இடைக்கால அரசு அமைந்தால்; வெளியில் இருந்து ஆதரவை வழங்கும் முடிவையே ஐக்கிய மக்கள் சக்தி எடுக்கும்?



ஆர்.சனத்-
அரசமைப்பு மறுசீரமைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல்.

‘21’ ஐ இறுதிப்படுத்த ஐவரடங்கிய உப குழு நியமனம்.

இடைக்கால அரசுக்கு சஜித் கடும் எதிர்ப்பு - ஐக்கிய மக்கள் சக்தி மூன்று நிபந்தனைகள் விதிப்பு.

அரசின் ‘113 இற்கு 4 ஆம் திகதி பலப்பரீட்சை.

ராஜபக்சக்கள் அல்லாத மொட்டு கட்சி உறுப்பினரை பிரதமராக்க 11 கட்சிகளின் கூட்டு இணக்கம்.

னாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் சர்வக்கட்சி இடைக்கால அரசு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்கும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் கூட்டணிக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஓரணியில் திரண்டு ஆதரிப்பதற்கு இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டாலும், இடைக்கால சர்வக்கட்சி அரசு அமைப்பது சம்பந்தமாக இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
 
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, கயந்த கருணாதிலக்க மற்றும் எஸ்.எம். மரிக்கார் ஆகியோரும்,சுயாதீன அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, தயாசிறி ஜயசேகர , டிரான் அலஸ் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். கொழும்பிலுள்ள டிரான் அலஸின் அலுவலகத்திலேயே கலந்துரையாடல் இடம்பெற்றது.
 
இதன்போது அரசுக்கு எதிராக முன்வைக்கப்பட்டவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையின் உள்ளடக்கங்கள் பற்றியும், மேலதிகமாக உள்வாங்கக்கூடிய விடயங்கள் சம்பந்தமாகவும் முதலில் ஆராயப்பட்டுள்ளன.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தற்போதுவரை 115 எம்.பிக்களின் ஆதரவு இருப்பதாகவும், அரசு பதவி விலகாவிடின் எதிர்வரும் 03 ஆம் திகதி சபாநாயகரிடம் அப்பிரேரணை கையளிக்கப்படும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.
 
“ அரசுக்கான ஆதரவையும் நாம் பரீசிலித்து பார்க்க வேண்டும், எனவே எதிர்வரும் 04 ஆம் திகதி நடைபெறும் பிரதி சபாநாயகருக்கான தேர்வில் 11 கட்சிகளின் சார்பிலும் வேட்பாளராக ஒருவரை நிறுத்த திட்டமிட்டுள்ளோம்.” - என்று சுயாதீன அணிகளின் உறுப்பினர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.
பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர் முன்மொழியப்படுமானால் இரகசிய வாக்கெடுப்புமூலமே தேர்வு நடக்கும். அன்றைய தினம் இரு தரப்புக்கும் பலப்பரீட்சையாக அமையும். இத்தேர்வில் ஆளுங்கட்சி வேட்பாளர் மண்கவ்வினால் அது அரசுக்கு பெரும் பின்னடைவாக அமையும்.
 
அடுத்ததாக சர்வக்கட்சி இடைக்கால அரசு பற்றியும் பேசப்பட்டது. ராஜபக்சக்கள் அல்லாத அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மொட்டு கட்சி உறுப்பினர் ஒருவரே பிரதமராக தெரிவாக வேண்டும், கட்சித் தலைவர்களின் பொது இணக்கப்பாட்டுடன் பிரதமரை தெரிவு செய்ய வேண்டும் என சுயாதீன உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
 
சர்வக்கட்சி அரசில் இணைவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி முடிவெடுக்கவில்லை எனவும், வெளியில் இருந்துகொண்டு ஆதரவு வழங்குவது பற்றியும் ஆராயப்படுகின்றது எனவும் சஜித் அணி சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அத்துடன், இடைக்கால அரசு அமைந்தால் நிச்சயம் மூன்று விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற விடயத்தையும் சஜித் அணி பட்டியலிட்டு காட்டியுள்ளது.

1. இடைக்கால அரசு அமைந்த கையோடு 21 ஐ அமுல்படுத்துதல்.

2. நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை தீர்க்க விசேட பொறிமுறையை ஏற்படுத்தல்.
 
