லெபனானில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி போன்று இலங்கையில். அந்த உயிர் நண்பனாலும், இனவாத கொள்கையினாலும் தனிமைப்பட்டுள்ளோம் ?



ழல் பேர்வழிகளை ஆட்சியாளர்களாகக் கொண்ட நாடுகள் உருப்பட்டதாக வரலாறுகள் இல்லை. நாட்டுக்கு சேர வேண்டிய மக்கள் பணத்தினை அதிகாரத்தில் இருந்துகொண்டு திருட்டுத்தனமாக தனதாக்கிக்கொள்கின்றபோது நாட்டின் பொருளாதாரம் திவாலாகின்றது.

அந்தவகையில் உலக வரலாற்றில் அண்மைய காலங்களில் லெபனான் நாட்டில் ஏற்பட்டது போன்றதொரு பொருளாதார வீழ்ச்சிதான் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் கிழக்கின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்பட்ட நாடுதான் லெபனான் ஆகும். பின்பு அங்கு பல யுத்தங்கள் நடைபெற்றது. அப்படிப்பட்ட நாடு கடந்த 2019 இல் இருந்து பாரிய பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டது. லெபனான் நாணயத்தின் பெறுமதி எழுபது வீதம் வீழ்ச்சியடைந்ததுடன், ஒரு டொலருக்கு சுமார் ஐயாயிரம் லெபனான் நாணயமாக சரிந்தது.

அங்கு பொருட்களின் விலைகள் உயர்ந்தது. மின்சாரம் இல்லை, கேஸ், டீசல், பெற்றோல் போன்ற எரிபொருட்களுக்கு மிகவும் தட்டுப்பாடுகள் நிலவியது. லெபனானில் உள்ள ஈரானிய ஆதரவுபெற்ற இயக்கமான ஹிஸ்புல்லாஹ் இயத்தினர்களின் வாகன நடமாட்டத்துக்கும் எரிபொருள் இல்லை. பொருட்களின் கொள்வனவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருக்க வேண்டி ஏற்பட்டது. இருபத்தி ஐந்து வீதமானவர்கள் தொழில் இழந்தார்கள். பல தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டது.

இந்த நிலையில் பொருளாதார வீழ்ச்சியை முன்கூட்டியே தடுக்க தவறிய ஊழல் அரசுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராடியதுடன், அரச கட்டிடங்களுக்கும், சொத்துக்களுக்கும் தீ வைத்து எரித்தனர். இதனை தடுக்கும் பணியில் இராணுவம் ஈடுபட்டபோது இராணுவத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் திரும்பியது. இதனால் நாடு முழுவதிலும் வன்முறைகள் தொடர் போராட்டமாக வெடித்தது.

பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதற்கு முன்பாக அதனை தடுப்பதற்கான வழிவகைகளை அரசு எடுக்கவில்லை என்பதுதான் போராட்டக்காரர்களின் பிரதான குற்றச்சாட்டாக இருந்தது. இதனால் பல அமைச்சர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்தார்கள்.

இந்த நிலையில் ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தினரின் வேண்டுகோளுக்கு அமைவாக லெபனானுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு ஈரான் முன்வந்தது. ஈரான் மீது அமெரிக்காவின் அழுத்தமான பொருளாதார தடைக்கு மத்தியில் பல கப்பல்கள் மூலம் ஈரான் லெபனானுக்கு எரிபொருட்களை தொடர்ந்து அனுப்பியது. அத்துடன் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளும் பண உதவி செய்தது.

இவ்வாறான உதவிகள் மூலம் லெபனான் மூச்சுவிட ஆரம்பித்தது. லெபனானில் ஏற்பட்டது போன்றதொரு நிலைதான் இன்று எமது நாட்டிலும் ஏற்பட்டுள்ளது. அப்படியிருந்தும் எமது நாட்டுக்கு உதவி செய்வதற்கு எவரும் முன்வரவில்லை.

கடந்த காலங்களில் அரபு நாடுகள் எமது நாட்டுக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளது. ஆனால் இன்றைய ராஜபக்ச அரசு முஸ்லிம் விரோத போக்கினை கொண்டுள்ளதனாலும், இனவாதத்தை மூலதனமாகக்கொண்டு ஆட்சியை கைப்பற்றிய காரணத்தினாலும், இஸ்லாமிய மார்க்க விடயங்கள், ஜனாஸா எரிப்பு போன்ற காரணங்களினால் அரபு நாடுகளுக்கு ராஜபக்ச அரசுமீது அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. (இங்கே உதவி என்று வட்டிக்கு பெறுகின்ற கடனை குறிப்பிடவில்லை)

அதுமட்டுமல்லாது ராஜபக்ஸ அரசாங்கமானது சீனா என்னும் உற்ற நண்பருடன் தேனிலவு கொண்டாடுவதன் காரணமாக அமெரிக்கா உற்பட மேற்கு நாடுகள் எதுவும் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்ட முன்வரவில்லை.

எனவேதான் சீனா என்னும் நண்பனுக்காக அனைத்தையும் இழந்ததனாலேயே எமது நாடு இன்று உதவிக்கு யாருமின்றி தனிமைப்பட்டு நிற்கின்றது. வட்டிக்கு வழங்குகின்ற பணத்தில் ஒரு பகுதியை கொள்ளையடிக்கின்றபோது அவைகளை சீனா கண்டுகொள்வதில்லை என்பதனாலேயே சீனாவுக்காக நாங்கள் அனைத்தையும் தாரைவார்த்து கொடுத்துள்ளோம். இதனால் ஆட்சியாளர்கள் பண முதலைகளாகவும், குடிமக்கள் பிச்சைக்காரர்களாகவும் மாறியுள்ளனர். இதுவும் இன்றைய ஆசியாவின் ஆச்சர்யமாகும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :