கோரக்கர்கிராம பணிநயப்பு பாராட்டுவிழாவில் தவிசாளர் ஜெயசிறில் காட்டம்!
காரைதீவு நிருபர் சகா-எம்மவர்கள் மொட்டுக்கு முட்டுக் கொடுப்பதை விட வீட்டுக்கு முட்டுக்கொடுத்தால் வாழ்வு வளம்பெறும் என கோரக்கர்கிராம ஆலயசம்மேளனம் நடாத்திய பணிநயப்பு பாராட்டுவிழாவில் உரையாற்றிய காரைதீவுப்பிரதேசசபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
சம்மாந்துறை, கோரக்கர்கிராம அகோரமாரியம்மன் ஆலயம் மற்றும் கோரக்கர் பிள்ளையார் ஆலய பரிபாலனசபையினர் அக்கிராமத்தின் ஆலயம் கல்வி சமயம் சமுக கிராம மேம்பாட்டிற்கு கடந்தகாலங்களில் உதவிய 27 சமுகசேவையாளர்களை அழைத்து பணிநயப்பு பாராட்டுவிழாவொன்றை நேற்றுமுன்தினம்(10) ஞாயிற்றுக்கிழமை நடாத்தினார்கள்.
கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில், கிழக்கில் புகழ்பெற்ற சிவாச்சாரியார் சிவஸ்ரீ சண்முக மனேஸ்வரக்குருக்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் பொன்னாடை போர்க்கப்பட்டு, விசேட வாழ்ததுமடல் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
அங்கு தவிசாளர் ஜெயசிறில் மேலும் உரையாற்றுகையில்:
கடந்த 35வருடகால யுத்தகாலத்தில் மக்கள் அனுபவித்திராத துன்பதுயரங்களை இந்த ஆட்சியில் அனுபவித்துவருகிறார்கள். எங்கு பார்த்தாலும் கியுவரிசை. கொரோனாவால் உயிர் போகும் என்று பயந்த மக்கள் இன்று பசிபட்டினியால் உயிர் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். பணத்தைவைத்துக்கொண்டு பெற்றோலுக்கும் டீசலுக்கும் எரிவாயுவிற்கும் கால்கடுக்க கியுவில் நிற்கவேண்டிய துர்ப்பாக்கியநிலை.67லட்சம் பேர் வாக்களித்து சிம்மாசனம் ஏற்றியது இதற்குத்தானா? புத்தி இருந்தால் உடனடியாக அவர்கள் பதவிதுறந்து மக்களாட்சி நடக்க வழிவிடவேண்டும்.என்றார்.
ஆலய பரிபாலனசபை சார்பில் தலைவர் ம.பாலசுப்பிரமணியம் தலைமையில் உபதலைவர் வி.மோகன், செயலாளர் த.அழகுராஜன், பொருளாளர் கி.சசிகரன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
ஏற்புரைகளை சிவஸ்ரீசண்முக மகேஸ்வரக்குருக்கள், உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, தவிசாளர் கே.ஜெயசிறில் ,ஆலயதலைவர் இரா.குணசிங்கம் ஆகியோர் வழங்கினர். கோரக்கர் மாணவிகளின் கண்கவர் நடனங்கள் இடையிடையே நடைபெற்றன.
கோரக்கர்கிராம பட்டதாரி ஒன்றிய தலைவர் சோ.தினேஸ்குமார் நிகழ்வை அழகாக நெறிப்படுத்தி தொகுத்தளித்தார்.
0 comments :
Post a Comment