3. அரசியல் ஸ்தீரத்தன்மை ஏற்பட்டு, பொருளாதார நெருக்கடி தீர்ந்த கையோடு புதிய அரசை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை மக்களுக்கு வழங்க வேண்டும். அதாவது பொதுத்தேர்தக்கு செல்ல வேண்டும்.
 
மேற்படி மூன்று விடயங்களுக்கு சுயாதீன அணிகளின் சார்பில் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.
 
இடைக்கால அரசுக்கு சஜித் எதிர்ப்பு
" மக்களின் ஏகோபித்த கோரிக்கையை புறந்தள்ளிவிட்டு, இடைக்கால அரசில் ஐக்கிய மக்கள் சக்தி இணையாது. இடைக்கால அரசு என்பது கண்துடைப்பு நாடகமாகும்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று அறிவித்தார்.
 
" தற்போதைய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மொட்டு கட்சி உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் ஆட்சிக் கட்டமைப்பில் ஐக்கிய மக்கள் சக்தி இணையாது. நான் கட்சி தலைவராக இருக்கும்வரை அதற்கு இடமளிக்கமாட்டேன்.
ஜனாதிபதி கோத்தா வீடு செல்ல வேண்டும், பிரதமர் உள்ளடங்களான அரசு பதவி விலக வேண்டும் என்பதும், கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீளப்பெறப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும். இந்த ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மொட்டு கட்சியினருடன் இணைந்து ஆட்சி அமைக்குமாறு மக்கள் கோரவில்லை. அவ்வாறு ஆட்சி அமைத்தால் கொள்ளையர்களை பிடிக்க முடியுமா? 2015 இல் ஏற்பட்ட நிலைமையே ஏற்படும்.
 
தூய்மையற்ற இடைக்கால அரசில் எமது கட்சி, கூட்டணி அங்கம் வகிக்காது. கள்வர்களுடன் ஆட்சி அமைக்குமாறு பெரும்பாலானவர்கள் கோரினால், பதவிகளை துறந்துவிட்டு நான் வீடு செல்வேன். கள்வர்களுடன் 'டீல்' அரசியல் நடத்த நாம் தயார் இல்லை. " - என்று சஜித் பிரேமதாச திட்டவட்டமாக அறிவித்தார்.
 
சஜித்தின் அறிவிப்பை பார்த்தால், இடைக்கால அரசு அமைந்தால்கூட, வெளியில் இருந்து ஆதரவை வழங்கும் முடிவையே ஐக்கிய மக்கள் சக்தி எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
21 குறித்து ஆராய அமைச்சரவை உபகுழு!
அரசமைப்பின் 19 மற்றும் 20 ஆவது திருத்தச்சட்டங்களில் உள்ள சிறப்பம்சங்களை உள்ளடக்கிய வகையில் 21ஆவது திருத்தச்சட்டத்தை முன்வைக்குமா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
 
புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில், ஜனாதிபதி மாளிகையில் நேற்றிரவு நடைபெற்றது.
இதன்போது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை பலப்படுத்திய 20 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கிவிட்டு, 19 ஐ திருத்தங்கள் சகிதம் செற்படுத்துவதற்னான யோசனையை பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்வைத்துள்ளார்.
 
21 ஆவது திருத்தச்சட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி இருந்தாலும், 20 ஐ முழுமையாக இல்லாதொழிப்பதற்கு அவர் உடன்படவில்லை என தெரிகின்றது. 19 மற்றும் 20 ஆகிய இரண்டிலும் உள்ள சிறப்பம்சங்களை உள்ளடக்கிய வகையில் 21 ஐ முன்வைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

எதிரணிகளால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் தொடர்பிலும் ஆராய்ந்து, 21 ஆவது திருத்தச்சட்ட விவகாரத்தைக் கையாள்வதற்குஅமைச்சரவை உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான அலி சப்ரி, தினேஷ் குணவர்தன, ஜி.எல். பீரிஸ், டக்ளஸ் தேனாந்தா மற்றும் ரமேஷ் பத்திரண ஆகியோர் அந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவால் தயாரிக்கப்படும் யோசனையே நாடாளுமன்றத்தில், சட்டமூலமாக முன்வைக்கப்படும்.
 
அதேவேளை, பிரதமருக்கு ஆதரவு தெரிவித்து 124 எம்.பிக்கள் கையொப்பம் இட்டுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச பதவி விலகாவிட்டால், நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :