மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தின் மகாகும்பாபிஷேக குடமுழுக்குப்பெருவிழா!



ரலாற்றுப்பிரசித்திபெற்ற அருள்மிகு மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் ஆவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட மஹா கும்பாபிஷேக குடமுழுக்குப்பெருவிழா எதிர்வரும் புதன்கிழமை 06.04.2022இல் நடைபெற திருவருள் கூடியுள்ளது.

கும்பாபிஷேக பிரதமகுருவாக ஆலயபிரதமகுருவும் கிழக்கிலங்கையின் பிரபல சிவாச்சாரியாரியாருமான சிவாகம வித்யாபூஷணம் சிவாச்சார்ய திலகம் பிரதிஸ்டாதிலகம் ஜோதிடவித்யாதத்துவநிதி விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் செயற்படுகிறார்.
2ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 5மணிக்கு கர்மாரம்பத்துடன் கிரியைகள் யாவும் ஆரம்பமாகின. எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் இன்றுதிங்கள்(4)காலை 8மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை(5) பி.ப.3மணிவரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எண்ணெய்யை ஆலயத்தில் விநியோகிக்க பரிபாலனசபை ஏற்பாடு செய்துள்ளது என ஆலயத்தலைவர் கி.ஜெயசிறில் தெரிவிக்கிறார்.
நாளை 05ஆம் திகதி செவ்வாய்க்கிழமை எண்ணெய்க்காப்பு நிறைவுற்றகையோடு பி.பகல் 4மணியளவில் ஆலய முன்றலில் 1மணிநேர சூரசம்ஹாரம் காத்தவராயன் ஆகிய இரு வடமோடி நாட்டுக்கூத்துகள் நடைபெறவுள்ளன.
மறுநாள் மஹா கும்பாபிஷேகம் 6ஆம் திகதி புதன்;கிழமை காலை 9.12மணிமுதல் 10.27மணி வரையுள்ள சுபவேளையில் இடம்பெற அருள்பாலித்துள்ளது.
ஆலயகுரு சிவஸ்ரீ ச.ஹோவர்த்தன சர்மா ஒழுங்கமைப்பில் சர்வசாதகராக ஆரியபாஷாவிற்பன்னர் சிவஸ்ரீ சண்முக மயூரவதனக்குருக்களும் பிரதிஸ்டா குருவாக கிரியாஜோதி சிவஸ்ரீ வே.யோகராசாக்குருக்களும் செயற்பட மகேஸ்வரபூஜையை கோ.ஜனபாலச்சந்திரன்(அவுஸ்திரேலியா) வழங்கவுள்ளார்.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 24தினங்கள் மண்டலாபிசேக பூஜைகள் இடம்பெறுமென ஆலயநிருவாகசபையினர் தெரிவித்தனர்..
அமைவிடம்
இலங்கையில் இருக்கும் ஒரேயொரு மீனாட்சி அம்மன் ஆலயமான அம்பாறைமாவட்ட நிந்தவூர் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மருதநிலசூழலில்; எழுந்தருளி மாட்டுப்பளை மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயம் சுமார் 500வருடங்களாக அருள்பாலித்துக்கொண்டிருக்கிறது.
சுற்றவர பச்சைப்பசேலென்ற வயல்வெளிகளுக்கு மத்தியில் ஆலமரம் அரசமரம் மாமரம் கமுகு வில்வை மரம் தென்னை மரங்கள் நிறையப்பெற்ற ஒரு மனோரம்மியமான தண்மையான சூழலில் இவ்வாலயம் அமைந்துள்ளதும் சிறப்புத்தான். அங்கு சென்றவர்கள் உடனே திரும்பமுடியாதளவிற்கு அந்த சூழல் பக்தர்களைசுண்டி ஈர்க்கிறது.
காஞ்சியில் காமாட்சி காசியில் விசாலாட்சி மதுரையில் மீனாட்சி மடத்தடியில் மீனாட்சி என்பார்கள்.
ஆலயவரலாறு
போத்துக்கீசர் காலத்தில் அதாவது 15ஆம் நூற்றாண்டு காலத்தில் 1624 காலப்பகுதியில் இவ்வாலயம் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அக் காலத்தில் சிற்சில பிராந்தியங்களி;ல் வன்னிமையின் சிற்றாட்சி நிலவியது.
