நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க வேண்டுமாயின் ஆட்சி பொறுப்பை ஏற்க தான் தயாராக இருப்பதாகவும், அவ்வாறு ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டுமெனில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை முழுமையாக நீக்கப்பட வேண்டுமெனவும் எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சொல்லியிருப்பது வேலைக்கள்ளிக்கு பிள்ளைச்சாட்டு போன்றதாகும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் கலாபூஷணம் முபாறக் அப்துல் மஜீத் சாடியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, சஜித் பிரேமதாசவும் அமைச்சராக இருந்த அரசாங்கமே கடந்த அரசாக இருந்தது. ஆரம்பத்தில் மைத்திரி தலைமையிலான கட்சியும் இணைந்த தேசிய அரசாங்கம் இருந்த போது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு அதிகாரம் இருந்தது. இந்த அதிகாரத்தை பயன் படுத்தி 19வது சட்டத்தை கொண்டுவந்தவர்களால், உள்ளூராட்சி தேர்தலில் தோல்வியுற்ற பெண்களையும் வலுக்கட்டாயமாக சபைக்கு அனுப்ப வேண்டும் என்ற ஜனநாயகத்துக்கு முரணான சட்டத்தை கொண்டு வந்தவர்களால் ஏன் நிறைவேற்று அதிகாரத்தை நீக்க முடியவில்லை?
ஆகக்குறைந்தது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான பிரேரணை ஒன்றையாவது பாராளுமன்றத்தில் முன் வைத்திருக்கலாம். அவற்றை செய்யாது இப்போது கண்கெட்டபின் ஞானம் வந்தது போன்று சஜித் பிரேமதாச பேசுகிறார். இன்றைய நெருக்கடியை தீர்ப்பதற்கான ஆற்றல் இருக்குமாயின் சஜித் பிரேமதாச கட்சியினர் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று அரசை பாரமெடுத்து நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பிக் காட்டினால், டொலர், டீசல் தட்டுப்பாட்டை நீக்கி காட்டினால் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கவும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்கும் நிலை வரும்.
ஆகவே நிறைவேற்று ஜனாதிபதி முறையை திடீரென ஒழிப்பதாயின் பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்பதால் நாட்டு மக்கள் பசியால் தத்தளிக்கும் போது இதில் காலம் கடத்துவது பொருத்தமானதல்ல என்பதால் சஜித் பிரேமதாசவினால் 113 பேரை பாராளுமன்றத்தில் காட்ட முடியுமென்றால் அரசை பாரமெடுத்து செய்து காட்ட வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment