மீண்டும் ஆரம்பிக்கப்போகும் மருதூர் போராட்டம் : "அதா"வை நம்பிக்கெட்டது சாய்ந்தமருது !



நூருல் ஹுதா உமர்-

பல மொழிகள், பல்லினம், பல சமூகம், பல நாகரிகங்கள் என வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இலங்கை தீவில் முஸ்லிங்களை 100 சதவீதம் கொண்டே ஒரே ஊர் என்றால் அது சாய்ந்தமருது. இந்த சாய்ந்தமருது நகரமானது இயற்கையின் அழகினால் ஆசிர்வதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் இலங்கையர்களுக்கு அதிகமாக சோறு போடும் மாவட்டங்களில் முன்னிலையில் உள்ள அம்பாறையில் அமைந்துள்ள புராதன நகரங்களில் ஒன்றாகும். வயலும், வர்த்தகமும், கடலும், கல்வியும் என சகல வளங்களும் கொண்ட இந்த நகர் தனக்கான நகர சபையை கோரி இரட்டை தசாப்தம் கடந்தும் தவமிருக்கிறது என்பது நாடறிந்த உண்மை.

வந்தவர் போனவரெல்லாம் தங்களின் வீழ்ந்த செல்வாக்கை மீள விளையச்செய்ய சாய்ந்தமருதூர் மண்ணில் உழுத வார்த்தைகளில் முதன்மையானது நகர சபையை பெற்றுத்தருவோம் என்பதே. வாக்குகள் எண்ணி அறுவடை முடிந்து சாக்குகளின் வாய் கட்டுப்பட்டால் காணாமல் போன அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலுக்கு அதே கோஷத்துடன் வந்து வென்று சென்ற வரலாறுகளே நடந்தேறியுள்ளது. இதில் இந்த அரசியல்வாதியும் விதிவிலக்கல்ல.

சாய்ந்தமருது பிரதேசம் இற்றைக்கு 124 வருடங்களுக்கு முன்பிருந்தே உள்ளூராட்சி சபையை கொண்டிருந்த விடயம் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு வரலாற்றுத் தடயமாக காணப்படுகிறது. சாய்ந்தமருது பிரதேசம் ஒரு வரலாற்று பூர்வீகம் கொண்டது என்பது பல ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை. இலங்கை பிரித்தானியரின் ஆட்சியில் இருந்த காலத்தில் மகாராணியின் பிரதிநிதியான ஆளுநரின் பிரகடனத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தின் சாய்ந்தமருது உட்பட 5 பிரதேசங்கள் 1897.02.19ஆம் திகதியிலிருந்து செயற்படத்தக்கதாக சானிடரி சபைகளாக குடியேற்ற செயலாளர் அவர்களினால் அரச வர்த்தமானியில் பிரகடனம் செய்யப்பட்டது. 1897ஆம் ஆண்டு பெ்ரவரி 19ஆம் திகதி வெளிவந்த சிலோன் அரசாங்க வர்த்தமானி, அன்றைய குடியேற்ற செயலாளர் திரு ஈ நோயல் வர்கேர் அவர்கள் பிரித்தானிய ஆளுநரின் ஆணைப்படி பிரகடனம் ஒன்றை வெளியிட்டார்.

அப்பிரகடனத்தின் படி 1892ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க "சிறிய நகரங்கள் சானிட்டரி கட்டளைச் சட்டத்தின்" 2ஆம் பிரிவிற்கு இணங்க சனிட்டரி சபைகள் என்ற அந்தஸ்துடன் கிழக்கு மாகாணத்தின் கிராமங்களான, காத்தான்குடி, ஏறாவூர், சாய்ந்தமருது, கல்முனை, சம்மாந்துறை போன்றன அன்றைய நிறைவேற்று சபையின் ஆலோசனைக்கு அமைய ஆளுநர் அவர்களின் செயலாளர் அவர்களினால் இலங்கை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை அரசியல் காரணங்களுக்காக, சில அரசியல்வாதிகள் பின்புலத்தில் செயற்பட்டு இல்லாமல் ஆக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க சட்டத்தைப் பயன்படுத்தி சாய்ந்தமருது பிரதேசத்தின் அரசியல் அதிகாரம் இல்லாமல் செய்யப்பட்டது மட்டுமல்லாது, இங்கு அரசியல் தலைமைக்குப் பதிலாக அரசியல் முகவர்கள் செயற்பட ஆரம்பிக்கப்பட்ட செயற்பாடு இன்றுவரை தொடர்கிறது. இவ்வாறு எமது தொன்மை மிக்க சபை இல்லாமல் ஆக்கப்பட்டது வரலாற்றுத் தவறு மட்டுமல்ல, இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை மறைக்கின்ற செயற்பாடுமாகும் .

இப்படியான சாய்ந்தமருதில் நகரசபைக்கான போராட்டம் பல வருடங்களாக உள்ளார்ந்தமாக புகைந்து கொண்டிருந்தது பல்வேறு காரணங்களை சகித்துக்கொண்டும், சில சிலுசிலுப்புக்களுடனும் இருந்துவந்தாலும் திடீரென உக்கிரமடைந்தது. சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேசசபையை வென்றெடுக்கு முகமாக பிரதேச மக்களினால் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு மக்கள் போராட்டம் உக்கிரமடைந்து இயல்பு நிலை முற்றாக பாதிப்படைந்தது. கறுப்புப்பட்டியணிந்த பெருந்திரளான இளைஞர்கள் வயோதிபர்கள் வீதியில் அமர்ந்து தமது சத்தியாக்கிரகத்தை நடத்தினர்.

புரட்சி, எழுச்சியென உக்கிரமடைந்து எழுந்த மக்கள் சக்தி கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கல்முனை மாநகர சபை, காரைதீவு பிரதேச சபை போன்ற பிரதேசங்களில் தோடம்பழ சின்னத்தில் சுயாதீன அணியாக களமிறங்கி மக்கள் எழுச்சியுடன் மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்தை தவிர ஏனைய வட்டாரங்களான சாய்ந்தமருதில் 06 வட்டாரங்களையும், மாளிகைக்காடு மேற்கு வட்டாரத்திலும் மக்களின் ஏகோபித்த அரசியல் அதிகாரத்தை ஜனநாயக ரீதியாகப் பெற்றுக்கொண்டனர். இதன் மூலம் 10 உறுப்பினர்கள் தெரிவானார்கள். அதனை பயன்படுத்தி தனியான நகரசபைக்கான போராட்டத்தில் பல அதிகாரங்களையும், பல்வேறு இழப்புக்களையும் சந்தித்த நிலையில், தனியானநகர சபை என்ற இலக்கிற்காக மாத்திரம் முழுமையாக அர்ப்பணித்து சாய்ந்தமருது தனியான நகரசபைக்கான போராட்டத்தில் மக்களின் ஆணையை உறுதிப்படுத்துவதோடு, தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு என சில விடயங்களை முன்வைத்தனர். ஆனால் அவைகளெல்லாம் அச்சிட்ட காகிதங்களில் இருந்தே தவிர செயற்பாட்டில் இருக்க இல்லை. இதனால் போராட்டத்தின் திசை மாறி தனிநபர் இலாப நோக்கை நோக்கிய பாதையாக சிலரின் தெரிவுகள் இருந்தமையால் ஒற்றுமை சீரழிந்து போராட்டத்தின் பலம் குன்றியது. பின்னாளில் தே.காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவின் தொடர்புகள் மூலம் நோ போலுக்கு சிக்ஸ் அடித்தது போன்று கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பிலான கூட்டத்தில் சாய்ந்தமருதுக்கான நகரசபைக்கான பழம் நழுவி பாலில் விழுந்தது. தே.காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா அதற்கு பதிவை தானாக முன்வந்து வைத்தவுடன் அவரூடாக கடந்த 2020 காதலர் தினத்தன்று சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியானதொரு நகர சபையை நிறுவுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட அரசாங்கம், ஆறு நாள்களுக்குப் பின்னர், அந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய முடிவு செய்தது. இதனை வர்த்தமானி வெளிவந்த அந்த தினமே தே.காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா நன்றாக அறிந்திருக்க வேண்டும். ஏனெனில் சாய்ந்தமருது மக்கள் அன்றைய தினம் அவருக்கு வழங்க இருந்த கௌரவ வரவேற்பை அவர் முற்றாக நிகாரித்து கிழக்கு வாசலில் அமைதியாக இருந்துகொண்டார். அன்றே மருதூரின் பலரும் சந்தேகங் கொண்டதை ஆறுநாட்களின் பின்னர் அமைச்சர் பந்துல உறுதிப்படுத்தினார். புதிதாக உள்ளூராட்சி சபைகளை வழங்க வேண்டிய சகல இடங்களுக்கும், ஒரே நேரத்தில் அவற்றை வழங்குவதற்காகவே இந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டதாக, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அன்றைய அமைச்சரவைப் பேச்சாளரும் உயர்க் கல்வி அமைச்சருமான பந்துல குணவர்தன கூறினார்.

சாய்ந்தமருதுக்கான சபை எதிர்காலத்தில் வழங்கப்படும் என்றால், ஏற்கெனவே வழங்கப்பட்டதை ஏன் இரத்துச் செய்யவேண்டும்? வழங்கப்பட்டதை அவ்வாறே விட்டுவிட்டு, ஏனைய சபைகளைப் பின்னர் வழங்கலாமே! “இந்தச் சபையை வழங்கியமைக்குத் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகளாலேயே, இவ்வாறு இந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டதா?” என ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர், இல்லை என்றார். அவ்வாறாயின், வழங்கப்பட்டதை விட்டு விட்டு ஏனையவற்றைப் பின்னர் வழங்கலாம். ஆனால், அரசாங்கம் அவ்வாறு செய்யவில்லை. ஏன் எனும் கேள்விக்கு பதில் இப்போது எல்லோருக்கும் முன்னால் தெளிவாக இருக்கிறது.

இலங்கையில் கிராம சபைகள் போன்று உள்ளூராட்சி மன்றங்கள் உருவானதன் பின்னரோ அல்லது 1987ஆம் ஆண்டில் தற்போதைய பிரதேச சபைகள் போன்று உள்ளூராட்சி மன்றங்கள் உருவானதன் பின்னரோ புதிதாக உருவாக்கப்பட்ட முதலாவது உள்ளூராட்சி சபையே பிரகடனப்படுத்தப்பட்ட சாய்ந்தமருது நகரசபை என்பதைப் போலதான், சில பேரினவாதிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். ஆனால், தனியாக உருவாக்கப்பட்ட முதலாவது உள்ளூராட்சிசபை, சாய்ந்தமருது நகர சபையல்ல. அதற்கு முன்னரும் சில இடங்களில் புதிதாகத் தனித்தனியான உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சில இடங்களில், ஏற்கெனவே இருந்த உள்ளூராட்சி சபைகள் தரமுயர்த்தப்பட்டுள்ளன. 1987ஆம் ஆண்டில் பிரதேச சபைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அக்காலத்தில் இருந்த நான்கு கிராம சபைகள் ஒன்றிணைக்கப்பட்டே கல்முனை பிரதேச சபை உருவாக்கப்பட்டது. அது பின்னர் அது நகர சபையாகத் தரமுயர்த்தப்பட்டு, 2001ஆம் ஆண்டில் மாநகர சபையாகத் தரமுயர்த்தப்பட்டது.

2011ஆம் ஆண்டில், அக்கரைப்பற்று மாநகர சபையின் உருவாக்கமும் மற்றோர் உதாரணமாகும். அப்போது, அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்வே உள்ளூராட்சி அமைச்சராகக் கடமையாற்றினார். அவர் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி, அங்கிருந்த பிரதேச சபையைப் பிரித்து, மாநகர சபையொன்றை உருவாக்கினார். இதற்கு அக்காலத்தில் “கபே” அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்தது. பிரதேச சபையொன்று முதலில் நகர சபையாகத் தரமுயர்த்தப்படாமல், நேரடியாகவே மாநகர சபையாகத் தரமுயர்த்தப்படுவது முறையானதல்ல என்பதே அவர்களது வாதமாகியது. அத்தோடு, அக்கரைப்பற்று பிரதேச சபையிலிருந்து அக்கரைப்பற்று மாநகர சபை பிரித்தெடுக்கப்பட்ட போது, மீதமாக இருக்கும் அக்கரைப்பற்று பிரதேச சபையின் வாக்காளர் எண்ணிக்கை, சுமார் 4,000 எனவும் கபே கூறியது. ஆனால், அந்த எதிர்ப்புகளை மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. அதற்கு, மஹிந்த தரப்பு ஆதரவு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிக்கவும் இல்லை. அதே அரசாங்கத்தில் இருந்தவர்கள்தான், இப்போது சாய்ந்தமருது நகரசபைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அப்போது அமைச்சராக இருந்த அதாஉல்லா ஏன் சாய்ந்தமருத்துக்கான சபையை பிரகடனம் செய்யவில்லை எனும் கேள்விக்கு கோமாளித்தனமான பதில்களே அத்தரப்பிடம் இருக்கிறது.

தனது மக்களின் தாகத்தை தணிக்க அடம்பிடித்து அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்த.மலையகத் தலைவர் மனோவின் போராட்டம் வெற்றியளித்தது. 2017 முடிவடைவதற்குள், புதிதாக 6 பிரதேச சபைகளுடன் நுவரெலியாவும் அம்பகமுவவும் சேர்த்து எட்டு பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டன. சாய்ந்தமருத்துக்கு போராட்டங்கள் மட்டுமே மிஞ்சின. இவைகளெல்லாம் இப்படி இருக்க மருதூரின் கனவை வைத்து அரசியல் செய்தவர்கள் பலரும் இன்று அந்த மக்களினால் பாவிகளாக பார்க்கப்படுகிறார்கள்.

மு.கா தலைவர் ஹக்கீம் எழுதிக்கொடுக்க அப்போதைய பிரதமர் ரணில் வாக்குறுதி கொடுத்தார், இத்துறைக்கு பொறுப்பான அப்போதைய அமைச்சர் பைசர் முஸ்தபா நேரடியாக வந்து வாக்குறுதி கொடுத்தார். பஸில், மஹிந்த சாய்ந்தமருதில் வைத்தே உறுதியளித்த சம்பவங்கள், ஹக்கீம், றிசாத், அதாஉல்லா என எல்லோரும் இந்த சபையை வைத்து அரசியல் செய்தார்கள், ஹரீஸ் சபை கொடுக்காமல் தடுக்கிறார், கல்முனை மக்கள் சாய்ந்தமருத்துக்கு சபை கொடுப்பதை தடுக்கிறார்கள் என பல கதைகள் இருக்கிறது. ஆனால் இவற்றின் உண்மைத்தன்மை, பின்னணி தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டியது காலத்தின் அவசியமாக உள்ளது. சாய்ந்தமருது சபை கொடுப்பதை ஏன் ஹரீஸ் தடுக்கவேண்டும்? இதனால் ஹரீஸுக்கு இருக்கும் நன்மை என்ன? ஹரீஸ் இப்போது வாழும் ஊர் சாய்ந்தமருது தானே? ஹரீஸுக்கு எதிராக பல ஒலிபெருக்கிகளை கட்டி கோஷமிட்டும் 4000 அளவில் சாய்ந்தமருது மக்கள் மு.காவுக்கு அதிலும் குறிப்பாக ஹரீஸுக்கு வாக்களிக்க காரணம் என்ன? ஹரீஸ் தடுக்கிறார் என்றால் அவரை விட பலம் பொருந்திய ஹக்கீம், றிசாத் பெற்றுக் கொடுக்காமல் விட்டது ஏன்? எனும் பல கேள்விகளுக்கு ஒழுங்கான விடை தெரியாது பலரும் தமது அரசியல் வளர்ச்சிக்கான கதைகளை பரப்பிக்கொண்டிருந்த சூழ்நிலையில் சாய்ந்தமருது மக்கள் பணிமனை கடந்த ஜனாதிபதி தேர்தலில் பஸிலுடன் ஒப்பந்தமொன்றை செய்து மொட்டுக்கு முட்டுக் கொடுத்தது. ஆனால் சாய்ந்தமருது மக்களில் கணிசமானவர்கள் சஜித்துக்கு ஆதரவை தெரிவித்ததை தேர்தல் பெறுபேறுகள் தெளிவாக முன்வைத்தது. இதனால் தேர்தல் முடிந்த கையோடு ஆசியாவின் சிறந்த ராஜதந்திரிகளில் ஒருவராக நோக்கப்படும் பசில் சாய்ந்தமருது ஒப்பந்தம் தொடர்பில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இவைகளெல்லாம் இப்படியிருக்க தேசிய காங்கிரசின் பிரதேச முக்கியஸ்தர்கள் ஊடாக மறைமுக உறவை கொண்டிருந்த சாய்ந்தமருது பிரமுகர்கள் பலரின் முயற்சியினால் அந்த உறவு வெளிப்படையாக காட்டப்பட்டு கடந்த பொதுத்தேர்தலில் சாய்ந்தமருது மண், நகரசபையை முன்வைத்து தேசிய காங்கிரசுக்கு அடமானம் வைக்கப்பட்டது. இதில் சாய்ந்தமருதை சேர்ந்த முக்கிய வர்த்தகபிரமுகர் ஒருவரை வேட்பாளராக களமிறக்க சாய்ந்தமருது முக்கியஸ்தர் ஒருவரின் பரிந்துரையுடன் தயாராக இருந்த தேசிய காங்கிரஸ் தலைவரை மாளிகைக்காடு- சாய்ந்தமருதை சேர்ந்த பிரமுகர்களின் ஆலோசனைப்படி, சாய்ந்தமருது பள்ளிவாசலின் தீர்மானத்தை முன்வைத்து சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான ஏ.எல்.எம். சலீம் வேட்பாளராக குதிரை சின்னம் இலக்கம் மூன்றில் நிறுத்தப்பட்டார். வென்றால் சாய்ந்தமருது நகரசபையும், போனஸாக சலீமுக்கு பிரதியமைச்சும் என பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டு தேர்தல் நடந்து முடிந்தது. கருணா அம்மானின் வருகை, ஏமாந்த சாய்ந்தமருது மக்களின் வாக்குகள் ஊடாக தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா எம்.பியானார்.

10401 வாக்குகள் தேசிய காங்கிரஸுக்காக கல்முனை தொகுதியில் அளிக்கப்பட்டது. இதில் மென்மையான போக்குக்கொண்ட சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ், கல்முனை மண்ணுக்கான போராளிகளில் ஒருவராக பிரபலமான பிரபல ஆசிரியர் றிசாத் செரீப், மக்களின் நம்மதிப்பை பெற்ற சலீம் டீ.எஸ். என மக்களால் அறியப்படும் சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம். சலீம் என மூவர் களமிறங்கினர். இதில் றிசாத் செரீப், சட்டத்தரணி றிபாஸ் ஆகியோரின் வாக்குகளை கழித்தால் சாய்ந்தமருது தேசிய காங்கிரஸுக்கு அளித்த வாக்குகள் எத்தனை என்பதை வாக்கெண்ணும் நிலையத்தில் இறுதி முடிவறிவிக்கும்வரை இருந்த கட்டுரையாளாரான என்னால் கூற முடியும். இப்படி கல்முனை தொகுதியில் அதிகமான வாக்குகளை வழங்கிய சாய்ந்தமருது மண்ணுக்கு அதாஉல்லா எம்.பி கொடுத்த வஹ்தாவை (வாக்குறுதியை) நிறைவேற்றுவாரா என்பதே இன்றைய மில்லியன் டொலர் கேள்வி ?

கல்முனை மாநகர சபை ஆட்சியாளர்களின் ஓரக்கண் பார்வை அரசியலில் உருவெடுத்த இந்த போராட்டம் இன்று அதாஉல்லா எம்.பியின் தலையின் மீது திணிக்கப்பட்டுள்ளது. பஷில், கோத்தா, மஹிந்தா என மொட்டின் சகலரினதும் எதிர்ப்பை சம்பாதித்த ஆளும்தரப்பிலுள்ள எதிர்தரப்பாக இருக்கும் 11 கட்சிகளின் கூட்டின் முக்கியஸ்தராக, முன்னிலை செயற்பாட்டாளராக இருக்கும் அதாஉல்லா இந்த அரசில் எதையும் சாதிக்க முடியாது என்பது வெளிப்படை உண்மை. வேட்பாளர் நியமனம், அமைச்சரவை பதவி ஏமாற்றம், அரசுக்கு எதிரான போக்குகள் என செல்லாக்காசாக மாறியிருக்கும் அதாஉல்லாவை நம்பி பிரயோசனம் இல்லை என்பதை சாய்ந்தமருது நன்றாக கணித்து விட்டது. நகரசபை போராட்டத்தின் முன்னிலை போராளியாக இருந்த பள்ளித்தலைவர் "உமர்முக்தர்" வை.எம். ஹனிபாவின் இறுதி சடங்கில் (ஜனாஸாவில்) கூட அதாஉல்லா கலந்துகொள்ளவில்லை. அவர் கூறிய காரணங்கள் உப்புசப்பு இல்லாதது. அவரின் கூடப்பிறந்த யாராவது மரணித்திருந்தால் வந்திருக்க மாட்டாரா? பழையதை மறந்து செயற்படுகிறார். அவர் இன்று எம்.பி கதிரையில் இருக்க காரணமானவரின் ஜனாஸாவில் கலந்து கொள்ள கூட மனமில்லாத அதாஉல்லா எப்படி செய்நன்றி செய்வார் எனும் வாதம் பரவலாக சாய்ந்தமருதில் இப்போது பேசப்பட்டு வருகிறது.

அதாஉல்லாவை நம்பி, மொட்டில் நேரடியாக களமிறங்கிய ரிஸ்லியை நிராகரித்த சாய்ந்தமருது மண் ரிஸ்லி செய்த அபிவிருத்தியின், சேவைகளின் ஒரு பகுதியை கூட அதாஉல்லாவினால் பெறவில்லை என்பதே உண்மை. சாய்ந்தமருது மக்கள் பாரியளவில் வாக்களிக்க தவறிய ஹரீஸ், முஷாரப், பைசால், வீரசிங்க, திலக், விமலவீர என்று எல்லோரும் மருதூருக்கு சேவை செய்துள்ளனர். அவர்கள் செய்த சேவையில் 5/6 மடங்கு சேவையை அதாஉல்லா சாய்ந்தமருதுக்கு செய்திருக்க வேண்டும். அதுவும் செய்யப்படவில்லை. வண்ட் வீதியும் நிறுத்தப்பட்டுள்ளது. அதாஉல்லா ஆரம்பித்த உள்ளக வீதிகளும் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. நாங்கள் நம்பி ஏமாந்துவிட்டோம் என கடந்த பொதுத்தேர்தல் மேடைகள் சகலதிலும் தேசிய காங்கிரஸுக்காக பிரச்சாரம் செய்த சாய்ந்தமருது முக்கியஸ்தர்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.

மறுபுறத்தில் சிரேஷ்ட மற்றும் விசேட தரத்தில் உள்ள இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான ஏ.எல்.எம். சலீம் அவர்கள் இப்போது சேவையில் இருந்திருந்தால் மாகாண பிரதம செயலாளராக, அரசாங்க அதிபராக, அமைச்சின் செயலாளராக வந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அவற்றையெல்லாம் உதறிவிட்டு பலரும் அதாஉல்லாவை நம்ப வேண்டாம் அவர் ஏமாற்றுக்காரன் என்பதையெல்லாம் கவனத்தில் கொள்ளாது ஊரின் நலனுக்காக அதாவுல்லாவுடன் சென்றார். ஆனால் இன்று அரசனுமில்லை, புருஷனுமில்லை எனும் நிலைக்கு மக்கள் அபிமானம் பெற்ற சலீம் டீ.எஸ். மாறியிருப்பது கவலையான விடயம். இப்படி நகர சபை ஏமாற்றம் மட்டுமல்ல, அதிகார ஏமாற்றங்களையும் சாய்ந்தமருது சந்தித்துள்ளது என்பது வெளிப்படையான உண்மை. இருந்தாலும் உயர்மட்ட அதிகாரி ஒருவரின் பரிந்துரையுடன் ஆறுதல் பரிசாக பொதுசேவை ஆணைக்குழு உறுப்பினர் பதவி அவருக்கு கிட்டியது. அது வயிறூதியவனுக்கு காற்றுபோனது போன்றே அமைந்துள்ளதை நாம் காணலாம். எல்லாவற்றையும் அவதானித்த அவரும், அவர் சார்ந்த நகர சபை போராட்ட ஊர் போராளிகளும் இப்போது மாற்று முடிவுக்கு தயாராகின்றனர். சாய்ந்தமருதில் 100 வாக்குகள் கூட இல்லாத பலரும் பிரமுகர் அந்தஸ்த்தை பெற முக்கியஸ்தர்கள் பலரும் தே.கா விலிருந்து கழண்டு கொண்டு இருக்கிறார்கள். மருதூரில் பலத்த சரிவை தே.கா சந்தித்துள்ளது. இதனால் மாவட்டத்திலும் பலத்த சரிவை அவர்கள் கண்டுவருகிறார்கள்.

இந்த ஆட்சியில் சாய்ந்தமருதுக்கான நகரசபை மலர வேண்டுமாக இருந்தால் ஆட்சியாளர்களின் செல்லப் பிள்ளைகளின் ஆசிர்வாதமும், தலையசைத்தலும் தேவையாக உள்ளது. சாய்ந்தமருது மண்ணின் தாகத்தை தணிக்க பஷில், மஹிந்த, கோத்தா என பலரும் அறிந்த இந்த பிரச்சனைக்கு தீர்வை வழங்க யாரால் முடியும் என்பதே இன்று சாய்ந்தமருது தேடவேண்டிய விடயமாக அமைந்துள்ளது. யார் அந்த செல்லப்பிள்ளை ? மக்களுக்கு தெரியும். காலம் கனிந்தால் பல உண்மை சேதிகள் வெளிவரும். இப்போது தேர்தல் நெருங்குகிறது. மீண்டும் வேதாளம் எற தயாராகிறது சாய்ந்தமருது போராட்டம். முற்றுப்புள்ளியில்லா பிரச்சினையாக இருக்கும் இந்த பிரச்சினைக்கு தீர்வை வழங்க முன்வரப்போவது யார்?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :