மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த நாட்டில் நடைபெறும் சம்பவங்களை பார்க்கும்போது வேதனையான விடயமாகயிருக்கின்றது. நாடுமுழுவதும் வெடித்துள்ள போராட்டம் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நாடாளுமன்ற அமர்வு ஆரம்பித்த கடந்த ஒன்றரை வருடங்களாக நாங்கள் இதனை தெரிவித்துவருகின்றோம். காயம் ஒன்று இருக்கும்போது அந்த காயத்திற்கு மருந்திட்டு அதனை குணப்படுத்தாமல் அதனை மூடிமூடி வைத்து இன்று அந்த காயம் காரணமாக காலை வெட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையிலேயே இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று எரிமலையினை சூழ பஞ்சுகள் இருப்பதுபோன்றே மக்கள் உள்ளனர். இன்று எவர் போராட்டத்திற்கு அழைத்தாலும் தயார் நிலையிலேயே மக்கள் உள்ளனர். மக்கள் எதிர்நோக்கும் கஸ்டம் காரணமாகவே இந்த நிலையேற்பட்டுள்ளது. இந்த நாட்டின் நிலைமை மிக மோசமாக சென்றுகொண்டிருக்கின்றது.
இன்று நடைபெறும்போராட்டங்கள் அரசியல் கட்சிகள் இணைந்து முன்னெடுக்கும் போராட்டம் அல்ல. மக்களாகவே முன்வந்து முன்னெடுக்கும்போராட்டம்.
இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக மக்கள் படும் கஸ்டங்கள் இன்று நெருப்பு மலையாக காணப்படுகின்றது. இதன் காரணமாக இந்த போராட்டங்களை அரசாங்கத்தினால் கட்டப்படுத்தமுடியாத நிலை வரும்.
நாங்கள் பொறுப்புள்ள அரசியல் கட்சியாக இந்த பிரச்சினையை இந்த நாட்டில் எவ்வாறு தீர்க்கமுடியும் என்றே பார்க்கவேண்டும். ஜனாதிபதிக்கு இன்று இரண்டு வருடங்களுக்கு மேலாகவும் நாடாளுமன்றத்திற்கு மூன்று வருடங்களுக்கு மேலாகவும் காலப்பகுதியுள்ள நிலையில் இந்த நிலைமை இவ்வாறு நீடிக்குமானால் மக்கள் வன்முறைகள் ஊடாக தமது கோவத்தினை வெளிப்படுத்தமுனையும்போது அதனை அடக்க அரசாங்கம் இராணுவத்தினதை பாவிக்கும் நிலையும் உருவாகலாம்.
இராணுவத்தின் குடும்பமும் இந்த நாட்டில் உள்ளது. அவர்களின் குடும்பத்திலும் இவ்வாறான பிரச்சினைகள் இருக்கும். இன்று அரசாங்கத்தின் மீது உள்ள அதிர்ப்தியைக்கொண்டு ஒரு சிலர் குழங்களை ஏற்படுத்தமுனைகின்றனர். கலவரத்தின்போது பாதுகாப்பு பிரிவினர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பஸ் எரிக்கப்படுகின்றது.
திகனையில் கடந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட இனக்கலவரத்தின் பின்னணியில் செயற்பட்டவர் போராட்டத்திற்கான அழைப்பினை விடுத்துள்ளார். இவற்றினை பார்க்கும்போது சந்தேகத்துடனேயே பார்க்கவேண்டிய நிலையுள்ளது.
துற்போதுள்ள பிரச்சினைகள் மக்களுக்கும் தெரியும் அரசியல்வாதிகளுக்கும் தெரியும். ஆனால் அரசாங்கத்திற்குத்தான் தெரியாத நிலையுள்ளது. அரசாங்கத்திற்கு மட்டும்தான் மக்கள் படும்கஸ்டம் தெரியாமல் உள்ளது.
ஜனாதிபதி நாட்டின் உண்மை நிலையினை மக்களுக்கு எடுத்துச்சொல்லி இதற்கு மாற்றுவழியாக அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்து ஒரு இணக்கப்பாட்டை எட்டுவதன் மூலமே நாட்டில் உள்ள பிரச்சினையை தீர்க்கமுடியும். விரைவில் ஒரு தேர்தல் நடாத்தக்கூடிய சூழ்நிலையில்லாத காரணத்தினால் இந்த நிலைமையினை தொடர இடமளிக்ககூடாது.
இன்றைய நாட்டில் சூழ்நிலையினால் 30வருடகால யுத்ததினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இதனாலும் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் இன்றும் வடகிழக்கில் உள்ள மக்கள் அடக்குமுறைகளுக்குள்ளாக்கப்படுகின்றனர். வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தின்போது பொலிஸ் அதிகாரியொருவர் தாய் ஒருவர் மீது நடாத்திய தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
அதற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு எனது ஆதரவு என்றும் இருக்கும். போராட்டம் ஒத்திவைக்கப்பட்டாலும் அந்த போராட்டம் நடைபெறும்போது நாங்கள் ஆதரவு வழங்குவோம்.
நூங்கள் ஜனாதிபதியை சந்தித்தவேளையில் போது கூட இந்த வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் பிரச்சினை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தினோம். வடகிழக்கில் பொருளாதார பிரச்சினைகளையும் தாண்டி பல்வேறுபட்ட பிரச்சினைகள் உள்ளது.
நான் வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து நான் தெரிவித்த கருத்தினை கிழக்கு மாகாண ஆளுனர் பொய்யென்று கூறியுள்ளார்.
ஆனால் அதனை நான் ஆதாரபூர்வமாக நிரூபிக்க தயாராகயிருக்கின்றேன். பொருளாதார ரீதியாகவும் இனரீதியாகவும் அடக்குமுறைகள் தமிழ் மக்கள் எதிர்கொண்டுவருகின்றனர். இன்று எம்மவர்களின் சிலர் அரசாங்கத்தின் கைக்கூலிகளாக உள்ளதே இதற்கு காரணமாகும்.
இந்த நாட்டில் உள்ள தாய்மார் எதிர்கொள்ளும் பிரச்சினைக்காக ஹிருணிக்கா பிரேமச்சந்திரன் அவர்கள் முன்னெடுத்த போராட்டத்தினை வரவேற்கின்றேன். அந்த போராட்ட நேரத்தில் அரசாங்கத்தின் கைக்கூலியொருவர் அந்த போராட்டத்தினை குழப்புவதற்கு முயற்சிகளை முன்னெடுத்திருந்தார்.
இன்று அரசாங்கத்துடன் இருக்கும் இராஜாங்க அமைச்சர்கள்,இந்த அரசாங்கம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கும்மோசமான செயற்பாடுகளைக்கண்டு தமது பதவிகளை தூக்கியெறிந்துவிட்டு வெளியேறிவிட்டனர்.
ஆனால் தமிழர்கள் ஒருசிலர் மட்டும் அபிவிருத்திக்குழு தலைவர் பதவி, இராஜாங்க அமைச்சர் பதவியை வைத்துக்கொண்டு தங்களது சுயநலத்துக்காக அரசாங்கத்தினை ஆதரிக்கின்றது வேதனைக்குரிய விடயமாகும்.
மக்களுக்காக அரசியலுக்குவந்த நீங்கள் ஆளும்கட்சிக்காக அரசியலுக்குவந்தவர்களாக இருக்ககூடாது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தின் பதவிகளை பிடித்துக்கொண்டுள்ளவர்களை மக்கள் எதிர்காலத்தில் இனங்கண்டு தெற்கில் எவ்வாறு அரசியல்வாதிகள் துரத்தியடிக்கப்படுகின்றார்களோ அவ்வாறு இங்கும் அவர்கள் வரும்போது துரத்தியடிக்கவேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment