பதவி விலக ஜனாதிபதி மறுப்பு! சர்வக்கட்சி அரசுக்கு மீண்டும் அழைப்பு!!
'சர்வக்கட்சி அரசின் தன்மை, பதவிப் பங்கீடு, கால எல்லை குறித்து 29 ஆம் திகதி விசேட கலந்துரையாடல்
ஜனாதிபதியின் திட்டத்துக்கு பிரதான எதிர்க்கட்சிகள் போர்க்கொடி - சுயாதீன அணிகள் சரணடையும் அறிகுறி
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வக்கட்சி அரசமைப்பதற்கு தான் கொள்கையளவில் இணங்கியிருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சி மற்றும் நாடாளுமன்றத்தில் சுயாதீன அணிகளாக செயற்படும் கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதியால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான தற்போதைய அமைச்சரவை பதவி விலகிய பின்னர், அமைப்பதற்கு உத்தேசிக்கப்படும் சர்வக்கட்சி அரசின் வியூகம், அவ்வரசில் பொறுப்புகளை வகிக்கக்கூடிய நபர்கள், அவ்வரசு செயற்படக்கூடிய கால எல்லை ஆகியன தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக ஜனாதிபதி தலைமையில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (29) ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஆளுங்கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கும், அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டு நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் கட்சிகளின் தலைவர்களுக்குமே இக்கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு தீர்வைகாண சர்வக்கட்சி அரசொன்றை அமைக்குமாறு மகாநாயக்க தேரர்கள், பேராயர் உட்பட ஆன்மீக தலைவர்களும், சில அரசில் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் கோரிக்கை விடுத்திருந்தன. இதற்கமையவே கொள்கை அடிப்படையில் தான் இந்த முடிவை எடுத்தார் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஜனாதிபதி பதவியில் கோட்டாபய ராஜபக்ச நீடிக்கும்வரை எந்தவொரு அரச கட்டமைப்புக்கும் ஆதரவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் அறிவித்துவிட்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளும் இதே நிலைப்பாட்டில் உள்ளன.
எனவே, அரசிலிருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையிலேயே புதிய அரசு அமைப்பதற்கான சாத்தியம் தென்படுகின்றது. அதில் மொட்டு கட்சி உறுப்பினர் ஒருவர் பிரதமர் பதவியை வகிக்கலாம். புதிய பிரதமர் ஏற்றுக்கொள்ளக்கூடிய நபராக இருந்தால் எதிரணிகள், வெளியில் இருந்து, சட்டமூலங்களை இயற்ற நாடாளுமன்றில் ஆதரவை வழங்கலாம்.
சர்வக்கட்சி அரசுக்கான வியூகம் வகுக்கப்பட்டு, வேலைத்திட்டம் உருவாக்கப்படுமானால், பிரதமர் பதவியை துறப்பதற்கு தான் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச, மகாசங்கத்தினருடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் வலியுறுத்தலாக - பிரதான கோரிக்கையாக இருக்கின்றது. எனினும், அவர் தலைமையில் இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கான ஏற்பாடே இடம்பெற்றுவருகின்றது.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் விவரம்,
1.ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
2.ஐக்கிய மக்கள் சக்தி
3.இலங்கை தமிழரசுக்கட்சி
4.தேசிய மக்கள் சக்தி
5.அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
6.ஈபிடிபி
7. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
8.ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
9.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
10.முஸ்லிம் தேசியக் கூட்டணி
11. ஐக்கிய தேசியக்கட்சி
12. எமது மக்கள் சக்தி
13. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி
14.தேசிய காங்கிரஸ்
முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகியவற்றின் ஊடாக சபைக்கு தெரிவானவர்கள் அரசுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டனர். எனினும், எதிரணி பக்கம் உள்ள அக்கட்சியின் உறுப்பினர்கள் அரசை ஆதரிக்கும் முடிவில் இல்லை.
0 comments :
Post a Comment