மட்டக்களப்பில் மண்முனைப்பற்றுவன்னிமைகளான அம்பிளாந்துறை கந்தப்போடி சத்துருக்கப்போடி கதிரமலைப்போடி அறுமக்குட்டிபோடி ஆகியோரின் கண்காணிப்பில் சில ஆலயங்கள் பரிபாலிக்கப்பட்டுவந்தன. அதேபோல் மட்டக்களப்பின் தெற்கே நற்பிட்டிமுனையில் வாழ்ந்த கரவாகுப்பற்று வன்னிமைகளான சின்னத்தம்பி செல்லையா வன்னிமையின்கண்காணிப்பில் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயம் பாண்டிருப்பு திரௌபதை அம்மன்ஆலயம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் நற்பிட்டிமுனை மாணிக்கப்பிள்ளையார் சேனைக்குடியிருப்பு பத்ரகாளியம்பாள் ஆலயம் என 5ஆலயங்கள் பரிபாலிக்கப்பட்டுவந்தன.
அதேபோன்று அட்டப்பள்ளத்தை மையமாகக்கொண்டு நிந்தவூர் பற்று வன்னிமையான சிங்காரபுரி வன்னிமை ஆட்சி நிலவியது. சிங்காரபுரித்தோட்டத்தில் இருந்து அந்தக்காலத்தில் அட்டப்பள்ளம் தொடக்கம் காரைதீவு வரையான பிரதேசத்தை பூபாலகோத்திரத்து வன்னிமை பரிபாலனம் செய்துவந்தான்.அதனை சிங்காரத்தோப்பு எனக்கூறுவர்.அங்கிருந்து வன்னிமை யானை மீதேறி அப்பிரதேசமெங்கும் வலம்வருவது வழமை.ஒரு தடவை காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு யானையில் வந்து வணங்கியபோது இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் கண்பார்வையை இழந்த தனது மனைவிக்கு அம்மனின் அருளால் கண்பார்வை கிடைத்தமைக்காக காணிவழங்கிய நிகழ்வும் நடந்தேறியிருக்கிறது.அதனை கண்கண்டவெளி என்று பெயரிட்டனர்.அது கண்கண்வெளி என மருவிற்று. இவையெல்லாம் கற்பனைக்கதையல்ல. அனைத்திற்கும் ஆதாரபூர்வமான பதிவேடுகளுள்ளன.மேலும் பண்டிதர் வீ.சீ.கந்தையா உள்ளிட்ட பலர் எழுதிய பல நூல்களில் காணலாம்.
16ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் காளி ஓடையின் அருகே காளிகோயில் இருந்ததாக வரலாற்று ஆய்வுகளும் சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன.
சிங்காரபுரி வன்னிமை இந்த மடத்தடி எனும் இடத்தில் ஆலயமொன்றை அமைத்து அருகில் தீர்த்தக்கேணியையும் அமைத்து வழிபட்டுவந்தான் .அதேசூழலில் அவனது மாளிகை அமைந்திருந்த காரணத்தினால் அருகே பாதுகாப்பிற்காக செங்கண்படை ஒன்றையும் வைத்திருந்தான். அவனது மாடுகள் பட்டிபட்டியாக அந்தச்சூழலில் வளர்க்கப்பட்டன.
இவைதான் இன்று இவ்வாறு மருவி அழைக்கப்படுகின்றன.
பிற்காலத்தில் 'காளி ஓடை' என்பது 'களியோடை' என்றும் 'செங்கண்படை' என்பது 'செங்கப்படை' என்றும் சிங்காரபுரித்தோட்டம் என்பது 'தோப்புக்கண்டம'; என்றும் வன்னிமையின் மாடுகள் வளர்க்கப்பட்ட இடம் மாட்டுப்பளை என்றும் தற்போது அழைக்கப்படுகிறது.
இவ்வாலயமானது போத்துக்கீசர் ஆட்சிக்காலத்தின் பிற்கூற்றில் புளியந்தீவிலிருந்துவந்த படைகளினால் சேதமாக்கப்பட்டு அழிக்கப்பட்டது.அக்காலகட்டத்தில் திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமி ஆலயம் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்கள் போத்துகீசரால்; சேதமாக்கப்பட்டமை தெரிந்ததே. அது வரலாறு. அவ்வாறு அழிக்கப்பட்ட் ஆலயத்தின் எச்சசொச்சங்களை சிதைவுகளை இன்றும் புதியஆலயத்தின் மேற்கே காணலாம்.சிதைவுக்குள்ளான நீர்க்கேணியையும் காணலாம்.
ஆலயகலாசாரம்
இங்கு ஆலயத்தைச்சூழ பாம்புப்புற்றுகள் நிறையவுள்ளன. அதாவது இங்கு அம்மன் வழிபாட்டிற்கு மேலதிகமாக நாகவழிபாடும் நிலவுகிறது.
வெள்ளி பௌர்ணமி மற்றும் விசேட தினங்களில் இங்கு கதவு திறந்து அம்மனுக்கு பொங்கல் செய்வது வழக்கம்.அந்நாட்களில் இங்கு 1000க்கு மேற்பட்ட பகதர்கள்ஒன்றுகூவது அம்மனின்அற்புதமே. பூரணையன்று அங்கு கண்டெடுக்கப்பட்டு பிரதிஸ்டை செய்த சிவலி;ங்கத்திற்கு பக்தர்கள் பூச்சொரிந்து வழிபடுவர்.
பரிபாலன வரலாறு;
ஆரம்பத்தில் இது தனியார் ஆலயமாகவிருந்தது. அதாவது ஒரு குடும்பத்திற்குரிய சொந்த ஆலயமாக இருந்தது. 1985களில் இவ்வாலயம் பதியப்பட்டிருந்தது.தம்பிமுத்து என்பவரின் சொந்தப்பராமரிப்பிலே இயங்கிவந்தது.பிற்பட்ட 1990களில் தம்பிமுத்து என்பாரின் ஏகபுதல்வரான வினாயகமூர்த்தி அவர்கள் தொடர்ந்து தன்னந்தனியனாக அவ்வாலயத்தை பராமரித்துவந்தார். காரைதீவைச்சேர்ந்த அவர் திராய்க்கேணி அட்டப்பள்ளம் காரைதீவு போன்ற இடங்களில் பரவலாக நடமாடித்திரிபவர்.
இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தின் தாய்த்தமிழ்க்கிராமமாக வித்தகன் பிறந்த காரைதீவு மண்ணல் இருந்து வினாயகமூர்த்தி அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டப்பட்டது.பல இளைஞர்களும் சிரமதானம் செய்து கைகொடு;த்ததுடன் புதிதாக நிருவாக சபை அமைப்பதற்கும் பொதுக்கோயிலாக மாற்றுவதற்கும் வழிசமைக்கப்பட்டது.1996களிலிருந்து இவ்வாலயம் காரைதீவை மையமாகக்கொண்டு பலகிராமங்களின் பலபிரமுகர்களைக்கொண்ட நிருவாகசபையினரால் பொதுக்கோயிலாக நிருவகிக்கப்பட்டுவந்தது.
காரைதீவைச்சேர்ந்த திரு வினாயகமூர்த்தி என்பார் பலவருடகாலம் பலரது உதவியையும் பெற்று பரிபாலனம் செய்துவந்தார்.; 1999இல் வினாயகமூர்த்தி அவர்கள் இறைபதமடைந்தார்கள்.
அதன்பிற்பாடு தம்பிலுவிலைச்சே;ர்ந்த அதிபர் வ.ஜெயந்தன் அவர்களைத்தலைவராகக்கொண்டு பரிபாலனசபையொன்று அமைக்கப்பட்டு இயங்கிவந்தது. இவரது காலத்தில் அதாவது 2012களில் தற்போதுள்ள புதிய ஆலயம் கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. கிழக்கிலங்கையின் இந்துகுருமார்சங்கத்தலைவரான சிவஸ்ரீ நீதிநாதக்குருக்கள் (தற்போதைய ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்களின் மாமனார்) அவர்களைத்தொடர்புகொண்டு பூப்போட்டுப்பார்த்து புதிய ஆலயம் தற்போதைய இடத்தில் கட்டுவதற்கு கால்கோள் இடப்பட்டது.
அதன்படி 2013இல் புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நடும்விழா இடம்பெற்றது. சிவஸ்ரீ நீதிநாதக்குருக்கள் முதலாவது அடிக்கல்லை நட்டு ஆரம்பித்துவைத்தார். கருவறைக்குரிய அடித்தளம் இடப்பட்டது. அத்தோடு நிருமாணப்பணி பல்வேறு காலநேர வர்த்தமான சூழலால் ஸ்தம்பிதமானது.இடைக்காலத்தில் பாண்டிருப்பைச்சேர்ந்த திரு.வினோஜன் என்பார் தலைவராக இயங்கினார்.
அதன்பின்பு காரைதீவைச்சேர்ந்த திரு.கோ.கமலநாதன் தலைமையிலான பலஊர்களையும் சேர்ந்த நிருவாகசபையினர் தெரிவாகி ஆலய நிருமாணப்பணி முன்னெடுக்கப்பட்டது.அக்கரைப்பற்று திருக்கோவில் ஆலயடிவேம்பு காரைதீவு போன்ற கிராமங்களின் பரோபகாரிகளின் பெரும்பங்களிப்பினால் புதிய ஆலயம் ஒருவாறான அமைக்கப்பட்டது.இருப்பினும் அதற்கான கும்பாபிசேகம் கடந்த 6வருடகாலமாக தடைபட்டுவந்தது.
சுற்றுமதில் அமைக்கப்பட்டும் யானைகளின் தொல்லையினால் ஆலய சேமிப்பறை மதில் என்பன அடிக்கடி சேதமாக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் தலைவராகவிருந்த திரு கோ.கமலநாதன் 2021.10.21 இல் இறைபதமடைந்தார். அதன்பின்பு 2021.10.24 இல் ஆலயத்தில்கூடிய நிருவாகசபையினர் உபதலைவராகவிருந்த காரைதீவைச்சேர்ந்த சமுகசேவையாளரான தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்களை அக்கூட்டத்தில் சமுகமளித்திருந்த ஆலய ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா முன்னிலையில் தலைவராகத்தெரிவுசெய்தது.
கும்பாபிஷேகம் காணவுள்ள இவ்வாலயத்திற்கு பரோபகாரிகள்அம்மன் பக்தர்கள் மேலும் உதவவேண்டும் என புதிய நிருவாகசபையினர் வேண்டுகோள்விடுத்ததன் பலனாக பல ஊர்களிலிருந்தும் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் பலவிதமான உதவிகள் கிடைக்கப்பெற்றன. அதனைக்கொண்டு ஆலயத்தில் இதுவரைகாறும் இல்லாத குழாய் குடிநீர் விநியோகம் அன்னதான மண்டபம் கழிவறைத்தொகுதி எனப் பல வேலைத்திட்டங்களை சொர்ணம் விஸ்வநாதன் ஆர்க்கிரெக்ட் மகேந்திரன் டாக்டர் அ.வரதராசா அவுஸ்திரேலியா பாலன் சரவணாஸ் லதன் உள்ளிட்ட பல பரோபகாரிகளின் உதவியால் முன்னெடுத்து வருகிறது புதிய நிருவாகசபை. ஆலய முகப்பையும் அழகான கோபுரஅமைப்புடன் புனரமைத்துள்ளது.
அன்று ஆலயத்தில் ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் முன்னிலையில் நடைபெற்ற நிருவாகசபைக்கூட்டத்தில் கும்பாhபிசேகம் தொடர்பான நாள் தீர்மானிக்கப்பட்டது. அவ்வமயம் ஆலயமணி 3தடவைகள் தானாக அடித்து அம்பாளின் அற்புதஆணையையும் பெற்றுக்கொண்டது.
அதன்பலனாக ஆலயத்தின் ஆவர்த்தன பஞ்சகுண்ட மகா கும்பாபிசேகம் எதிர்வரும் புதன்கிழமை 06.04.2022இல் நடைபெற திருவருள்கூடியுள்ளது.
இவ்வாலயம் மேலும் சிறப்புற்று விளங்க அம்மனருள் என்றென்றும் கிடைக்கப்பிரார்த்திப்போமாக.
விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
ஆலய அறங்காவலர்சபை ஆலோசகர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :