற்கொண்டுவருகின்றது. இதற்கு 113 எம்.பிக்களின் ஆதரவு இல்லையேல் பதவி விலகும் முடிவில் பிரதமர் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
 
அதேவேளை, பிரதி சபாநாயகருக்கான தேர்தலின்போது அநுர பிரியதர்சன யாப்பாவை வேட்பாளராக நிறுத்துவதற்கு 11 கட்சிகளின் கூட்டணி உத்தேசித்துள்ளது. ஆளுங்கட்சியின் சார்பில டிலான் பெரேராவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. எனினும், இது குறித்து இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
நாடாளுமன்றம் மே 4 ஆம் திகதி கூடும்போது முதல் நடவடிக்கையாக சபாநாயகர் தேர்வு இடம்பெறவேண்டும்.

அன்றைய தினம் டலஸ் அழகப்பெரும தலைமையில் ஆளுங்கட்சியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிலிருந்து வெளியேறும் முடிவை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :